யார் இந்த ஹசன் அலி...?
-அபூ ஸைனப்-
சவூதி அரேபியாவில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் மறைந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கட்டுரை ஒன்றை 80 களில் சவூதியில் இருக்கும் போது வாசித்து கொள்கையின்பால் ஈர்க்கப்படுகிறார். அவர் விடுமுறைக்காக நாடு திரும்பியதும் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களை சந்தித்து தனது ஆர்வத்தையும் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் இயக்கம் ஒன்று தேவை என்பதையும் வலியுறுத்தி தனது சொந்தப் பணத்தை செலவழித்து முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் மறுமலர்ச்சி இயக்கத்தில் தன்னை இணைத்து இன்று வரை கட்சிக்காக அரும்பாடு பட்டு வருகிறார். அவர் வேறு யாருமல்ல. கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி அவர்கள்.
இந்தக் கட்டுரையை எழுதும் எழுதுனருக்கும் கட்சியின் செயலாளர் நாயகத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் கிடையாது. ஆனால், அவரைப்பற்றி நன்கு அறிந்தவன் என்ற அடிப்படையிலும், அவரைப்பற்றி இன்றைய நிறைய இளைஞர்களுக்கு தெரியாமல் இருப்பதனாலும் இது எழுதப்படுகிறது. வேறு எந்த உள்நோக்கமோ அல்லது வெளிநோக்கமோ இல்லை என்று ஊடக தர்மத்தின் அடிப்படையில் முற்கூட்டியே வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கம் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. சொல்லப் போனால், முதல் நாள் தொட்டு இன்றுவரை இருக்கும் நிஜமான போராளிகள் சொற்பம். அதில் ஒருவர்தான் எம்.ரீ. ஹசன் அலி அவர்கள். மறைந்த நல்ல மனிதர் அலி உதுமான், சேகு இஸ்ஸதீன், அதாவுல்லாஹ் உட்பட மொத்தமாக 17 ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 1988 ம் ஆண்டு வென்று காட்டி பாரிய அரசியல் சக்தியாகப் பரிணமித்து அசைக்க முடியாத இயக்கமாக இன்றுவரை திகழ்வதற்கு உறுதியான அத்திவாரமிட்டவர்களுள் ஒருவர்தான் இந்த ஹசன் அலி அவர்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் இயக்கத்தின் அங்கத்தவர்களை மூன்று வகைகளில் உள்ளடக்க முடியும்.
1. ஆரம்பத்தில் சேர்ந்து பின்னர் விலகிக் கொண்டவர்கள்.
2. பதவிகளை அடைந்து கொள்வதற்காக வேறு கட்சிகளில் இருந்து வந்து இணைந்து கொண்டவர்கள்.
3. ஆரம்பம் முதல் இன்றுவரை சுயனலமில்லாமல் கட்சியில் உறுதியாய் இருப்பவர்கள்.
செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி இதில் மூன்றாம் வர்க்கத்தைச் சேர்ந்தவர். பதவியை எதிர்பாராமல் அன்று முதல் இன்று வரை கட்சியில் இருக்கிறார்.
கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று வரை பாதுகாத்து வருகின்றார். ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத நேர்மையான நல்ல பண்பான மனிதர்.
ஜெனீவா அறிக்கை, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பான ஆவணங்கள் என உரிமைப் போராட்டம் தொடர்பான அறிக்கைகள் முழுமையாக இவரிடம் உள்ளன. இவரின் நேர காலங்களை இதற்காகவே செலவிட்டு வருகிறார். கரையோர மாவட்டம் குறித்த சிந்தனையில் உறுதியாய் இருப்பவரும் இவர்தான் என்றால் அது மிகையாகாது.
31 வருடங்களாக கட்சியின் நெளிவு, சுளிவு நுணுக்கங்களை அறிந்தவர். இனிவரும் காலங்களில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்கு ஒருவர் இருக்கிறார் என்றால், இன்ஷா அல்லாஹ், அது செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி அவர்கள்தான்.
ஹசன் அலிக்கு என்ன தெரியும், அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்கள் அவரைப் பற்றிய தெளிவான விளக்கங்களை தேடி அறிந்து கொள்ளுங்கள். அவரைப் பற்றி அறியாதவர்கள் அறிந்து கொள்ளும்வரை விமர்சிக்காதீர்கள். அவர் குறித்து ஊரைச் சேர்ந்தவர் எனும் மனநிலையில் இருந்து வெளியேறுங்கள்.
எம்.ரீ. ஹசன் அலி, சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தேசிய முஸ்லிம் அரசியல் இயக்கத்தின் தேசிய செயலாளர் நாயகம்.
அபூ சைனப் அவர்களே! செயலாளர் அவர்களின் அருமை பெருமை தொண்டரகளுக்குத் தெரியும். ஆனால் செயலாளர் அவர்கள் தொடர்ச்சியாக தேசியப் பட்டியல் எம்பி ஆகத்தான் இருக்க வேண்டும் என்றால் பிரச்சனை தொண்டர்களிடம் இல்லை. செயலாளரிடம்தான் உண்டு. இதனை மறுப்பாரா ? செயலாளர்! இல்லை நீங்கள்தான் நியாயத்தைச் சொல்லுவீர்களா? ஆகவே சோதியன் குடும்பி சும்மா ஆடாது என்பது உமக்கும் பொருந்துமா?
ReplyDelete