மஹிந்தவின் ஆட்சிக்கால கொலைகளை, மூடிமறைக்க இடமளிக்கமாட்டேன் - ரணில் திட்டவட்டம்
தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கால கொலைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்தியப் பயணத்தின் வெற்றி குறித்து அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு நெருக்கமான சில அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றிருந்தது. இதன்போது கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
முன்னைய ஆட்சியின் கொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முனைந்தால் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி இராணுவத்தினர் அதற்கு முட்டுக்கட்டைகள் போடுகின்றனர். ஊடகங்களும் அவர்களுக்குத் துணை போகின்றன.
தமது சகாக்கள் அநியாயமான முறையில் கொல்லப்பட்டதைக் கூட மறந்து, அவர்களை துரோகிகளாக சித்தரித்து மஹிந்தவையும் சகாக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஊடகங்கள் முன்னிலையில் நிற்கின்றன. ஊடக தர்மத்துக்கும் கௌரவத்துக்கும் இது பாரிய இழுக்காகும்.
ஆனால் யார் என்ன கூறினாலும், தேசியப் பாதுகாப்பை முன்னிறுத்தி தடைபோட முயன்றாலும் மஹிந்த அரசின் கொலைகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அதில் சிறு மாற்றத்திற்கும் இடமில்லை.
அதற்கு ஏதுவாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மாற்றப்பட்டு, புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், அநியாயங்களுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கும் நீதியைப்பெற்றுக் கொடுப்பதில் தனது அரசாங்கம் எவ்வகையான நெருக்கடிகளையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மற்றும் அவன்கார்ட் விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப்படாது எந்தக் காரணத்திற்காகவும் இந்த விசாரணைகளை கிடப்பில் போட இடமளிக்க மாட்டேன்.
குமரன் பத்மநாதன் தொடர்பில் மீளவும் விசாரணைகளை நடத்துமாறு நான் கோரியுள்ளேன். அவன்கார்ட் தொடர்பிலும் நான் சட்ட மா அதிபருடன் மீளவும் பேசுகின்றேன்.
குமரன் பத்மநாதன் மற்றும் அவன்கார்ட் வழக்குகள் தொடர்பில் இதுவரையில் நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையிலேயே சட்ட மா அதிபர் நீதிமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
விசாரணைகளின் போது குமரன் பத்மநாதன் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். அவன்கார்ட் சம்பவம் தொடர்பிலும் வழக்குத் தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Expedite the matter,why so late?
ReplyDelete2015 joker
ReplyDelete