இங்கிலாந்து பள்ளிவாசல்களில் உளவாளிகள்
ஐக்கிய பிரிட்டன் ராஜ்ஜியத்தின் தலைமையின் கீழுள்ள இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடும் நபர்களைப் பற்றிய ரகசிய தகவல்களை முன்கூட்டியே அறிந்து, அந்த திட்டத்தை முறியடிக்க பிரிட்டனின் பிரபல உளவுத்துறையான 'எம்-15', சில முஸ்லிம்களுக்கு பணம் தந்து, அவர்களை ரகசிய உளவாளிகளாக உலவ வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உள்நாட்டு தீவிரவாதிகளின் நடமாட்டத்தையும், திட்டங்களையும் கண்காணிக்கும் நோக்கத்தில் பணம் தந்து சில முஸ்லிம்களை எம்-15 உளவுத்துறை பயன்படுத்தி வருவதாக இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆதாரமாக இங்குள்ள பிரபல மசூதி ஒன்றில் நடைபெறும் நிழல் நடவடிக்கைகளை ஆறு வார காலமாக உளவறிந்ததற்காக ஒரு முஸ்லிம் உளவாளிக்கு எம்-15 உளவுத்துறை அதிகாரிகள் 2 ஆயிரம் பவுண்ட்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சம் ரூபாய்) சன்மானமாக வழங்கியுள்ளதாக ஒரு உபரி தகவலும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எம்-15 உளவுத்துறையின் இந்த புதிய முயற்சியானது, உள்நாட்டில் இருக்கும் தீவிரவாதிகள் தீட்டும் தாக்குதல் திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து ஆபத்தை தடுக்க உதவக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இப்படி பணத்துக்காக உளவறியும் சிலர், தவறான அல்லது திரிக்கப்பட்ட தகவல்களை தரமுயன்றால், ஆபத்து பன்மடங்காகி விடக்கூடும் எனவும் அந்த கட்டுரை எச்சரித்துள்ளது.
Post a Comment