Header Ads



நடுக்கடலில் தத்தளித்த 242 அகதிகள் மீட்பு, 38 பேரைக் காணவில்லை


அகதிகளை ஏற்றி வந்த படகு ஏஜியன் கடலில் கவிழ்ந்ததையடுத்து, வெள்ளத்தில் தத்தளித்த 242 பேர் கிரீஸ் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.

 நடுக் கடலில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் 38 பேரைக் காணவில்லை.   இது தொடர்பாக கிரீஸ் கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது,

 சுமார் 300 அகதிகளை ஏற்றி வந்த பெரிய மரப் படகு ஏஜியன் கடலில் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த அகதிகள் குறித்து ரோந்து ஹெலிகாப்டர் மூலம் தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல் படையின் படகுகள் அந்தப் பகுதிக்கு விரைந்தன.

 மேலும் ஐரோப்பிய கடலோரக் காவல் அமைப்பான ஃபிரான்டெக்ஸ் அந்தப் பகுதிக்குத் தங்களது ஹெலிகாப்டர் ஒன்றையும் மீட்புப் படகுகளையும் அனுப்பியது.  மேலும் அந்தப் பகுதியில் இருந்த மீன்பிடிப்புப் படகுகளும் மீட்புப் பணியில் உதவின. கொந்தளிப்பு நிறைந்த கடலில் இரவு முழுவதும் நடத்திய தேடுதல் பணியைத் தொடர்ந்து 242 பேர் மீட்கப்பட்டனர்.

 மீட்கப்பட்ட அகதிகள் கிரீஸின் லெஸ்போஸ் தீவில் உள்ள மோலிவோஸ் என்கிற சிறிய துறைமுக நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   மீட்கப்பட்டோருக்கு அங்கிருந்த தேவாலயத்தில் முதலுதவி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அகதிகளில் குறிப்பாகப் பெண்கள் இரவு நேரத்தில் கடும் குளிரில் நடுக்கடலில் தத்தளித்ததால் ஹைப்போதெர்மியா பாதிப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 18 பேர் சிறுவர்கள். இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கவிழ்ந்த படகில் இருந்த அகதிகளின் சரியான எண்ணிக்கை குறித்து குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால் எவரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்று மேலும் தெரிவித்தனர். 

 மீட்கப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே, ஏஜியன் கடல் பகுதியில் அகதிகளை ஏற்றி வந்த படகுகள் சனிக்கிழமை கவிழ்ந்த பல்வேறு விபத்து சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது என கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இராக், சிரியா ஆகிய நாடுகளிலிருந்து துருக்கி வந்து, பின்னர் மத்தியதரைக் கடல், ஏஜியன் கடலைக் கடந்து, கிரீஸ் வழியாகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் புகலிடம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணத்தை சாதாரண மரப் படகுகள், ரப்பர் படகுகளில் அகதிகள் மேற்கொள்கின்றனர்.

 மேலும், அகதிகளிடமிருந்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு, மிக அதிக எண்ணிக்கையில் ஆள்களை ஏற்றி வரும் படகுகள் அடிக்கடி நடுக்கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற அபாயகரமான முறையில் அகதிகள் ஐரோப்பாவை அடைகின்றனர். 

 இந்த ஆண்டு மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள், இராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.