Header Ads



சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது - அடியோடு நிராகரிக்கிறது இலங்கை


போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணை சரியான முறையில் நடைபெற்றால் தமிழர்களின் நம்பிக்கையைப் பெற முடியுமென்று இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகியிருக்கும் நிலையில் பிபிசியிடம் பேசிய ராஜித சேனாரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
'நீதித் துறை சுயேச்சையாக இயங்குகிறது'

சர்வதேச நிபுணர்களை அழைத்துவருவது தொடர்பாக தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கும் ராஜித சேனாரத்ன, இலங்கையில் தற்போது நீதித்துறை சுயேச்சையாக இயங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். அரசுக்கு எதிராக பல தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்தாலே இது புரியும் என்றும் கூறியிருக்கிறார்.

போர்க் குற்றங்களை யார் செய்திருந்தாலும், ஜனாதிபதி, பிற தளபதிகள், பாதுகாப்புச் செயலர் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க தங்கள் அரசு தயாராக இருக்கிறது என்றும் ராஜித சேனாரத்ன கூறினார்.

போரின்போது என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான தகவல்களைப் பெற, தென்னாப்பிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போல எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய உண்மை அறியும் ஆணையம் ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டபோது, சர்வதேச சமூகமும் தமிழ் சமூகமும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் ஆனால், அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது அதனைச் செயல்படுத்த வேண்டுமென இருதரப்புமே கோரினார்கள் என்றும் சுட்டிக்காட்டிய ராஜித சேனாரத்ன, விசாரணை சரியான முறையில் நடைபெற்றால் தமிழ் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற முடியுமென்றும் குறிப்பிட்டார்.

எந்தத் தாமதமுமின்றி விரைவிலேயே தேவையான ஆணையங்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் ராஜித சேனாரத்ன பிபிசியிடம் தெரிவித்தார்.

1 comment:

  1. கட்டாயம் சர்வதேச விசாரணை வேண்டும்.
    சர்வதேச விசாரணையத் தவிர வேறு எந்த விசாரணையும் சரிவரவே வராது.

    மகிந்த, கோத்தபாய, நாமல், பசில் ஆக்யோர் செய்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எந்தக் குற்றத்திற்கும் நீதியான விசாரணை செய்ய முடியாத நாட்டில், யுத்தக் குற்றத்திற்கு எப்படி உள்நாட்டு விசாரணையை நம்புவது? ஒருக்காலும் நம்பவே முடியாது.

    இலங்கையில் நீதியான விசாரணை நடைபெறும் என்பதை, ராஜபக்சாக்களுக்கு எதிரான விசாரணையை வைத்தே சொல்ல முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.