Header Ads



JVP ஸ்தாபகரின் குடும்பம், வீதிக்கு வருகிறது - மறுக்கிறார் ரில்வின் சில்வா

ஜே.வி.பி இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் குடம்பம் நடுத்தெருவிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது.

ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவரான ரோஹன விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடற்படை முகாம் ஒன்றிலுள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.

வெலிசர கடற்படை முகாமில் இவ்வாறு தங்கியிருந்த விஜேவீரவின் குடும்ப உறுப்பினர்களை அந்த வீட்டை வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி இந்த வீட்டை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக பெரும் சிரமங்களை தாமும் தமது பிள்ளைகள் அறுவரும் எதிர்நோக்கி வருவதாக விஜவீரவின் மனைவி சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் கடற்படைத் தளபதி கடற்படை முகாமில் அமைந்துள்ள வீடுகளிலிருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் தமக்கு வெளிநாடு ஒன்றில் தங்குதவற்கு அனுமதியளிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

தமது கணவரும் ஜே.வி.பி. இயக்கமும் செய்த தீய செயற்பாடுகளின் பலன்களையும் கடுமையான விமர்சனங்களையும் தூற்றுதல்களையும் தாமும் தமது பிள்ளைகளும் அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது பிள்ளைகளை முகாமிலிருந்து விடுவிக்க ஜே.வி.பி. கட்சி எவ்வித முனைப்பும் காட்டவில்லை என சித்ராங்கனி தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளை அரசியல் லாபங்களுக்காக மட்டுமே கட்சி பயன்படுத்திக் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  
 ரில்வின் சில்வா:-

ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தை தாமே பராமரித்து வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கட்சியே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செலவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா நேரங்களிலும் விஜேவீர குடும்பத்தின் நலன்களை கருத்திற் கொண்டு செயற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளின் கல்வி குறித்து கூடுதல் சிரத்தை எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தங்கியிருக்கும் வெலிசர வீட்டிலிருந்து வெளியேறும் எந்த நேரத்திலும் அந்தக் குடும்பத்தைப் பொறுப்பேற்று பராமரிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தைப் பராமரிப்பதனை ஓர் கடமையாகவே செய்து வருவதாகவும், விஜேவீர குடும்பத்திற்கு செய்து வரும் உதவிகளை எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் பிரச்சாரம் செய்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜவீர குடும்பத்தை யார் பராமரித்து வருகின்றார் என்பதனை சரியாக புரிந்துகொள்ளாதவர்கள் போலிப் பிரச்சாரம் செய்கின்றனர் எனவும், விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு யார் உதவி செய்கின்றார்கள் என்பது நன்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.