அஷ்ரபை 'கொன்றவர்கள்'
-ஏ.எல்.நிப்றாஸ்-
இன்றைய நாட்களில்; மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அதிகமதிகம் நினைவு கூரப்படுகின்றார். செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர வளாகத்தில் மொழுகுவர்த்தி ஏற்றுவதற்கும், அஷ்ரஃபை கொன்றுவிட்டு – செப்டெம்பர் 16ஆம் திகதி மட்டும் அவரை நினைவு கூருவதிலும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை!
எந்தெந்த விடயங்களில் அஷ்ரஃபின் கனவு உயிர்ப்பிக்கப்பட வேண்டுமோ அந்தந்த விடயங்களில் அஷ்ரஃபை சாகடித்துவிட்டு, எவ்வாறான நேரங்களில் அவர் நினைவுக்கு வர வேண்டுமோ அப்போதெல்லாம் மறந்து விட்டு, தேர்தல் காலங்களிலும் செப்டம்பர் 16ஆம் மற்றும் ஒக்டோபர் 23ஆம் திகதியும் கத்தம் ஓதி சாப்பாடு போட்டு அவரைப் பற்றி நாலு வார்த்தை பேசிவிட்டுப் போனால்.... பணி இனிதே முடிந்தது என்று நினைக்கும் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரஃப் இரண்டு அடிப்படைகளில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று கருதலாம். ஒன்று – அவர் உடலியல் ரீதியாக மரணிக்கச் செய்யப்பட்டது அல்லது அதிலுள்ள மர்மத்தை துலக்காது விட்டமை. மற்றையது அவரது கொள்கைகளை கொன்றொழித்தமை.
சிங்கள ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அரசாங்கத்தின் முக்கிய அங்கமாகவும் மு.கா.வும் அதன் தலைவரும் ஏறுமுகத்தில் இருந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அந்த துரதிர்ஷ்டம் நேர்ந்தது. தன்னால் அதிகம் நேசிக்கப்பட்ட தமது கட்சியை அதிகமாக நேசிக்கும் மக்கள் வாழும் அம்பாறை மாவட்டத்தை நோக்கி ஹெலிகொப்டரில் சென்று கொண்டிருந்தபோது அரநாயக்க, ஊரகந்தை மலைத்தொடரில் மோதி அந்த ஹெலி விபத்துக்குள்ளானது. அல்லது அவ்வாறு சொல்லப்பட்டது. இச்சம்பவத்தில் தலைவர் அஷ்ரஃப் குழுவினர் உள்ளடங்கலாக 13 பேர் பரிதாபமாக உயிழந்தனர். ஒரு சகாப்தம் முடிந்துபோனது. முஸ்லிம்களின் ஒளிக்கீற்று ஒரு மலைத்தொடரில் தொலைந்து போனது. செப்டெம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவில் ஏற்படுத்திய அதிர்வுகளை விட செப்டம்பர் 16 இல் இடம்பெற்ற இவ்வனர்த்தம் முஸ்லிம்களிடையே ஏற்படுத்திய அதிர்வும் அதிர்ச்சியும் அதிகமானது எனக் கூறலாம்.
அஷ்ரஃபின் பிரிவுத் துயர் எங்கும் வியாபித்திருக்க, உடனடியாக செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இருந்தது. முதலாவது, தலைவரின் மரணத்தில் இருந்த மர்மத்தை துலக்குவது. இரண்டாவது, தலைவர் விட்ட இடத்தில் இருந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வது. இவ்விரண்டு விடயங்களையும் இரண்டாம்நிலை தலைவர்கள் சரியாக மேற்கொள்ளவில்லை.
அஷ்ரஃபின்; மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களிடையேயும் அது விடயத்தில் பாரிய சந்தேகம் ஏற்பட்டது. இது ஒரு கொலையாக இருக்க வேண்டுமென்ற மக்கள் பேசிக் கொண்டது இன்னும் ஞாபகமிருக்கின்றது. இதற்கு சில காரணங்களும் இருந்தன.
விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் அஷ்ரஃபின் பெயரும் இருந்ததாக சொல்லப்பட்ட பின்னணியில் அவருடன் ஹெலியில் பயணித்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது. இது புலிகளின் வேலை என்று சிலர் கூறினர். மறுபுறத்தில் இன்னுமொரு விடயம் இங்கு கவனிப்பிற்குரியது. அதாவது, வடக்கு கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகி அவர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவது சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு மட்டுமன்றி பெரும்பான்மை கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டிருந்த தெற்கின் சிறுபான்மை தலைவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த காலமது. எனவே இப்பின்னணியில் ஏதாவது சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இதனைவிட முக்கியமாக, சந்திரிகா அரசாங்கத்துடன் நல்லுறவை கொண்டிருந்தாலும் மரணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அஷ்ரஃப் சில காட்டமான அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். சிறுபான்மை மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்த அவர், சிங்கள ஆட்சிச் சூழலையும் நியாயபூர்வமாக விமர்சித்திருந்தார். அந்தவகையில் அஷ்;ரஃப் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து விடுவார் என்று எண்ணி ஆட்சியாளர்களே ஒரு விபத்தை திட்டமிட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளியாகி இருந்தன.
எனவே இது பற்றி புலனாய்வு விசாரணை நடாத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையான அழுத்தம் கொடுக்கும் என்று மக்கள் திடமாக நம்பினர். தமது தலைவனின் உயிரை விதி பறித்ததா? சதி எடுத்ததா? என்பதை அறிந்தால் ஒரு ஆறுதல் கிடைக்குமென போராளிகள் நினைத்தனர். இறைவனின் நாட்டத்தினாலேயே மரணம் நிகழ்கின்றது என்று நாம் நம்புகின்றோம். ஆதலால் அஷ்ரஃபின் மரணமும் இறைவனது எண்ணப்படியே நடந்திருக்கின்றது என்பதற்காக அச் சம்பவத்தை அப்படியே விட்டுவிடுவதை உலக நடைமுறை அனுபவங்களில் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பகிரங்கமாக விபத்துக்குள்ளாகி இறந்த ஒருவனுக்கே பிரேத பரிசோதனை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நடைமுறை இருக்கும் போது, பெருந்தலைவர் ஒருவர் விமான விபத்துக்குள்ளாகி இறந்தாரா, அல்லது விபத்தொன்று திட்டமிடப்பட்டதா என்று அறிந்து கொள்வதில் தப்பேதும் இல்லை. எனவே அப்பணியை மு.கா.வின் உறுப்பினர்கள் செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அது நடக்கவில்லை. மாறாக எரிகின்ற வீட்டில் எதையாவது பிடுங்கிக் கொள்வோம் என்ற தோரணையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவ பதவிக்காக ஆளுக்காள் அடித்துக் கொண்டனர். பாரிய இழுபறிக்குப் பின்னர் இணைத்தலைமைகளாக தலைவரின் துணைவியார் பேரியல் அஷ்ரஃபும் செயலாளராக பதவிவகித்த றவூப் ஹக்கீமும் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் தனித் தலைமையாக ஹக்கீம் பிரகடனப்படுத்தப்பட்டார். பேரியல் அஷ்ரஃப் நுஆ கட்சியை பாரமெடுத்தார். அதற்குப் பிறகு ஹக்கீமை தலைவராக தேர்ந்தெடுத்தவர்களே அவரது தலைமைமைத்துவம் சரியில்லை என்று கூறி கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சிகளை ஆரம்பித்தனர். கொதித்தெழுந்த மக்களை சமாளிப்பதற்காக அரசாங்கம் தன் பங்கிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டது. இருப்பினும் அவ் விசாரணையின் இறுதி முடிவு என்ன என்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதைத்தான் நான் 'கொலை' என்று கூற வருகின்றேன்.
