Header Ads



இளைய தலைமுறைக்கு குடும்ப ஒற்றுமை, பரம்பரை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் - அஷ்ஷெய்க் ஸக்கரிய்யா (ரஷாதி)

-யாழ் அஸீம்-

'யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்டதன் பின்னர் குடும்பங்கள் சிதைவடைந்து இலங்கையில் பல பகுதிகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எங்கு நாம் பிரிந்து வாழ்ந்தாலும் குடும்ப உறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்கு குடும்ப ஒற்றுமை பற்றியும், குடும்பத்தினருடைய உறவு முறைகள், பரம்பரை பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்' என அல்ஹாபிழ் எம்.எல்.எம். ஸகரிய்யா (ரஷாதி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பு தெஹிவளை ஸஹ்ரான் மண்டபத்தில் நடாத்திய  நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். துஆசுழு அமைப்பின் தலைவர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.எம். முக்தார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌலவி ஸக்கரிய்யா தொடர்ந்து உரையாற்றுகையில்,

'யாழ்ப்பாண முஸ்லிம் மக்களது வாழ்க்கை பலதிசைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றது. பல்வேறு கூறுகளாக தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொண்டார்கள். எமக்கே உரிய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் மாற்றமடைந்து கொண்டு செல்கிறது. எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொண்டதும் ஒரு முக்கிய காரணமாகும்.

யாழ் மண்ணில் குடும்பங்களுக்கிடையே மிக நெருக்கமான உறவுகளும், தொடர்புகளும் காணப்பட்டன. யாழ்;ப்பாண சோனக தெருவின் அமைப்பானது குடும்பங்கள் இணைந்து சிறப்பாக வாழ்வதற்குரிய அழகான சூழலைக் கொண்டிருந்தது. ஆனால் இன்று திருமண வீடுகளிலும், ஜனாஸாக்களிலும் மட்டுமே உறவை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு தாய், தந்தையரைத் தவிர உறவினர்களைக் கூட அடையாளம் காண முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் மண்ணில் இரண்டறக் கலந்துறவாடிய குடும்ப உறவுகள் இன்று தேய்வடைந்து போனது. சிதறி வாழும் வாழ்க்கை காரணமாக குடும்ப உறவுகளுக்கிடையிலும் இடைவெளி ஏற்பட்டு விட்டது கவலைக்குரியதாகும். உறவினர்களை மட்டுமன்றி தமது மூதாதையரைப் பற்றியும் பரம்பரை பற்றியும், தமது தாயக மண்ணின் பெருமை பற்றியும் அறியாதவர்களாக வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி எமது இளைய தலைமுறையினர் யாழ் மண்ணில் மீள்குடியேறி வாழ்வதிலும் ஆர்வமின்றியே காணப்படுகின்றனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் எவ்வளவு வசதியுடன் இங்கு வாழ்ந்தாலும் கூட தமது சொந்த மண்ணில் உற்றார் உறவினருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையைப் போன்ற உன்னத வாழ்க்கை அமையப் போவதில்லை. குடும்ப உறவுகள் பேணப்படாத விடத்து எமது அமல்களும் கூட அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. குடும்ப உறவுகளையும், அமானிதத்தையும் பாதுகாக்காமல் மறுமையில் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடந்து செல்ல முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே யாழ் மண்ணில் மீள்குடியேறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். கல்வி, வியாபார, கூட்டு வாழ்க்கை போன்ற பல்வேறு வாய்ப்புக்களையும், வளங்களையும், கொண்ட தாயக மண்ணில் எமது உரிமையை வலுப்படுத்துவதும், எமது மண்ணைப் பாதுகாப்பதும் யாழ் மண்ணில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுடைய தலையாய கடமையாகும். எக்காரணத்துக்காகவும் எமது காணிகளை, எமது வாழும் உரிமையை இழந்து விடுவதற்கான சந்தர்;ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட தாயக பூமியைப் பாதுகாப்பதும், யாழப்பாண சோனக தெருவின் கடந்த கால வாழ்க்கைக்கு உயிரூட்ட வேண்டியதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும். எமது மூதாதையர்கள் வாழந்த தாயக பூமியை அடுத்து வரும் எமது பரம்பரைக்கு கையளிக்கும் பாரிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகும். எனவே அறிவு பூர்வமான திட்டமிடலுடனும், அனுபவம் மிக்கோரரின் வழிகாட்டல்களுடனும் இம்முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர் எம்.எஸ்.ஏ.எம். முக்தார் தலைமை உரை நிகழ்த்தினார். அல்ஹாபிழ் எம்.எம். கியாஸ் அவர்களது துஆப் பிரார்த்தனையை தொடர்ந்து செயலாளர் ஏ.எம். சப்ரின் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

No comments

Powered by Blogger.