நான் புகைப்படங்களில் தோன்றினாலும், மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கிறேன் - பெரோஸா
மக்கள் மனங்களில் இருந்து என்னை ஒருநாளும் பிரிக்க முடியாது. நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் அலை என்னை வியப்படைய வைத்துள்ளதுடன் தொடர்ந்தும் எனது வெற்றிக்காக கொழும்புவாழ் மக்கள் உழைத்து வருவதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரும், அமைப்பாளருமான பெரோஸா முஸம்மில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் புதுக்கடை பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பெரோஸா முஸம்மில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மத்திய கொழும்பில் இருந்து குடியெர்ந்த மக்கள் அதிகளவில் கொலன்னாவை பகுதியிலேயே வாழ்கிறார்கள். சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இப்பகுதியில் வாழ்கின்ற போதிலும் அந்தப் பகுதியில் சகல வசதிகளும் கொண்ட முஸ்லிம் பாடசாலையொன்று இல்லாத நிலை காணப்படுகின்றது. அவ்வாறே கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் இன்னும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
நவீன உலகில் கல்விக்கு நிகராக எதுவும் இல்லாத நிலையில் கல்விச் செல்வமே அழியாத செல்வமாக காணப்படுகிறது. எதிர்கால சந்ததியினர் கல்வியில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படும் இக்காலப்பகுதியில் அவர்களின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு இப்போதே அடித்தளம் இடப்பட வேண்டும். கல்வியில் முன்னேறிய சமுதாயமாக மாற வேண்டுமானால் நல்ல கல்லூரிகளும் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்காகவே நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக முன்னெடுத்துச் செல்கின்றோம். ஆங்கிலக்கல்வி, கணணி பயிற்சிகள் மற்றும் தையல் கலை என்பனவும் எமது அமைப்பினூடாக இலவசமாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் எமது அமைப்பில் உள்ள பலர் நன்மை அடைந்துள்ளதுடன் அவர்களின் பிள்ளைகள் கல்வியில் உயர் நிலை அடைந்துள்ளமையும் குறிப்பிடக் கூடிய விடயமாகும்.
இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தலில் நாம் சென்ற சகல பகுதிகளிலும் எமக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. சில இடங்களுக்கு செல்வதற்கு கால நேரம் குறைவாக காணப்பட்டாலும் கொழும்பில் உள்ள அனைவரினதும் பிரச்சினைகளுக்கு கட்சி பேதமின்றி சேவையாற்றுவேன். நான் புகைப்படங்களில் தோன்றினாலும் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கிறேன். அவர்கள் எனது வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment