Header Ads



"மஹிந்தவின் கன்னத்தில் அறைந்த மைத்திரி, ரணிலுக்கு தலையில் ஒரு குட்டும் போட்டார்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விஷேட உரையின் மூலம் மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்துள்ளதுடன் ரணிலுக்கு தலையில் ஒரு குட்டும் கொடுத்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த ஜனவரி 8ம் திகதி மஹிந்தவின் ஊழல் மற்றும் மோசடி நிறைந்த ஆட்சியை மக்கள் தோற்கடித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எவருக்கும் முன்னேறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக்ஷ கட்சியாக மாற்றியமைத்திருந்தார்.

தன் தேவைக்கேற்றவாறு அரசியலமைப்பை மாற்றியமைத்து மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக முயற்சித்தார்.

ஆனால் ஜனவரி 08ம் திகதி மக்கள் மஹிந்தவின் ஊழல் மற்றும் மோசடி நிறைந்த ஆட்சியை தோற்கடித்து மைத்திரி ரணில் கூட்டணியில் புதிய ஆட்சியை உருவாக்கினர்.

தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து மக்கள் பிரதமர் ஒருவரை தெரிவு செய்ய முற்படும் சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியையும் தானே வழுங்கிக் கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கியமையானது ஜனவரி 08ம் திகதி மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பானது. இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோகம் இழைதுள்ளார்.

அதேபோல் ஜனாதிபதி தனது விஷேட உரையில் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ரணிலின் மண்டையில் ஒரு குட்டு போட்டுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றச்சாட்டிற்காக அர்ஜுன் மகேந்திரனை பதவி நீக்குமாறு ரணிலிடம் கூறிய போதும், பிரதமர் அதை கண்டுகொள்ளவில்லை என்று ஜனாதிபதி தனது விஷேட உரையில் கூறியிருந்தார்.

ஆகவே ஜனாதிபதியின் உரையில் இருந்து மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம்பெற்றிருப்பது உறுதியாவதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.