தூசனம் பேசிய கோத்தாவுக்கு, பாடம் புகட்டிய விக்டர் ஐவன் (பகுதி 1)
-நஜீப் பின் கபூர்-
கடந்த வாரம் விக்டர் ஐவனின் கட்டுரையைத் தமிழாக்கம் செய்து விவகாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. என்றாலும் இந்தக் கட்டுரைக்கு வாசகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை எனக்குப் பல வழிகளில் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த வாரமும் பல புதிய அரசியல் அதிரடியான தகவல்களை ஐவன் தனது 25.10.2015 கட்டுரையில் சொல்வதால், அவர் கூறுகின்றபடி அடுத்த வாரம் வரை கடைசிக் கட்டுரையையும் தமிழாக்கம் செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றேன்.
ஒரு அரசியல்வாதி-பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு அமைச்சரின் ஊடகத்துறையில் பணியாற்றுவது எடுபிடி வேலைகளைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதி அரசியல்வாதிக்கு சேர்.! போட்டு அவர் பின்னால் ஓடித்திரிவதையெல்லாம் ஒரு பெருமையாக விளம்பரப்படுத்திக் கொள்கின்ற ஊடகக்காரர்கள் - மற்றும் ஊடகம் என்ற அரிச்சுவடி கூடத் தெரியாத அமைச்சர்களின் ஊடகச் செயலாளர்கள் இருக்கின்ற நமது நாட்டில், அரசியலில் நீரோட்டத்தில் ஒரு ஊடகக்காரன் எப்படி எல்லாம் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முடியும் என்பது விக்டர் ஐவன் கதையாக இருப்பதால், அவர் கட்டுரையைத் தமிழாக்கம் செய்வதில் இனம் புரியாத ஒரு சுகமும் தெரிகின்றது.
அவரது கட்டுரைகள் நீண்டதாக இருப்பதால் அதில் விரும்பியோ விரும்பாமலோ சில அறுவைகளைப் பண்ண வேண்டிய ஒரு நிலையும் இருக்கின்றது. 2015.10.25 ராவயவில் விக்டர் ஐவன் என்ன சொல்லி இருக்கின்றார் என்று பார்ப்போம். பொதுவாக தேர்தல் முடிவுகளை தூங்காமல் நின்று பார்ப்பது எனது வழக்கம் அல்ல. அதிகாலை 3.30 - 4.00 அளவில் எழுந்து தொலைக் காட்சி முன் நின்றால் என்ன நடந்திருக்கின்றது! வெற்றி வாய்ப்புக்கள் யார் பக்கம் என்று புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
2010 ஜனாதிபதித் தேர்தலிலும் இதே விதமாக இருந்தேன். அதன்படி மஹிந்தவுக்கு சுலபமான வெற்றி என்பது எனக்குப் புரிந்தது. காலை ஆறு மணியளவில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்துத் தெரிந்து கொள்வதற்காக கரு ஜெயசூரியவை கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
ஜெனரல் பொன்சேக்கா நிலை!
அப்போது எனக்கு உடல் புள்ளரிக்கின்ற தகவல் ஒன்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஜெனரல் பொன்சேக்காவும் அவருக்கு உதவி புரிந்த அரசியல் தலைவர்களும் அன்று இரவு தங்கி இருந்த கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றார்கள். எங்களுடன் இரவு தங்கி இருந்தவர்கள் அனைவரும் போல் ஹோட்டலில் இருந்து வெளியேறி விட்டார்கள். இந்த நேரத்தில் பொன்சேக்காவை தனியாக விட்டு விட்டுப்போக முடியாததால் நான் அங்கு இன்னும் தங்கி இருக்கின்றேன். பொன்சேக்காவை கைது செய்யக் கூடிய ஒரு நிலை இங்கு காணப்படுக்கின்றது என்றார் கரு.
அந்தக் கதையுடன் ஜனாதிபதியுடன் இது பற்றிப் பேசினீர்களா என்று நான் கேட்டேன். அவருடன் கதைப்பதை நான் விரும்பவில்லை. என்ன நடக்கின்றது என்பதனைத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர் சிறுபிள்ளையா என்று என்னிடம்; கேட்டதுடன், முடியுமானால் எனக்கு பேசிப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். கருவின் இந்தக் கதையைக் கேட்டு நான் திக்குமுக்காடிப்போனேன். முன்பு பொன்சேக்கா தோற்றதன் பின் அவர் கழுத்தைப் பிடிப்பேன் என்று கூறித்தானே இருந்தார் மஹிந்த.! எப்படி இந்த நிலையில் அவருடன் பேசுவது?
அத்துடன் இன்று அவரது பிறந்த தினம். என்றாலும் எப்படியும் இது விடயத்தில் எனது எதிர்ப்பை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. ஜனாதிபதி அருகில் நிற்கின்ற எனக்குத் தெரிந்த பலருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாலும் அவர்கள் தங்களது கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்திருந்ததால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்படி நான் முயன்று கொண்டிருக்கின்றபோது காஞ்சன ரத்வத்தையை இணைப்பில் பிடித்துக் கொள்ள முடிந்தது. அவரை எனக்கு நெடுநாளாகத் தெரியும். அத்துடன் இப்போது அவர் மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றார்.
அவரிடத்தில் வெற்றி வெறியில் பைத்தியம் விளையாடுவது தொடர்பாக எனது கடுமையான விசனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசியை ஜனாதிபதியிடம் கொடுக்கவா என்று அவர் என்னிடத்தில் கேட்டார் எனது எதிர்பார்ப்பும் அதுதான்.!
அப்போது மறு முனையில் ஜனாதிபதி..!
