Header Ads



ஒப்பந்தத்தை முறிக்குமா முஸ்லிம் காங்கிரஸ்...?

-pmggo-

கடந்த 17.08.15. அன்று நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி, சரியாக ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையில், தேர்தலில்  வெற்றி பெற்ற மற்றும் தேசியப்பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதி நிதிகளுக்கான பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும் ஐக்கிய தேசிய முன்னணியினால் SLMCக்கு வழங்கப்பட்ட இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் மாத்திரம் இது வரை உரியவர்களுக்கு வழங்கப்படாது, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமையானது, இன்று மக்கள் மத்தியில் பிரதான பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

இப்பொதுத்தேர்தலில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தினைப் பெற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸும் கூட அது தொடர்பான பொருத்தமான முடிவுகளை விரைவாக மேற்கொண்டு, அதற்கான பிரதிநிதியினையும் நியமித்துள்ளது. எனினும் SLMC க்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆசனங்கள் தொடர்பில் இது வரை பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள முடியாது, அதன் தலைமைத்துவம் ஒரு தடுமாற்றமான நிலைமையிலும், இழுபறிநிலையிலும் இருந்து வருவதானது, மக்கள் மத்தியில் SLMC மீதான அதிருப்தியினையும் நம்பிக்கையீனத்தையும் மீண்டும் அதிகரிக்கச்செய்துள்ளது. 

எனினும்  தற்பொழுது இத்தேசியப்பட்டியல் ஆசனங்கள் SLMC யின் சில நீண்டகால உறுப்பினர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதற்காக முன்மொழியப்பட்டு வருபவர்களின் பெயர்களை நோக்குகையில் அவர்கள் காங்கிரஸின் நீண்ட கால உறுப்பினர்கள் என்பதைத்தவிர, இவர்கள் கடந்த காலங்களில் மக்கள் ஆணையினைப்பெற்று தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களாகவோ, கட்சியின் வெற்றிக்காக பெருமளவு வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கின்ற அளவிற்கு மக்கள் செல்வாக்கினை பெற்றுக்கொண்டவர்களாகவோ தெரியவில்லை. இவ்வாறான SLMCயின் தூரநோக்கற்ற செயற்பாடுகளே கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின்  மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கையீனத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன், காங்கிரஸ்ஸின் வாக்கு வங்கியிலும் பாரிய சரிவினை ஏற்படுத்தியிருந்தது. 

தேசியப்பட்டியல் தொடர்பில் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கிடையில் வாக்குறுதிகளை வழங்குவதும் அது தொடர்பில் முடிவுகளை மேற்கொள்வதும் வழமையான விடயமே.எனினும் கடந்த பொதுத்தேர்தலைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் தனது தேசியப்பட்டியல் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற பொழுது, கட்டாயம் சிந்திக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு பக்கம் இருக்கின்றது.அதுதான் SLMCகடந்த தேர்தலில் NFGG யுடன் செய்து கொண்ட கூட்டிணைவும், அது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையும் அந்தக்கூட்டிணைவு SLMCக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக்கொடுத்த மாபெரும் வெற்றியுமாகும்.

கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்  தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே காணப்படுகின்றது. இவ்வெற்றிக்கு மிகப்பாரிய பங்களிப்பினைச்செய்த அணியாக NFGG காணப்படுகின்றது. பொதுத்தேர்தலின் பொது SLMC NFGGகூட்டணியானது, மக்களின் பெரும் நம்பிக்கையினைப் பெற்றிருந்ததுடன், இக்கூட்டணி நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டுமெனும் அவாவும் மக்கள் மத்தியில் காணப்பட்டது. இதன் காரணமாகவே மக்கள் இக்கூட்டணிக்கு இம்முறை தங்கள் ஆதரவினை வழங்கி சரிந்து போயிருந்த SLMCயின் வாக்குப் பலத்தினையும் தூக்கி நிறுத்தியிருந்தார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ்ஸினால் வழங்கப்படவுள்ள தேசியப்பட்டியலில் ஒன்று NFGGக்கே வழங்கப்பட வேண்டும் எனும் நியாயம் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்த இடத்தில் தங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கடையில் பதவிகளை பங்கு வைப்பது என்பதற்கு அப்பால், தங்களுடன் கூட்டிணைந்து போட்டியிட்ட, தங்கள் வெற்றிக்காக பாரிய பங்களிப்புச் செய்த தரப்பினர் என்ற வகையில் NFGG யுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை மதித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் SLMCயின் தலைமைக்கு இருக்கிறது. SLMC- NFGG இடையிலான உடன்படிக்கையின் 8ம் 9ம் இலக்க சரத்துகளில் இந்த விடயம் மிகத்தெளிவாக பேசப்பட்டிருக்கின்றது.இதில் காங்கிரஸ் தலைமை கைச்சாத்திட்டிருக்கின்றது. 

