வடமாகாண முஸ்லிம், இனச்சுத்திகரிப்புக்கு 25 வருடங்கள்
பேரினவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமுமே, 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான இலங்கையின் பிரதான பிரச்சனையென்று முதன்மைப்படுத்தி பேசுபவர்கள் இலங்கையின் எல்லா இன மக்களின் மீதும் கரிசனை கொண்டவர்களல்ல. அத்துடன் இவர்கள் சுதந்திரமடைய முன்னர் (பிரித்தானியக் காலனியாதிக்கத்தில்) நிலவிய மக்களுக்கிடையேயான பிணக்குகள், முரண்பாடுகள் பற்றி முழுமையாக ஆராய்ந்தும் பார்ப்பதில்லை. அதாவது அக்காலத்தில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லீம் இனவன்செயல்கள் மற்றும் சாதிக்கலவரங்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் திருப்பித்திருப்பி சொல்வதெல்லாம், 1956 ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் 1958, 1977, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த தமிழ்-சிங்கள இனவன்செயல்கள், சிங்களக்குடியேற்றம், தரப்படுத்தல், கடைசியாக 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் என்பனவேயாகும். இவற்றினை வரிசைப்படுத்துவதோடு நிறுத்தாது, இவையெல்லாவற்றிற்கும் இலங்கை (சிங்கள) அரச தரப்பினரை ஒரேயடியாகக் குற்றஞ்சாட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட பாரிய அரசியல் தவறுகள்பற்றி ஒருபோதுமே வாய்திறந்து பேசியது கிடையாது.
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பாகிய, வடமாகாணத்திலிருந்து புலிகளால் ஆயத முனையில் 75000 மேற்பட்ட முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகின்றன. புலிகளின் இந்த இனச்சுத்திகரிப்பு, 1990 ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றுவதில் ஆரம்பித்தது. பின்னர் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் இது முடிவுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுவதற்கு அவர்களுக்கு 2 மணித்தியால அவகாசமே வழங்கப்பட்டது. வெறும் அந்த 2 மணி நேரத்தில் தங்களால் முடிந்த பெறுமதிமிக்க பொருட்களை பொட்டலங்களாகக்கட்டி அவர்கள் எடுத்துச்செல்ல முற்பட்டபோது, புலிகள் அதனை அனுமதிக்கவில்லை. அத்துடன் முஸ்லீம் பெண்கள் அணிந்திருந்த சகல நகைகளும் உருவி எடுக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் 150 ரூபாய் பணமும் ஒரு மாற்று உடுப்புமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியமர்ந்தார்கள். மேலும் ஒரு பகுதியினர் வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு, அனுராதபுரம், குருநாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள். 1996 ஆண்டில் யாழ்ப்பாணம் இலங்கை அரச படைகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட போதும் 2009இல் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் வடமாகாணத்தில் எதுவித அச்சமின்றி முஸ்லீம்கள் மீளக்குடியேறும் நிலை உருவாகியுள்ளது.
இந்த இனச்சுத்திகரிப்பு நடப்பதற்கு இருமாதங்களின் முன்னர், புலிகள் காத்தான்குடி (03.08.1990), ஏறாவூர் (11.08.1990) பள்ளிவாசல்களில் புகுந்து காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை நடத்தினார்கள். கிழக்குமாகாணத்தில் புலிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த பள்ளிவாசல்களில் நடந்த படுகொலைகளுக்கும் வடமாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் காரணம் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் கிழக்குமாகாணத்தின் அப்போதைய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் மேற்பார்வையிலேயே வடமாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 5 வருடங்களின் பின்னர், புலிகள் யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் வாழ்ந்த மக்களை வெளியேற்றியதும் மறக்கக்கூடியதல்ல. 1995 ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் கைப்பற்ற முயலுகையில், வன்னியை நோக்கிய இடப்பெயர்வை திட்டமிட்ட புலிகள், மக்களிடையே பீதிப்புரளியைப் பரப்பி, பல இலட்சக்கணக்கான மக்களை ஒக்டோபர் 30ந் திகதி மனிதக்கேடயங்களாக கால்நடையாக தென்மராட்சி நோக்கி அழைத்துச் சென்றார்கள்.
வடக்குக்கிழக்கில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் மிகக்கொடூரமான நடவடிக்ககைகள் பலவற்றை செய்தபோதும், முஸ்லீம்கள் ஒருபோதுமே சாதாரண தமிழர்கள்மீது விரோதம் பாராட்டியதில்லை. அதற்கு காரணம் தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சகல அநீதிகளுக்கும் புலிகளே காரணம் என்பதில் அவர்கள் தெளிவாகவுள்ளார்கள். ஆனாலும் வடக்குக்கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களைப்போலவே, சரியான அரசியல் கருத்துக்களை முன்வைத்து தங்கள் மக்களுக்காக அணிதிரளாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான அவர்களது பாராளுமன்ற அரசியல் தலைமைகள் எப்போதுமே ஐக்கிய தேசியக்கட்சி சார்பு நிலையே எடுத்து வருவதால், பெரும்பாலான முஸ்லீம்கள் ஐ.தே.கவை ஆதரிப்பவர்களென்ற தோற்றப்பாடே இருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழர் தரப்பில் ஒலித்துக்கொண்டிருக்கும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையில், முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது சேர்க்கப்பட வேண்டும் என்பது பலமாக எழாதது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
Thanks to manikkural
Post a Comment