நான் ஜனாதிபதியா என்று கேட்க என்ன விக்டர் என்று அவர் என்னிடத்தில் கேட்டார். கிடைத்த வெற்றியைக் கொண்டு தோல்வியடைந்தவரை நெருக்குதலுக்கு ஆளாக்குவதான் மூலம் நீங்கள் கொடுக்கும் வழிகாட்டல்-எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டேன். எனது கேள்விக்கு வேகமாகப் பதில் வழங்கிய ஜனாதிபதி, தேர்தல் தினத்தன்று பொன்சேக்கா பல இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பேசி அச்சுறுத்தி இருந்தார். இதனால் அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் எனக்கு இருக்க முடியாது என்றாலும் பொன்சேக்காவைக் கைது செய்யும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று கூறியதுடன், உடனடியாக அவருக்கு ஹோட்டலில் இருந்து வெளியேறும்படி கூறவும் என்று, என்னிடத்தில் கேட்டுக் கொண்டார்.
இந்தத் தகவலை சொல்வதற்கு நான் பலமுறை முயன்றாலும் கருவையோ, பொன்சேக்காவையோ என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் அவர்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு இந்தத் தகவலைக் கொடுத்தேன். பகல் வேளையாகும் போது அவர்கள் அங்கிருந்து வெளியேறி இருக்கின்றார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டேன். அன்று பொன்சேக்கா கைது செய்யப்படா விட்டாலும் பின்னர் கைது செய்யப்பட்டு முடியுமான மட்டும் அவரை மஹிந்த பலி வாங்கினார். இதன் மூலம் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் அவர் கொடூரமாக நடந்து கொள்ள முயல்வது தெரிந்தது.
சேலான் வங்கி விவகாரம்
சேலான் வங்கி நெருக்கடி பற்றி எனக்கு நன்கு தெரிந்த ஒரு வங்கியாளர் சில தகவல்களைச் சொல்லி இருந்தார். இது பற்றி நான் தேடிப் பார்த்த போது வங்கிகளுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்படப்போகின்றது என்று எனக்குத் அறிந்து கொள்ளக் கிடைத்தது.
இந்த விடயங்களைத் துல்லியமாக அறிந்து கொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேலன் வங்கியை அரசு கையேற்பதுதான் சேதத்தில் இருந்து தப்புவதற்கான ஒரே மார்க்கம் மிக விரைவாக அந்த நடவடிக்கைக்குச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது எனது பேச்சை அவர் நிதானமாக செவிமடுத்தார். ஒரு சனிக்கிழமை நான் அவருடன் இது பற்றிப் பேசினேன். திங்கற் கிழமை காலை நான் காரியாலயத்துக்குச் செல்லும் போது வங்கியை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. இந்த விடயத்தில் மஹிந்த எவ்வளவு விரைவாக செயலாற்றி இருக்கின்றார் என்பது எனக்குப் புரிந்தது.
உதவி புரிதல்
ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு பெரும் பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. எனது மகன் காலி ரிட்ச்மன் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த நாட்களில் நான் ராவய பத்திரிகையில் எழுதிய ஒரு செய்திக்காக அவர் அந்தக் கல்லூரி அதிபரால் மகன் பலி வாங்கப்பட்டார். அப்போது அவர் உயர்தர இறுதியாண்டு மாணவனாக இருந்தது மட்டுமல்லாது பல தடவைகள் பாடசாலைக்காக செஷ் போட்டியில் தேசிய மட்டச் சம்பியன் பட்டத்தை வெற்றி பெற்றுக் கொடுத்தவராகவும் இருந்தார். இந்த அதிபர் தொல்லைகளால் அவருக்கு அங்கு கல்வியைத் தொடர முடியாமல் போனது. இதனால் அவர் தனது உயர் தரப் பரீட்சையை எழுத முடியாமல், முழு நேர செஷ் விளையாட்டு வீரராக தன்னை மாற்றிக் கொண்டார். சில வருடங்கள் கழிந்து அவர் மீண்டும் உயர் பரீட்சைக்குத் தோற்றி சகல பாடங்களிலும் அதி விஷேட சித்தியைப் பெற்றிருந்தார்.
தனது உயர் கல்வியை வெளி நாட்டில் தொடர அவர் விரும்பினார். அதற்காக அவர் தெரிவு செய்த நாடு நியூசிலாந்து. அவருடைய நோக்கத்துக்குக் குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை. அவருடைய கல்விக்குத் தேவையான பணத்தை என்னால் செலவு செய்ய முடியுமாக இருந்தாலும் முழுத் தொகையையும் ஒரேயடியாக செலவு செய்ய முடியாத நிலை. எனது பொருளாதார நிலையை மகனுக்குத் தெரியப்படுத்தவும் நான் விரும்பவில்லை.
அவரது உயர் கல்விக்கு 4 மில்லியன் ரூபாய்கள் தேவையாக இருந்தது. எனவே எனது வீட்டை அடமானம் வைக்கின்ற முயற்சியில் அப்போது நான் இறங்கி இருந்தேன் இது பற்றி கேள்விப்பட்ட மஹிந்த என்னைத் தொடர்பு கொண்டு உதவி செய்ய முன்வந்தார். இதன் மூலம் அவர் என்னை விலைக்கு வாங்க முயன்றார் என்று நான் குறிப்பிட விரும்ப வில்லை. அவர் ஒரு நல்ல நோக்கில்தான் எனக்கு உதவி புரிய நாடினார் என்பது எனது கருத்து என்றாலும். எனது தொழில் ரீதியான தனித்துவத்துக்கு இதனால் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதனால் நான் அவரது உதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடரும்..
Post a Comment