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

"எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பொருத்தமான இடத்தினையும், வாய்ப்பினையும் ந.தே.மு பெற்றுக்கொள்வதனை ஸ்ரீ.ல.மு.கா  உத்தரவாதப்படுத்தும்."

"பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ந.தே.மு வின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதனை ஸ்ரீ.ல.மு.கா பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கேற்ற வகையில் ந.தே.மு வினால் பிரேரிக்கப்படும் ஒருவர் சமர்பிக்கப்படும் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்படுவார்."

எனவே முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் தொடர்பில் NFGGக்கு அளித்த தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? எதிர்வரும் 22ம் திகதி SLMCயினால் தேசியப்பட்டியலுக்கு பெயரிடப்பட்டிருந்த பிரதிநிதி Dr.ஹபிஸை இராஜினாமாச் செய்யும்படி SLMC தலைமை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் இப்பிரதிநிதித்துவத்தினை,NFGGக்கு வழங்குவதன் மூலம் தனது கடமையையும் வாக்குறுதியையும் SLMC நிறைவேற்றுமா? ...அல்லது தங்கள் வெற்றிக்காக NFGGயின் வாக்குப்பலத்தினை மிக சுயநலமான முறையில் பாவித்து விட்டு ஒப்பந்தங்களை முறித்து வாக்குறுதிகளை மீறுகின்ற வரலாற்றுத் தவறினை SLMC தலைமைத்துவம்  செய்யுமா? 

கடந்த காலங்களில் மக்களுக்கோ கட்சிக்கோ பயன்படாத வகையில் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவங்களை பொருத்தமற்றவர்களுக்கு தன்னிச்சையாக வழங்கி SLMCயின் தலைமை பெற்றுக்கொண்ட அனுபவங்களை இந்த இடத்தில் அவர்கள் மீட்டிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

எனவே இத்தேசியப்பட்டியல் விடயத்தில் SLMC காலம் தாழ்த்தாமலும் NFGG உடனான ஒப்பந்தத்தினை மீறாதவகையிலும்  மிக நியாயமான முறையில் இத்தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தினை NFGGக்கு வழங்கி மக்கள் SLMCக்கு அளித்த ஆதரவினை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



5 comments:

  1. NFGG மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசோடு சேராவிட்டால் முஸ்லிம் காங்கிரசின் தலைஎழுத்து வேறாக மாறி இருக்கும்.என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும்.நியாயமாக நடந்து கொண்டால் அடுத்த முறையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியும்.கரும்பு ருசி என்று வேரோடு சாப்பிட கூடாது.கரும்புக்கும் ஒரு மொழி வைத்துத்தான் வெட்ட வேண்டும் என்பது பழமொழி.அப்பத்தான் மீண்டும் தலைக்கும்.

    ReplyDelete
  2. NFGG க்கு ஒரு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டால், பாராளுமன்றம் செய்ய மிகவும் தகுதியானவர், வடமாகாண சபை உறுப்பினர் ஜனாப் அஸ்மின் அய்யூப் அவர்கள் ஆவார்கள்.

    அஷெய்க் அஸ்மின் அவர்கள் பல்துறை திறமையும், ஆற்றலும் மிக்க இளைஞர் ஆவார்.

    ReplyDelete
  3. முஸ்லிம் காங்கிரஸ் கட்டாயம் ஒரு ஆசனத்தை வழங்க வேண்டும்.
    அந்த ஆசனம் ஜனாப் அஸ்மின் அய்யூப் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.

    ReplyDelete
  4. SLMC தேசிய பட்டியலில் கட்டாயம் NFGG க்கு ஒரு சீட்டை கொடுத்தே ஆக வேண்டும். இது முஸ்லிம் காங்கிரஸ் சமுகத்துக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.
    தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க தெரியாதவர் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம் , இந்த விடயத்தை எப்படி தீர்த்து வைக்கிறார் என்று.

    ReplyDelete

Powered by Blogger.