அமைச்சுக்களுக்கான நிறுவனங்கள், பற்றிய விபரம் வெளியாகியது..!
அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் தொடர்பிலான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஒருசில அமைச்சுக்களின் கீழ் ஏற்கெனவே இருந்த பொறுப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
இதற்கமைய இலங்கை மத்திய வங்கி, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, தேசிய இளைஞர் சேவைகள் மற்றும், ஊழியர் நம்பிக்கை நிதியம், மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட 20 நிறுவனங்கள் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சராவார்.
சிவில் விமான சேவை அதிகார சபை, வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பொலிஸ் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரபனவின் பொறுப்பில் உள்ளன.
திறைசேரி, சுங்கம், கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை காப்புறுதிச் சபை, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, அரச நிதித் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அனைத்து அரச வங்கிகள், ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா நிறுவனங்கள், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் என்பன உள்விவகார , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட 10 நிறுவனங்கள் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய கலாசார நிதியம் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை சிங்கள மொழியில் மட்டுமே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment