Header Ads



லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் விளக்கம்..!

லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒருவர் உயிரிழந்ததுடன் அவர் சிகிச்சை பெற்ற நாட்களுக்கான தொகையினை உரிய தரப்பினர் செலுத்தாததால் அவரது உடலை வைத்தியசாலை நிர்வாகம் வழங்க மறுத்ததாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தனியார் நிறுவனம் இருதய சத்திரசிகிச்சைக்கென அண்ணளவாக ஏழு இலட்சம் ரூபாவை அறவிடுகிறது. இத்தொகையில், நோயாளியின் தரப்பில் 3 இலட்சம் ரூபா மட்டுமே செலுத்தப்பட்டது. இந்நிலையில் நோயாளியின் உடல் நிலையினை கருத்திற் கொண்டு அவருக்கு அடிப்படை சிகிச்சையினை வழங்குவதற்காக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எவ்வித மேலதிகக் கட்டணமும் செலுத்தப்படாத நிலையில் அவர் சேர்க்கப்பட்டார்.

நோயாளி கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 25 ஆம் திகதி அவருக்கு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான நிலையில் நோயாளியை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கோரி நோயாளியின் உறவினர்கள் தரப்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.
நோயாளி உயிரிழந்ததும் அவரது உறவினர்களிடம், அவர் நீண்டநாள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தைக் கோரியும் அவர்கள் அதனைச் செலுத்தவில்லை.
எனவே, பணத்தைச் செலுத்துமாறு அவரது உறவினர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் கூறியது. இந்நிலையில் மொத்தமாக 3,13,960 ரூபா செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்களது குடும்பத்தினரும் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்ததில் ஐந்து இலட்சம் ரூபா தருவதாக கூறினர். மிகுதிப் பணமான 9,66,259 ரூபாவை செலுத்தவென கால அவகாசம் கேட்டனர். இதன்படி 6 மாத காலத்திற்குள் மிகுதிப் பணத்தைச் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் உறவினர்கள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில், சடலத்தை ஒப்படைக்க மறுப்பதாகக் கூறி முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்திய செய்தி
சடலத்தை ஒப்படைக்குமாறு தனியார்
ஆஸ்பத்திரிக்கு நீதிமன்றம் உத்தரவு

தனியார் வைத்தியசாலைக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமலே  சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலைக்கு கொழும்பு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைத்தியசாலைக் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்று தங்கள் வைத்தியசாலையில் உயிரிழந்த  ஒருவரின் சடலத்தை பணயமாக வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு  நாரஹேன்பிட்டி ‘லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனம்’  சடலமொன்றை பணயமாக வைத்திருந்ததாகவும் சடலத்தை விடுவிக்க வைத்தியசாலைக் கட்டணமாக 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலுத்துமாறு அது கோரியதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டது. 

இந்த நிலையிலேயே, சடலத்தை உடனடியாக விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;

இருதய நோயினால் பாதிக்கப்பட்ட   தலுவத்தே பாலபட்டபந்திகே திலுக் தலுவத்தே என்ற 62 வயதானவர் மேற்படி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, கடுமையாக சுகவீனமுற்று தொடர்ந்தும் இந்த வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

எனினும் தங்கள் வைத்தியசாலைக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை இறந்தவரின் உறவினர்கள் செலுத்தாததால், அதற்குரிய 14 இலட்சம் ரூபாவை செலுத்திய பின்பே சடலத்தை ஒப்படைக்க முடியுமெனக் கூறி உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க வைத்தியசாலை மறுத்துவந்தது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவரினால் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து இது தொடர்பாக கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.                               ஒருவரின் சடலத்தை பலவந்தமான முறையில் தடுத்து வைக்க எவருக்கும் உரிமை கிடையாது எனக் கூறிய நீதிமன்றம்,  சடலத்தை உடனடியாக  விடுவிக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.

ஐந்து இலட்சம் ரூபாவிற்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதாக உறுதிமொழியளித்து நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், வைத்தியசாலைக்கு மூன்று இலட்சம் ரூபாவை முற்பணமாகவும் உறவினர்கள் செலுத்தியிருந்தனர்.

சத்திர சிகிச்சையினால் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிர்வாகம் உதாசீனம் செய்து, தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைத்திருந்து சிகிச்சையளித்து வந்ததாகவும் இறுதியில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வைத்தியசாலைக்கு செலுத்த வேண்டிய 14 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட கட்டணத்தைச் செலுத்திய பின்பே சடலத்தை ஒப்படைக்க முடியுமெனவும் கூறி கடந்த ஒரு வார காலமாக இந்த சடலத்தை வைத்தியசாலை நிர்வாகம் பலவந்தமான முறையில் பணயமாக வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே பொலிஸ் முறைப்பாட்டிற்கமைய இந்த விடயம் நீதிமன்றம் சென்ற நிலையில், கட்டணத்தைச் செலுத்தாமலே சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு கடுமையாக உத்தரவிட்டது.

2 comments:

  1. Anyhow, now the medical sector is doing business. There is no place for human live among the business oriented doctors. But there will be someone in exception

    ReplyDelete
  2. I also have bad experience in kandy suwasevena hospital.

    ReplyDelete

Powered by Blogger.