அப்துல் பாசித்தின் தூக்குத் தண்டனை சர்ச்சை நீடிக்கிறது
ஒருவரை தூக்கிலிடுவதா, வேண்டாமா? என்பதுதான், எப்போதும் விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் சிறை அதிகாரிகளோ, ஒரு மாற்றுத் திறனாளியை எப்படி தூக்கிலிடுவது என்று குழப்பத்தில் உள்ளனர்.
ஒருவரை தூக்கிலிடுவதற்கு முன்பாக அவரின் உயரம், எடை போன்ற விஷயங்களுக்குயேற்ப தூக்குக் கயிறு மற்றும் தூக்கு மேடை தயார் செய்யப்படும். குற்றவாளியை குறிப்பிட்ட இடத்தில் நிற்கவைத்து, அவரது கழுத்தில் கயிறு மாட்டப்பட்டு, பின்னர் அவரது காலுக்கு கீழ் உள்ள பலகை நீக்கப்படும்.
தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் பசித்(43) என்பவருக்கு கடந்த 2009ம் ஆண்டு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அப்துலுக்கு 2010-ல் பக்கவாதம் தாக்கியது. இதனால் இடுப்புக்கு கீழே செயல் இழந்துவிட்டது.
இந்நிலையில் இன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்திருந்தது. ஆனால், சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத் திறனாளியை, தனியாக தூக்கு மேடைக்கு செல்ல முடியாதவரை எப்படி தூக்கிலிடுவது? என்று சட்டவிதிகளில் எதுவும் இல்லை என்பதால் சிறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவித்துவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அவர்கள் அரசிடம் ஆலோசனையும் கேட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை காரணமாக அப்துல் பசித்தின் தூக்குத் தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அப்துல் பசித்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.
Post a Comment