ISIS ல் இலங்கை முஸ்லிம் விவகாரம் - ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் (வீடியோ)
ISIS ல் இணைந்து, கொல்லப்பட்ட இலங்கை முஸ்லிம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு கடிதம்.
சிரியா போரில் இலங்கை முஸ்லிம் ஒருவர் ISIS உடன் இணைந்து போரிட்டு உயிரிழந்தது தொடர்பாக, இலங்கை முஸ்லிம்கள் சார்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் அதன் கடுமையான கண்டனத்தைத் வெளிப்படுத்துகிறது. தம்மை கலீபா என்று அழைத்துக் கொள்ளும் இந்த தீவிரவாத முஸ்லிம் அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிய ஷரீ'ஆ வுக்கும் மனிதாபிமான சட்டங்களுக்கும் முரணானது மட்டுமல்லாமல் இஸ்லாத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இஸ்லாம் கருணை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு ஒரு மார்க்கம். அது அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை முற்றாகத் தடுத்துள்ளது.
இஸ்லாத்தின் முக்கியமான இந்த அடிப்படை அம்சங்களை மதிக்கத் தவறிய ISIS இயக்கத்தையும் மற்றும் அதன் தலைவரான அபூபக்கர் பக்தாதியையும் உலக இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும், எவ்வித தயக்கமுமின்றி தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை, தவறாக வழிநடத்தப்பட்ட தனிநபர்களின் நடவடிக்கை என்பதை வலியுறுத்த விரும்பும், அதே வேளை நாட்டின் சட்டத்தை மதியாது எவராவது செயட்படுவராயின், அவர்களை விசாரித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தயவு தாட்சண்யமின்றி தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற நடவடிக்கைகளில் இனியும் கலந்து கொள்ள விருப்போருக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.
இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு சமூக இயக்கம் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், அரசு மேற்கொள்ளும் எந்த விசாரணையிலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராய் உள்ளது என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம். (வீடியோ)
Post a Comment