Header Ads



என்னைவிட அதிக வாக்குகளை, ஹிஸ்புல்லாவினால் பெறமுடியாது - பிள்ளையான்

வெற்றிலைச் சின்னம் அதிகூடிய ஆசனங்களைப்பெற்று வெற்றி பெற்றால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரங்களை நாங்கள் கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திக்கூட்டமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடுகின்றது.

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் எழுச்சியை நோக்கி மீன்பாடும் தேன்நாடு 05 ஆண்டு மக்கள் நலன்திட்ட தேர்தல்” என்னும் தலைப்பிலான விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று செங்கலடியில் நடைபெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய சந்திரகாந்தன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்டவர்கள் தமிழ் மக்களாகும். இந்த நிலையில் தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரே வெற்றி பெறுவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவருவது ஒரு போலிப்பிரசாரம் ஆகும்.

இதனைக்கூறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்தவித அருகதையும் இல்லை. கிழக்கு மாகாண சபையினை முஸ்லிம் காங்கிரசிடம் தாரை வார்த்தவர்கள் இங்கு நாங்கள் முஸ்லிம்களுக்கு வாக்கு பெற்றுக்கொடுக்கின்றோம் என்று கூறுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. எங்களின் பலம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு நன்றாக தெரியும். நாங்கள் வெற்றி பெற்றால் அமைச்சு ஒன்றைப்பெற்று மக்களுக்கு சேவையாற்றுவோம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெறுபவர்கள் தங்களது உரிமைப்போராட்டத்தினை முன்னெடுக்கப்பட்டும்.

எங்களைப் பொறுத்தவரையில் இங்கு எந்த போராட்டத்தினையும் நடாத்தி நாங்கள் எதனையும் பெறமுடியாது. நாங்கள் வரும் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுடன் சென்று சேவையாற்றுவதன் மூலமே எமக்கான உரிமையினைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இந்த தேர்தலில் 30ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெறும். அவ்வாறு பெறும்போது எவ்வாறு ஹிஸ்புல்லா வெற்றி பெற முடியும் என்பதை சாதாரண அறிவுள்ள மக்களே புரிந்து கொள்வார்கள். இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புரியாமல் உள்ளது கேலிக்குரிய விடயமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் பலம் வாய்ந்த வேட்பாளராக நான் இருக்கின்றேன். என்னைவிட அதிகமான வாக்குகளை ஹிஸ்புல்லாவினால் பெறமுடியாது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் எந்த தமிழ் வேட்பாளர்களினாலும் அதிக வாக்குகளை பெறமுடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் சந்தர்ப்பம் வழங்கவில்லையென்பதற்காக கணேசமூர்த்தி யானையில் வந்துள்ளார். பணத்திற்காக கொம்மாதுறையை சேர்ந்த மாமாங்கராசா போட்டியிடுகின்றார். இதேபோன்று பணத்திற்காக சிவகீதா போன்றவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் உங்கள் வீடுகளுக்கு வாக்கு கேட்டு வரும் போது மக்கள் தகுந்த பாடத்தினை புகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.