இந்திய 'றோ' வுடன் எனக்கு, தொடர்பிருந்தால் நிரூபியுங்கள் - UPFA எம்.பி. சவால்
இந்திய றோ புலனாய்வுப் பிரிவு அல்லது இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் தனக்கு தொடர்பிருந்தால் அதனை நிரூபிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் உள்ள அரசியல் பீட கேட்போர் கூடத்தில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் றோ புலனாய்வு சேவை ஆகியவற்றுடன் நான் தொடர்பு வைத்துள்ளதாக பொய்யான தகவலை வெளியிட்டு எனக்கு அவமதிப்பை ஏற்படுத்தியமைக்காக பேராசிரியர் நளின் டி சில்வாவிடம் இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளனேன்.
இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, சட்டத்தரணி நாமல் ஜயந்த சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் றோ புலனாய்வு சேவையின் உறுப்பினர் ஒருவர் இடம்பெற்றிருப்பதால், தான் அதில் இருந்து விலகிக் கொண்டதாக பேராசிரியர் நளின் டி சில்வா, பொதுத் தேர்தல் நேரத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment