ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் - றிசாத் பதியூதீன்
-எம்.வை.அமீர்-
கடந்த 30 வருடகாலமாக தங்களின் சுகபோகங்களுக்காக அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு அவர்களை அரசியல் அனாதைகளாக வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் அரக்கப்பிடியில் இருந்து அகன்று வாருங்கள் எல்லா உரிமைகளையும் பெற்ற உங்களை நீங்களே ஆளும் நிலைக்கு நாங்கள் கொண்டு வருகிறோம் அள்ளாதுவிடின் எதிர்காலத்தில் எங்களை நிராகரித்து விடுங்கள் என்கிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியூதீன்.
அமைச்சர் றிசாத் பதியூதீன் அம்பாறைக்கு மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் இரண்டாம் நாளான 2015-07-26 அன்று சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது வர்த்தக சமூக அமைப்பின் தலைவரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஏ.ஆர்.எம்.அஸீமுடையாய தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்களின் படத்தையும் பெயரையும் பயன்படுத்திக்கொண்டு கட்சிப் பாடலைப் போட்டு மக்களை உசுப்பேத்தி அவர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்போர் மறைந்த மாமனிதர் அவர்களின் மனைவியிடம் சுகமாவது விசாரித்து இருப்பார்களோ தெரியாது என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் தற்போதைய தலைமைத்துவத்தின் அராஜக போக்கினால் அக்கட்சியில் இருப்போர் மனச்சோர்வடைந்து மக்களுக்காக செயற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து வருவதாகவும் கட்சி என்பது வேதம் இல்லை என்றும் மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சியுடன் இணைந்து செயற்பட வருமாறு அறைகூவல் விடுத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிஸின் தலைமைத்துவத்துக்கு தலைமை அந்தஸ்த்து வழங்கிய சாய்ந்தமருது மக்கள் அக்கட்சியினால் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அமைச்சர் றிசாத், சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் அதற்காக சாய்ந்தமருது ஜெமீலுக்கு தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கும் என்றும் உறுதியளித்தார். பிரதேசத்துக்குப் பிரதேசம் சென்று உங்களுக்கு தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை வழங்குவோம் என பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாங்கள் அல்ல என்று தெரிவித்த அமைச்சர் தாங்கள் செய்வதையே சொல்வோம் என்றார்.
Post a Comment