அஷ்ரஃப் என்ற மாமனிதர் மேலே குறிப்பிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான தரப்பினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது நாம் எல்லோரும் நம்ப வைக்கப்பட்டிருப்பது போல் காலநிலை சீர்கேட்டினாலோ, ஹெலிகொப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவோ மரணம் நிகழ்ந்திருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆரம்பத்தில் கூறிய அப்போதைய மு.கா. இரண்டாம்நிலை தலைவர்கள் பின்னர் அதை அப்படியே மூடி மறைத்து விட்டமையும் அதற்கான காரணத்தை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தி மக்களுக்கு முன்வைக்காமையும் மிகப் பெரிய சமூகத் துரோகமாகும். அஷ்ரஃப் உடலியல் அல்லது பௌதீக ரீதியாக எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பதை இக்கட்டுரையில் நான் கூறவரவில்லை. மாறாக, அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் அவரது மரணத்தின் மீதான விசாரணையை, கொள்கையை, வழிகாட்டலை, அறிவுரைகளை எவ்வாறு கொன்றார்கள் என்பதையே குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒருவேளை அஷ்ரஃபின் மரணம் ஒரு கொலை என்றால் அதற்காக திட்டம் தீட்டியவர்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம். அந்த வகையில், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காதவர்களுக்கும் காரணம் இருக்குமாயின் இரண்டு தரப்பிற்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கின்றது? இவ்வாறு அவரது மரணத்தின் மீதான விசாரணையை கடைசிமட்டும் மேற்கொள்ளாமையே இவர்கள் செய்த முதலாவது கொலையாகும்.
கனிஷ்ட சட்டத்தரணியாக வந்து இணைந்து கொண்ட தனக்கு தலைமைத்துவ பதவி கிடைக்க வழிவகுத்த தலைமை என்பதற்காக றவூப் ஹக்கீம் நீதி விசாரணை ஒன்றை கோரியிருக்க வேண்டும். இணைப்பாளராக இருந்த தனக்கு எம்.பி. பதவி தந்து அழகுபார்த்தவர் என்பதற்காக அதாவுல்லா இந்த மர்மத்தை துலக்க பாடுபட்டிருக்க வேண்டும், தமக்கு அரசியல் முகவரி தந்த கட்சியின் தலைவர் என்பதற்காக றிசாட் பதியுதீன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். தனது அரசியல் நண்பர் என்பதற்காக சேகு இஸ்ஸதீன் இந்த விசாரணையை கோரியிருக்க வேண்டும். தனது முயற்சிகள் பலிக்காவிட்டால் அதற்கு யார் தடை என்பதை ஹசனலி வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவரது துணைவியார் பேரியல் அதை செய்திருக்க வேண்டும். இல்லை இல்லை எங்களுக்கு எல்லாம் தெரியும். அது நிச்சயமாக சத்தியமாக ஒரு விபத்து என்பதை நாம் உறுதிப்படுத்தி விட்டோம் என்று இவர்கள் சொல்வார்களானால், அதனை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஆனால் மேற்சொன்ன எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை.
சரி அதைவிடுங்கள்! மற்ற விடயங்களில் அஷ்ரஃப்பை பின்பற்றுகின்றார்களா என்று பார்த்தால் தற்போது அதிகாரம் இல்லாதிருக்கின்ற ஓரிருவரை தவிர வேறு யாரிடமும் இந்தப் பண்பை காணக்கிடைப்பதே இல்லை. 'கருத்து வேறுபாடு என்னும் காளான்கள் வந்து உங்கள் ஒற்றுமையைக் குலைத்துவிடும் கவனமாக இருங்கள்' என்று தலைவர் கூறியிருந்த போதிலும், பல கட்சிகளாக பிரிந்து செயற்பட ஆரம்பித்தமை தலைவரின் வழிகாட்டலை கொலை செய்த அடுத்த சந்தர்ப்பமாகும். சமூகத்திற்கான அபிவிருத்தி அரசியலையும் உரிமை அரசியலையும் சமாந்திரமான அஷ்ரஃப் முன்கொண்டு சென்றாh.; ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸோ அல்லது அஷ்ரஃபின் பாசறையில் படித்தவர்களோ இதில் ஏதாவது ஒன்றையே அரையும் குறையுமாக செய்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸாகவும் வேறு இரு காங்கிரஸ்களாகவும் தனித்தனி கட்சிகளை வைத்து அரசியல் செய்பவர்கள் தம்மை அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்தவர்களாக கூறிக் கொள்கின்றார்கள். ஆனால் இவர்களைப் பார்த்தால் அஷ்ரஃபின் பாசறையில் அரிச்சுவடி கூட கற்றிருப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது.
இவ்வாறு அஷ்ரஃபின் மரணம் குறித்த விசாரணையில் மாத்திரம் இவர்கள் தவறிழைக்கவில்லை. மாறாக, அவர்களது அடிப்படை கொள்கையை அச்சொட்டாக கடைப்பிடிப்பதில், இதயசுத்தியுடன் சேவையாற்றுவதில், மக்களை முதன்மைப்படுத்துவதில், ஒற்றுமையை கடைப்பிடிப்பதில், தைரியமாக செயற்படுவதில், பட்டம் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாத தன்மையில் என்று ஏகப்பட்ட விடயங்களில் தலைவரின் வழிமுறைகளை கொலை செய்து குழிதோண்டி புதைத்திருக்கின்றார்கள். மேடை ஏறினால் குர்ஆன், ஹதீஸ் என்று கூறுவதிலும், தலைவரின் சிஷ்யர்கள் என்று மார்தட்டுவதிலும் ஒன்றும் குறைச்சலில்லை.
அஷ்ரஃப் என்ற ஒரு அரசியல் தலைவன் இல்லை என்றால் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி இல்லாது போயிருக்கும். முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு அமைச்சு, அரை அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்திருக்காது, ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகூட கிடைத்திருக்காது. இன்று தலைமைப் பதவியில் அல்லது எம்.பி. பதவியில் அதிகாரத்துடன் இருக்கின்ற எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் சரியாக அஷ்ரஃபை, அவருடைய கொள்கைகளை பின்பற்றுவதோ, பிரதிவிம்பப்படுத்துவதோ கிடையாது. அவ்வாறு யாராவது அடிப்படைவாதியாக கட்சிக்குள் இருந்தால் அவரை ஓரம் கட்டும் கைங்கரியங்களே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அஷ்ரஃப் மரணித்த பின்னரும் இவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். தொலைக்காட்சியில் தோன்றி தேர்தல் பிரசாரம் செய்கின்றார். சுவரொட்டிகளிலும் அவரது புகைப்படத்தை அச்சிட்டே வாக்குக் கேட்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக மட்டுமன்றி ஏனைய கட்சிகளின் வெற்றிக்காகவும் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் மறைந்தும் மறையாத ஒரு தலைவராக அஷ்ரஃப் இருக்கின்றார். ஆனால் அவரது தொண்டர்களோ இன்று அவரை, அவரது கொள்கைகளை மறந்து விட்டார்கள்.
பொதுவாக மர்ஹூம் அஷ்ரஃப் 3 சந்தர்ப்பங்களில் மட்டுமே நினைவு கூரப்படுகின்றார். அதாவது, தேர்தல் காலங்களில் பிரசாரத்திற்காக அவர் நினைவு கூரப்படுகின்றார். தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் ஜாவத்தை பள்ளி வாசலுக்கு சென்று துஆ ஓதி அவரை நினைவு கூருகின்றனர். அடுத்தது, அவர் மரணித்த செப்டெம்பர் 16ஆம் திகதி அவருக்காக கத்தமுல் குர்ஆனும் விசேட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. சிலருக்கு அவரை நினைவுகூர்வதை விட வெளிநாட்டுப் பயணங்கள் முன்னுரிமை அளிக்கும் விடயங்களாக இருக்கின்றன. அஷ்ரஃபின் மரணம் பற்றிய மர்மத்தை துலக்காது, அவரது கொள்கைகளை தொடராது இவற்றையெல்லாம் செய்தால் போதுமென நினைக்கும் அரசியல்வாதிகள், நமது தலையெழுத்து!
Post a Comment