மெளதூதியும், ஊடகத்துறையும்..!
இந்திய துணைக் கண்டத்தின் இஸ்லாமிய புத்திஜீவியும் சிந்தனையாளருமான செய்யத் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்) அவர்களின் 36வது நினைவு தினத்தை முன்னிட்டு (22.09.2015) இன்று இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவியல் மறுமலர்ச் சிக்காகத் தன் சிந்தனையாலும், பேனாவினாலும் இரவு பகல் பாராது அயராது உழைத்தவர்களில் மெளலானா அபுல் அஃலா மெளதூதி (ரஹ்) அவர்கள் முதன்மையானவராவார். சாதாரண ஊடகவியலாளராகப் பொது வாழ்வை ஆரம்பித்த இவர், இவ்வுலகிலிருந்து விடைபெறும் போது இந்திய வரலாற்றிலும், இஸ்லாமிய வரலாற்றிலும் மாத்திரம ல்லாமல் உலக வரலாற்றிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பெற்றவரானார். இதற்கு அவரது சிந்தனையின் வெளிப்பாடுகளும் அவரது எழுத்துக்களும் தான் அடித்தளமாக அமைந்தன.
இவ்வாறு மகத்துவம் பெற்று விளங்கும் மெளலானா மெளதூதி (ரஹ்), இந்தியாவின் ஹைதராபாத்திலுள்ள அவ்ரங்கபாத் என்ற இடத்தில் வசித்து வந்த இஸ்லாமியப் பற்றுமிக்க குடும்பத்தில் 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி பிறந்தார். இவர் சிறுபராயம் முதலே கல்வியில் அதிக ஆர்வம் மிக்கவராகக் காணப்பட்டார். இவர் பிறந்த சமயம் இந்தியா பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனால் ஆங்கிலேயரின் சமூக, கலாசார பழக்க வழக்கங்கள் இந்தியாவெங்குமே வியாபித்திருந்தது.
மெளதூதியின் தந்தை தம் பிள்ளைகள் ஆங்கிலேயக் கல்வி முறை சார்ந்தகல்விக் கூடங்களில் கல்வி பெறுவதை விரும்பவில்லை. ஆகவே மெளதூதிக்கும் அவரது ஏனைய சகோதர சகோதரிகளுக்கும் அவரது இல்லத்திலேயே ஆரம்பக் கல்வியை வழங்க தந்தை ஏற்பாடு செய்தார்.
இருந்த போதிலும் இடைநிலைக் கல்வியை மத்ரஸத்துல் புர்க்கானியா என்ற அறபுக் கல்லூரியில் மெளலானா மெளதூதி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்திலுள்ள தாருல் உலூம் கல்லூரியில் இணைந்து பட்டப் படிப்பை இவர் ஆரம்பித்தார். இவரது தந்தை நோய் வாய்ப்பட்டதோடு சிறிது காலத்தில் காலமானார். இதன் விளைவாகப் பட்டப்படிப்பை இடைநடுவில் கைவிட்டார் அபுல் அஃலா மெளதூதி. ஆனாலும் அவர் சுய அறிவியல் தேடலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறான சூழலில் ‘பிஜ்னோர்’ என்ற பத்திரிகையில் சாதாரண ஊடகவியலாளராக 1918 இல் இணைந்தார். அப்போது அவருக்கு 15 வயதே ஆகியிருந்தது. இவர் சிறுபராயம் முதலே எழுத்துத் துறையில் ஆர்வம் மிக்கவராக விளங்கியது இதற்கு பெரிதும் உதவியது. இவருக்கு அதிக விருப்புக்குரிய துறையாக ஊடகவியலே விளங்கியது. இவரது ஆக்கங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அவர் விடயங்களை முன்வைத்த விதமே அதற்கு அடிப்படைக் காரணம். எந்த வயது மட்டத்தினரும் இலகுவாக விளங்கி புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அவர் ஆக்கங்களை எழுதக் கூடியவராக இருந்தார்.
இக்காலகட்டத்தில், அதாவது 1920 ல் ஜபல்பூர் என்ற இடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தாஜ்’ என்ற தினசரிப் பத்திரிகையின் ஆசிரியரானார் அபுல் அஃலா மெளதூதி. இதேவேளை புதுடில்லியில் இருந்த மெளலானா அபுல் ஸலாம் நியாஸியிடம் அறபு மொழியைக் கற்ற இவர், ஆங்கிலம், உருது மொழி களையும் கற்கத் தவறவில்லை. அத்தோடு இஸ்லாத்தில் மேலும் கற்றுத் தேறும் நோக்கில் அறபு இலக்கணம், தப்kர், தர்க்கவியல், தத்துவம் ஆகிய துறைகளிலும் இவர் ஆர்வம் காட்டினார். இக்காலப் பகுதியில் அதாவது 1921ல் ‘முஸ்லிம் டெய்லி’ தினசரியின் ஆசிரியர் நியமனம் இவருக்குக் கிடைத்தது.
