Header Ads



"படுகொலை செய்யப்பட்ட மர்ஹூம் MHM அஷ்ரப்"

காலனியத்துவத்திற்குப் பிந்தியதான  இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தொடர்ச்சியும் அவர்களின் பணியும் பங்களிப்பும் பல்தன்மை வாய்ந்தது. டி.பி. ஜாயா, டொக்டர் கலீல், சேர்  ராசீக் பரீட்,ஏ.எம், ஏ. அசீஸ்,  பதியுதீன் மஹ்மூத், ஏ.சீ.எஸ். ஹமீட் , எம் .எச் .எம் அஷ்ரஃப் என்பவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஒவ்வொருவரும் தாம் ஆற்றிய பணிக்காக வரலாற்றில் நினைவு கூரப்படுகின்றனர். இத்தலைமைகள்  விமர்சிக்கப்படுவதுடன் போற்றவும்படுகின்றனர். இவர்களுள்  முஸ்லிம் சமூகத்திற்காக தனித்துவமான அரசியல் இயக்கமொன்றை வழி நடாத்தி அதனை இலங்கையின் அரசியல் வரலாற்றில் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியவர் என்கிற வகையில் மர்ஹூம் எம் .எச் .எம் அஷ்ரஃப் , மேல் குறிப்பிட்ட தலைவர்களுடன் ஒப்பிடுகின்ற போது மிக முக்கியமானவராகவும் அதே வேளை அதீத ஆளுமை நிரம்பியவராகவும்  இருந்தார். இன்னொரு வகையில் சொன்னால் அந்த ஆளுமை மரத்தினைப் போல் நமது தோட்டத்தில் வேறு விருட்சங்கள்  இன்னும் இல்லை எனலாம்.

15 வருடங்கள்  இட்டு நிரப்பப்படமுடியாத வெறுமை. காற்றில் கலந்து கம்பீரமாக ஒலிக்கும் அந்தக் குரல் , அளவிடமுடியா ஆகுதி , அவருக்குப் பின்  முஸ்லிம் காங்கிரஸ் அடிவழியாக வந்த அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் பதவி வழங்கும் கொடையாக இருக்கிறது. இது சாத்தியப்படுவதற்கும், முஸ்லிம் மக்கள் இன்னமும் அவர் வழி நடாத்திய தேசிய அரசியல்  இயக்கத்தின்  விசுவாசமிக்க வாக்காளர்களாகவும் அதன் தீவிர ஆதரவாளர்களாகவும் இருப்பதற்கு அசையாக் காரணமும் அடிப்படையாகவும்  இன்றுவரை இருப்பது மர்ஹூம் எம் .எச் .எம் அஷ்ரஃப் , தான்  மரணிக்கும் வரை ஒரு சமூகப் போராளியாகவும், வரித்துக் கொண்ட இலட்சியத்தின் ஆன்மாவுக்கு முற்று முழுதாக  துரோகமிழைக்கத் துணியாதவராகவும் இருந்தார் என்பதே. அவர் நினைவு கூரப்படுவதும்  போற்றப்படுவதும் இதற்காகவே.

இலங்கையும் பல் தேசிய இனங்களின் சிறைக் கூண்டு என்பர், தேசிய இன ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுகின்ற அதே நேரம் குறிப்பிட்ட ஒரு வர்க்கப் பிரிவினரும் அவர்களின் நலனும் பாதுகாக்கப்படுகின்ற அரசியல் ஏற்பாடுகளை கொண்டதாகவும் இலங்கை அரசியல் திட்டமும் , நடைமுறையும் இருந்து வருகிறது. இலங்கையிலுள்ள அனைத்து இன  மக்களும் மைய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அளவிலும் பண்பிலும் வேறுபட்டு காலத்திற்கு காலம் போராடி இருக்கின்றனர். போராடியும் வருகின்றனர். சிங்கள மக்கள்  இரண்டுமுறை மைய அரசாங்கங்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி உள்ளனர். தமிழ் மக்கள்  அகிம்சா வழியிலும் ஆயுதமேந்தியும் போரடியுள்ளனர். மலையக மக்களுக்கும்  ஜனநாயக , தொழிற்சங்க போராட்ட வரலாறு  உள்ளது. இலங்கை முஸ்லிம்கள்  இலங்கை மைய அரசின் ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக ஆளாகி வந்ததன் காரணமாக , அந்த ஒடுக்குமுறையை எதிர்த்து முஸ்லிம்களுக்குள் எழுந்த அரசியல் விடுதலை உணர்ச்சியின் ஊற்றாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதற்கு தலைமையேற்ற எம் .எச் .எம் அஷ்ரபும் இருந்தார்.

அவருடைய பாத்திரமும் பணியும் இலேசுப்பட்டதாக இருக்கவில்லை. ஒரு பக்கம் இலங்கையின் சிங்கள சோவனிச அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதுடன் , வடக்கு கிழக்கில் நடைபெற்று வந்த தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டாத்தினை முன்னெடுத்த ஆயுத இயக்கங்களின் முஸ்லிம்கள்  மீதான அடக்குமுறையையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. புற ரீதியாக இவைகளையும் அக ரீதியாக கொழும்பு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் எதிர்ப்பினையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்று முஸ்லிம் இளைஞர், யுவதிகள்  அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு எதிராகவும் ஆயுதமேந்திப் போராடுவதற்கான அனைத்து சூழலும் காரணகாரியங்களும் இருந்தன.  மர்ஹூம்  அஷ்ரஃப் அவர்களின் தலைமை இதில் இருந்து முஸ்லிம் சமூகத்தினை , ஜனநாயக அரசியல் தளத்திற்கு திருப்பியது. பாராளுமன்ற ஜனநாயகப் பாதையை  தற்காலிக மாற்று வழியாக அன்று முன் நிறுத்தியது. இது அவரின் மிக முக்கிய பாத்திரமாக கருதப்படுகிறது.

அவர் முஸ்லிம் சமூகத்தின் ஆன்மாவாக, அதன் அரசியல் விடுதலையின் அசையா மாலுமியாக இருந்தது மிக சொற்ப காலம்தான். கட்சியின் அரசியல் தலைவராக கிட்டத்தட்ட  15 வருட காலம். பாராளுமன்ற உறுப்பினராக 11 வருட காலம். அமைச்சராக 05 வருடம் இதுதான் அவருடைய முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் காலகட்டமாகும். ஆனால் அந்த வரலாற்றுப் பங்களிப்பாளனை மதிப்பிடுவதற்கு இக்கால கட்டத்தினையும் தாண்டிய அவரது ஆயுள் பரியந்தம் முழுதும் நமக்கு அவசியமாகிறது. அவர் ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர்,  வாசகர், சிறந்த மேடைப்பிரசங்கி, சட்டவாளர், மனிதாபிமானி,அழகியல் உணர்வு கொண்டவர்,  இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி மனித குலத்தினை நேசித்த மனிதாத்மா,  புரட்சிக்காரர், ஆன்மிகவாதி.

ஒரு சமூக அரசியல் மாணவன் என்கிற வகையில் மர்ஹூம்  எம் .எச் .எம் அஷ்ரஃப் அவர்களை மீள்வாசிப்பு செய்வது அவசியம் எனக் கருதுகிறேன். என்னைக் கேட்டால் அவரை  வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மட்டும்  குறுக்கிப் பார்ப்பது அவர் பற்றிய முழு விம்பத்திற்குமான தரிசனத்தினை தாராது. அது முழுமைக்குமான  வாசலையும் திறந்து விடாது. அவரை ஆழமாகப் படிக்கவும் , மீள் வாசிப்பு செய்யவும் விரும்புபவர்கள் அவரது எழுத்துக்களை, உரைகளை தேடி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரது அனைத்துக் கவிதைகளும் அடங்கிய பெருந் தொகுப்பு ஒன்று வந்துள்ளது. அவரது குறிப்புகள்,   வாழ்க்கை சரிதம் தொடர்பாக இரு நூல்கள்  வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது பாராளுமன்ற உரைகளைத் தொகுத்த இரு  தொகுப்புகள் உள்ளன. இவைகள் அவரது சுய வார்த்தைகளாகும். அவரது கவிதைத் தொகுப்பு இவற்றுள்  மிக முக்கியமாகும், ஏனெனில் 1960 களில் இருந்து அவர் மரணிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையான அவரது வாழ்வின், போராட்ட அரசியல் பயணத்தின் உணர்வுகளை இத் தொகுப்பு மூலமாக மர்ஹூம்  எம் .எச் .எம் அஷ்ரஃப் நமக்கு கையளித்திருக்கிறார். அவரைப் பற்றி நாம் உண்மையான  நோக்கில் மீள  மீள தேடிக் கண்டடையும் போது மட்டும்தான் , முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைப் பயணம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? அதன் இன்றைய பயணம் முஸ்லிம் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சிக்கும், மர்ஹூம்  எம் .எச் .எம் அஷ்ரஃப் அவர்களின் ஆத்மாவுக்கும் விசுவாசமானதாக இருக்கிறதா ? என்பதை நிதானித்து கணக்கெடுப்பதற்கு பெரும் உதவி புரியும்.

16. செப்டம்பர் 2000  நாளில் மிகத் திட்டமிடப்பட்டு    எம். எச், அம் .அஷ்ரஃப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் பின்னால் சர்வதேச சக்திகளின் கை இருப்பதுடன், ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் முக்கிய  நோக்கங்களில்  ஒன்றாகவும் அந்த உன்மத்த ஆத்மா இருந்துள்ளது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவரை அழிப்பதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தினை சிதைத்து பலவீனப்படுத்துவதுடன்,  இலங்கையின் மைய அரசியலில்  தவிர்க்கவியலாத் தன்மையுடன் எதிர்காலத்தில் முக்கிய பாத்திரமொன்று வகிக்க இருந்த  ஒரு அரசியல் ஆளுமையை அழித்தொழிப்பு செய்வதும் அதன் முக்கிய இலக்காக இருந்திருக்கிறது  என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இறுதியாக, மகாகவி பாரதியின் உணர்வின் துயரத்தோடு இப்பத்தியை முடிக்கிறேன் .
“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்    “

3 comments:

  1. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உண்மையில் முஸ்லிம் அரசியலில் ஓரு சரித்திரம்.

    ReplyDelete
  2. அப்துல் ரஹ்மான் என்று ஒரு தலைவர் மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டார், அவரது பேச்சு, தோற்றம் எல்லாம் அஷ்ரப் அவர்களை அப்படியே நினைவு படுத்தியது.

    ReplyDelete
  3. mikavum thayriyamaana katturai. thalaivarin maranaththai pala konangalil parkka mudiyum. naanum neengalum intha vidayaththil oru pulliyil sangamikkiroam.

    ReplyDelete

Powered by Blogger.