Header Ads



பாராளுமன்ற தேர்தலில் மகிந்தவும், ரணிலும் தோல்வி - வெற்றியடைந்தது மைத்திரியே - பிரசன்ன ரணதுங்க

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் வழியைப் பின்பற்றி நடந்தால் அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு மரியாதை அளிப்பார்கள் என்று பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திவயின வார இதழின் அரசியல் பத்தியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க,

கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்களித்த மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி, அதனூடாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

பொதுத் தேர்தலில் மஹிந்த மட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் தோல்வியடைந்தது. வெற்றிபெற்றது மைத்திரிபால மட்டும்தான். அதன் காரணமாகவே அவர் இரு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு உதவியதன் நன்றிக்கடனாகவே அவர் சுதந்திரக் கட்சியைப் புறக்கணித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியுள்ளார். அதன் காரணமாகவே ஜே.வி.பி.க்கும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படும் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். இனியும் அவர் அவ்வாறு செயற்பட முடியாது.

தவிரவும் அவரது கட்சி மற்றும் அக்கட்சி முக்கியஸ்தர்கள் போன்று பிரிவினைவாதம், சமஷடிக் கோரிக்கை எதுவும் முன்வைக்கவும் முடியாது. இனி அவர் முழுநாட்டினதும் பொதுவான அரசியல்வாதியாக செயற்பட வேண்டும். 

மறைந்த முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட்டால் சம்பந்தனுக்கு அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு கிடைக்கும். நாங்களும் வேற்றுமைகளை மறந்து அவரின் தலைமைப் பதவியின் கீழ் எதிர்க்கட்சியில் செயற்படத் தயார் என்றும் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.