இதே காலப் பகுதியில் இந்திய விடுதலைக்காகப் பாரிய பங்களிப்பு நல்கிக் கொண்டிருந்த அகில இந்திய ஜம்இய்யத்துல் உலமா சபை தமது உத்தியோகபூர்வப் பத்திரிகையான ‘அல் ஜாமிஆ’ வின் ஆசிரியர் பதவியை அன்று பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கிய மெளதூதிக்கு வழங்க தீர்மா னித்தது. இதன்படி 1925 ல் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் அன்றைய முன்னணி இஸ்லாமிய அறிஞர்களின் நெருக்கத்தையும், உறவையும் பெற்றுக் கொண்டார் மெளதூதி.
இதே காலப் பகுதியில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற பொய்ப்பிரசாரம் இந்தியாவிலும் ஏனைய பிரதேசங்களிலும் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இச் சமயம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை சொற்பொழிவின் போது, மெளலானா முஹம்மதலி ஜெளஹர், ‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்’ என்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையிலும், இஸ்லாத்தில் அறப் போராட்டத்தின் உண்மை நிலையை தெளிவுபடுத்திடும் வகையிலும் ஒரு முழுமையான நூலை ஏன் எழுதி வெளியிடக் கூடாது” என்று சவால் விடுத்தார். அச்சவாலை ஏற்ற மெளலானா மெளதூதி ‘இஸ்லாத்தில் அறப்போராட்டம்’ என்ற நூலை 1926 ல் எழுதத் தொடங் கினார். இதற்காக இஸ்லாத்தில் அறப்போராட்டம் தொடர்பான நூல்களை ஆராய்ச்சி ரீதியாக கற்று ‘ஜிஹாத் ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்’ என்ற பெயரில் ஒரு முழுமையான நூலை எழுதினார்.
அந்நூலை 1930ல் வெளியிட்டார். இந்நூல் இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரசாரத்திற்கு தக்க பதிலாக அமைந்தது. அத்தோடு இந்நூல் அதிக தாக்கம் மிக்கதாகவும் விளங்கியது. இதனைத் தொடர்ந்து இஸ்லாத்தை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் ‘இதுதான் இஸ்லாம்’ என்ற பெயரிலும் ஒரு நூலை எழுதி 1932 இல் வெளியிட்டார். இதுவும் மக்கள் மத்தியில் அதிக தாக்கமும் செல்வாக்கும் செலுத்தக்கூடிய நூலாக அமைந்தது. அதனால் இற்றைவரைக்கும் 70 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் பயனாக இதன் இலட்சக்கணக்கான பிரதிகள் மக்களைச் சென்றடைந்துள்ளன.
இவ்வாறான நிலையில் இஸ்லாமிய சிந்தனையைப் புனர்நிர்மாணம் செய்யவென தமக்குரிய சொந்தப் பத்திரிகையாக ‘தர்ஜுமானுல் குர்ஆனை’ 1932 ல் ஆரம்பித்தார். இஸ்லாத்தின் நிழலில் தனிமனிதன், சமூகம், ஆட்சி அதிகாரம் என்பவற்றின் மேம்பாடு குறித்து அதிக கவனம் செலுத்தியது இப்பத்திரிகை. அதனால் ஹைதராபாத் அரசு இப்பத்திரிகையின் 300 பிரதிகளை கொள்வனவு செய்து அவற்றை இலவசமாக நூலகங்களுக்கு வழங்கியது. அத்தோடு இப்பத்திரிகைக்கான வாசகர்களதும் அபிமானிகளதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இக்காலப் பகுதியில் இந்திய விடுதலைக்காக முன் னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நகர்வுகள் குறித்து விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்த மெளலானா மெளதூதி இப்பத்திரிகையின் ஊடாக தமது அரசியல் சிந்தனைகளையும் முன்வைக்கத் தவறவில்லை. இவ்வாறான சூழலில்தான் மெளலானா மெளதூதி மஹ்மூதா என்ற பெண் மணியுடன் திருமண வாழ்வில் இணைந்தார். இது 1937 இல் நிகழ்ந்தது. இவர் பண வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியாக இருந்ததால் மெளலானாவின் இஸ்லாமிய ஆய்வுகளுக் கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையான இஸ்லாமிய அமைப்பின் தேவையை உணர்ந்த, மெளலானா மெளதூதி தம்மோடு இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்தி அன்றைய முன்னணி முஸ்லிம்களுக்குக் கடிதங்களையும் எழுதினார். இப்பின்னணியில் இந்திய தேசிய காங்கிரஸ¤க்கும், முஸ்லிம் லீக்குக்கும் அப்பால் இஸ்லாமிய பிரசாரத்திற்கென 75 உறுப்பினர்களுடன் ஒரு அமைப்பை 1941 ஆகஸ்ட் 26 ஆம் திகதி லாஹ¥ரில் ஸ்தாபித்தார் மெளலானா மெளதூதி.
அதுவே ஜமாஅத்தே இஸ்லாமி ஆகும். இந்த அமைப்புக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவும் அபிமானமும் கிடைத்து வந்தது. அத்தோடு மெளலானாவை நோக்கி சவால்களும் வரத் தொடங்கின. அச்சவால்கள் அவரை புடம் போட்டன. அத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமி, சமய, சமூக விவகாரங்களிலும் கவனம் செலுத்தக் கூடிய ஸ்தாபனமாக விளங்கியது. இதன் காரணத்தினால் மெளலானா மெளதூதி பலமுறை சிறைத் தண்டனைகளையும் அனுபவித்தார். காதியானி பிரச்சினை தொடர்பான நூலுக்காக அவருக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பும் வழங்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருந்தும் அவர், தாம் முன்னெடுத்த கொள்கையைக் கைவிடவில்லை.
1941 ஆம் ஆண்டில் அருள் மறையாம் அல் குர்ஆனுக்கு விளக்கவுரை (தப்kர்) எழுதும் பணியை இவர் ஆரம்பித்தார். அதுவே ‘தப்ஹீமுல் குர்ஆன்’ என்ற விளக்கவுரையாகும். இதனை அவர் 1972 ஆம் ஆண்டாகும் போது எழுதிப் பூர்த்தி செய்து வெளியிட்டார். இது நவீன இஸ்லாமிய அறிவியல் மேம்பாட்டுக்குப் பாரிய பங்களிப்பு செய்த விளக்கவுரைகளில் ஒன்றாக விளங்குகின்றது. அதேநேரம் தம் வாழ்வுக் காலத்தில் இஸ்லாத்தோடும், மனித வாழ்வோடும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி 160 க்கும் மேற்பட்ட நூல்களை இலகு மொழிநடையில் எழுதியுள்ள இவர் 1000 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இதன் நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் இவர் விஜயம் செய்துள்ளார்.
அதன் காரணத்தினால் தான் மறைந்த முன்னணி இஸ்லாமிய அறிஞரான அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் ‘நவீன யுகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சியில் அறிவியல் ரீதியாகவும், சிந்தனா ரீதியாகவும் மெளதூதி போன்று எவரும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக நான் அறியவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வந்த மெளலானா மெளதூதி (ரஹ்) அவர்கள் தமது இறுதிக் காலப் பகுதியில் நாட்பட்ட சிறுநீரக பாதிப்புக்கும் இதய நோய்க்கும் உள்ளானார்.
இக்காலப் பகுதியில் அவரது புதல்வரொருவர் அமெரிக்காவில் மருத்து வராகக் கடமையாற்றி வந்தார். அதனால் அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெறவென இவர் 1979 ஏப்ரலில் அமெரிக்காவின் நியூயோர்க்குக்கு பயணமானார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவரது 76 வது வயதில் அதாவது 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். அவர் நவீன இஸ்லாமிய யுகத்தில் ஒரு சகாப்தம். சாதாரண ஊடகவியலாளராகப் பொதுவாழ்வில் பிரவேசித்த மெளலானா மெளதூதி இவ்வுலகை விட்டுப் பிரியும் போது முஜத்தித் (சமூக சீர்திருத்தவாதி), இஸ்லாமிய சிந்தனையாளர், தப்kர் துறை அறிஞர், நூலாசிரியர், பேச்சாளர், ஊடகவியலாளர், செயல் வீரர் எனப் பன்முக ஆளுமையையும் ஒருங்கே பெற்றவராக விளங்கினார்.
அவரது தவறுகளை மன்னித்து பணியை அங்கீகரித்து அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்கிடப் பிரார்த்திப்போமாக.
May Allah Forgive for his mistakes (especiallly in religious matter) and Bless him with Jannah and Make his followers to know, that there are many important issue in which this brother has gone wrong ( may Allah forgive him for it) such as blaming Usmaan (ral), Muawiya (ral) ruling, issue of Dajjal, Issue on Mossa (al) and many more. So let us make Dua for this brother and not follow him blindly in the issues where he made mistakes.
ReplyDeleteMay Allah forgive him for his mistakes and Bless him Janna.
NOTE: it is not form the Sunnah of Muhammed (sal) or Campanions to make the DAY of Memory (brith or death). rather this is the practice of westerners and innovators of islam.