Header Ads



ஹக்கீம் ரிசாத் ஆகியோருக்கு, புத்தளம் மக்களின் கண்ணீர் கடிதம்.!

தேசிய ரீதியாக உங்களது கட்சியின் வாக்குப் பலத்தை அதிகரிப்பதற்கும், பாராளுமன்ற பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கும் முனைப்புடன் வியூகங்கள் அமைத்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் சில நிமிடங்களை இதனை வாசிப்பதற்கு செலவிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்…

மர்ஹூம் அஷ்ரபின் மரணத்தின் பின்னால் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அரசியல் சக்தி தலைமைத்துவ, பிரதேசவாத, சுயநல போட்டி, வேறுபாடுகளால் பிளவுபட்டு, ஒவ்வொருவரும் தனக்கொரு காங்கிரசை உருவாக்கிக் கொண்டு தலைவர் அஷ்ரபின் புகைப்படங்களுடன் தேர்தல் கால அரசியலுக்காக மக்கள் மன்றத்தில் தமது இருப்பை உறுதிப்படுத்த மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில்...

நீங்கள் தேசிய ரீதியாக உங்கள் கட்சியின் ஆசனங்களை அதிகரிப்பதிலும், உங்களின் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை அதிகரிப்பதன் மூலம் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதிலும், பரஸ்பரம் உங்கள் கட்சியின் பிரதிநிதி தோற்றுப் போனாலும் அடுத்த காங்கிரசின் பிரதிநிதயை வரவிடாமல் தடுப்பதிலும் இம்முறை நீங்கள் இருவரும் வகுத்த வியூகம் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் அரசியலை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியதன் தேவையினை உணர்த்தி உள்ளது.

உங்கள் கட்சியின் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் மூலம் தங்களின் பேரம் பேசும் சக்தியை வளர்ப்பதில் புத்தளம் மக்களாகிய எமக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை. அமைச்சர் ரவூப் ஹகீம் மட்டக்களப்பிலும், வன்னியிலும் தனியாக மரச்சின்னத்தில் கேட்பதற்கும், அமைச்சர் ரிசாத் திகாமடுல்லை (அம்பாறை) இல் தனியாக மயில் சின்னத்தில் கேட்பதற்கும் இருக்கின்ற உரிமை புத்தளம் மக்களாகிய எமக்கு கடந்த ஆறு தேர்தல்களில் பெற்ற அனுபவத்தில் இருந்து தனியாக களமிறங்குவதட்கு இருக்கிறது என்ற யதார்த்தத்தையாவது நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

உண்மையில் உங்களின் கட்சி நலன்களுக்கு அப்பால் நின்று எமது தொகுதியின் நலன் பற்றி சரியாக நீங்கள் சிந்திப்பீர்கள் என்றால் எமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்வீர்கள். ஏற்றுக் கொண்டுமிருந்தீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் சகோதரர் நஸ்மி மட்டும் இருந்த நிலையில் இறுதி நேரத்தில் உங்கள் இருவரின் போட்டியினால் ஏற்கனவே பெரும்பான்மைக் கட்சிகளின் மூலம் பாடம் பெற்ற சகோதரர்க்ளான நவவியும் பைரூசும் களம் இறக்கப்பட்டுள்ளமை உங்கள்  உள்ளத்தில் கொஞ்சமேனும் மனசாட்சி இருக்குமென்றால், உங்களின் உள்ளத்துக்கு ஒரு உறுத்தலாகவே இருக்கும். 

இவற்றுக்கும் அப்பால், நீண்ட தூய்மையான முயற்சியினால் தியாகங்களோடு வளர்ந்த எமது கூட்டு முயற்சியில், நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் தமது தவறுளைவிட்டும் மீண்டு எமது பழைய - முன்னாள் அரசியல் வாதிகளும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களையும் உள்வாங்கி நாம் மேற்கொண்ட முயற்சியில், இன்று உங்களின் பணம் மற்றும் அதிகார பலத்தினால் அவர்களை விலைக்கு வாங்கி கேவலமான அரசியலை எமது மண்ணில் நீங்கள் செய்து வருவது எமது மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய அநியாயமும் துரோகமும் என்பதை மறந்து விடாதீர்கள். 

சமூகத்தின் கூட்டு முன்னெடுப்பின் மூலம் அடுத்த ஆறு வருடங்களுக்கு பாராளுமன்றத்தில்   எமது தலைவர்களாக அழகு பார்க்க இருந்தவர்களை ஒரே இரவில் சில இலட்சங்களை வழங்கி தேர்தல் முடியும் வரை சிரிகொத்தாவின் கதிரைகளை சூடேற்றிவிட்டுச் செல்வதற்கே அருகதை உள்ளவர்களாக சமூகத்திற்கு அவர்களை இனம் காட்டியதற்கு கோடி நன்றிகள். 

மீண்டும் சந்திப்போம்.

இப்படிக்கு,
புத்தளம் மக்களின் கண்ணீர் துளிகள் 

முஹம்மத் இன்பாஸ்

1 comment:

  1. ippayum kettupokavillai ellorum ottumaiyaka vaakalithal insha allah 2 perai vettri perachchaya mudiyum. Ottumai ennum kayittai patyripidiyungal allah pothumanavan.

    ReplyDelete

Powered by Blogger.