Header Ads



"மஹிந்த ராஜபக்ஷவுக்காக ஆசிர்வாதப் பூஜைகள், நடாத்திய பௌத்த விகாரைகளுக்கு ஏமாற்றம்"

குருநாகல் மாவட்டத்தில் தேர்தலுக்கு போட்டியிடுவதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ கிருவாபத்துவே மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டாரென மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி தெரிவித்துள்ளார். 

இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு விகாரைகளும் படை வீரர்களும் தமக்கு நெருங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாலுமே தான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக மாவத்தகமவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது பரம்பரையினரையும் அரசியலுக்கு அழைத்த வந்த கிருவாபத்துவே மக்களுக்கு அவர் இழைத்துள்ள பாரிய துரோகமாகும். 

அத்துடன் தென்பகுதியிலுள்ள பெளத்த விகாரைகளுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்காக ஆசிர்வாதம் வழங்கிய தென் பகுதியிலுள்ள மதகுருமார்களுக்கும் இக்கூற்று அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக சில விகாரைகளில் மாதக் கணக்காக ஆசிர்வாதப் பூஜைகள் நடைபெற்றன. இவ்வாறு தம்மை அர்ப்பணித்த மகா சங்கத்தினரை எள்ளளவும் மதிக்கவில்லை யென்பது அவரது கூற்றிலிருந்து தெளிவாகிறது. 

அது மட்டுமல்ல ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அவரது சகோதரர் சமல் ராஜபக்ஷ, அவரது உறவுக்காரரான நிருபமா ராஜபக்ஷ, மகன் நாமல் ராஜபக்ஷ மட்டுமல்ல மஹிந்த அமரவீர உட்பட அனைவருடனும் தமக்கு எவ்வித நட்போ, உறவோ இல்லையென்று கூறுமளவுக்கு அவரது கூற்று அமைந்துள்ளது. 

யுத்தத்தின் போது தன்னையொரு துட்டகைமுனு மன்னனாக தென்பகுதி படை வீரர்களை பெருமைப்படுத்திய ராஜபக்ஷ மாவத்தகமவில் ஆற்றிய உரை மூலம் தென் பகுதியில் படை வீரர்கள் இல்லையென்பதை காட்டியிருக்கிறார். 

கப்பல் வராத துறைமுகத்தையும், விமானம் தரையிறங்காத விமான நிலையத்தையும் போட்டிகள் நடைபெறாத கிரிக்கெட் மைதானத்தையும் உருவாக்கி தரகுப் பணத்துக்காக மட்டும் ஓரிரண்டு வாகனங்கள் ஓடும் வகையிலான காப்பட் வீதிகள் அமைந்துள்ளார். 

இந்த நடவடிக்கைகளின் போது எந்தவொரு இளைஞர் யுவதிக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படவில்லை. அம்பாந்தோட்டை மக்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுக்கவோ விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான வேலைத் திட்டமோ, கால்நடை அபிவிருத்திக்கான வேலைத் திட்டமோ மஹிந்தவால் முன்னெடுக்க இல்லாமல் போனது. 

இந்த நிலையில் அவர் குருநாகவிற்கு தப்பி போனது ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

நான் வடமேல் மாகாண மக்களுக்கு ஒரு விடயத்தை கூறிக் கொள்ள விரும்புகிறேன். கிருவாபத்துவே மக்களையும் நாட்டையும் ஏமாற்றியதைப் போன்றே மஹிந்த ராஜபக்ஷ வடமேல் மாகாண மக்களையும் ஏமாற்றப் போகிறார். 

முகஸ்துதிக்காக வடமேல் மாகாண மக்களை வர்ணித்துக் கொண்டு, குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள மஹிந்த தனது பத்தாண்டு கால ஆட்சியின் போது வடமேல் மாகாண உறுப்பினர்களுக்கு பெறுமதியான எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக தனது நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் அர்ப்பணிப்பு செய்த எஸ்.பி. நாவின்ன போன்ற கட்சியின் தலைவர்களை கட்டாய ஓய்வில் இருக்கச் செய்தார். வடமேல் மாகாணத்துக்கு கொஞ்சமேனும் தொடர்பில்லாத, உறவில்லாத எதனோல்காரர்கள் மது விற்பனையாளர்களை வடமேல் மாகாணத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆக்கினார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

1 comment:

  1. மிகச்சரியான கண்ணோட்டம் இது.

    ReplyDelete

Powered by Blogger.