மன்னிப்புக் கேட்க வேண்டுமென ரணில் வலியுறுத்து..!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்துடன் தொடர்புடைய பொய்ச்செய்தி ஒன்றை வெளியிட்டமை குறித்து வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்குமாறு அத சிங்களப் பத்திரிகையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று (23) நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அதில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டதாவது,
கடந்த திங்கட்கிழமை வெளியான அத பத்திரிகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தலைப்புச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
எனது இந்தியப் பயணத்தின் போது இது குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வாறான ஒரு பாலம் அமைப்பதன் சாதக பலன்கள் தொடர்பில் இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின்கட்காரி ஒரு ஆலோசனையை மாத்திரமே என்னிடம் முன்வைத்தார்.
மற்றபடி இதுவரை சாத்தியவள அறிக்கை கூட தயாரிக்கப்படாத, அது பற்றி நினைக்கக்கூட இல்லாத ஒரு செய்தியை பிரசுரிப்பது வாசகர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்கு ஒப்பானதாகும்.
அத்துடன் வாக்குவங்கி இல்லாத வங்குரோத்து அரசியல்வாதிகள் அதன் மூலம் குறுகிய நன்மைகளை பெற்றுக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்துவிடும்.
எனவே இது குறித்து அத பத்திரிகைதனது வாசகர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நான் வலியுத்திக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Post a Comment