Header Ads



தன்னை காட்டிக்கொடுத்துள்ளதாக கோபமடைந்த மகிந்த, சுசிலின் கன்னத்தில் அறைந்தார் - அசாத் சாலி

துமிந்த சில்வாவுக்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில்  பிரேம ஜயந்தவின் கன்னத்தில் அறைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்  அசாத் சாலி தெரிவித்திருக்கிறார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

தனக்கு வேட்பு மனு  வழங்க வேண்டுமென துமிந்த சில்வா சுசில் பிரேமஜயந்தவுடன் விவாதிக்கும் சமயம் அங்கு வந்த மகிந்த  ராஜபக்ஷ நியமனம் வழங்குமாறு  சுசிலிடம் கூறினார். இதற்கு சுசில் பிரேமஜயந்த, துமிந்தவின் அண்ணன்  ஐ.தே.க.வுடன் இருப்பதாக கூறி நீங்கள் தான் வேட்பு மனு அளிக்க வேண்டாமென தெரிவித்தீர்கள் என மகிந்த ராஜபக்ஷவுக்கு  பதிலளித்துள்ளார்.

தன்னை காட்டிக்கொடுத்துள்ளதாக கோபமடைந்த மகிந்த ராஜபக்ஷ  சுசிலின் கன்னத்தில் அறைந்தார். இவ்வாறான  நிலையில் மகிந்த ராஜபக்ஷ பிலியந்தலையில் கூட்டத்துக்கு சென்றார்.

அக்கூட்டத்தில் பேசும் சமயம் சுசில் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் முறையிடப்போவதாகக் கூறுவதாகவும் தொலைபேசியில் மகிந்தவுக்கு குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து மகிந்த ராஜபக்ஷ குழுவினர் பிலியந்தலை கூட்டத்தை இடை நடுவில் நிறுத்தி சுசிலை சந்தித்து மன்னிப்புக் கோரி பிரச்சினையை சுமுகமடையச் செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மகிந்த, தாக்கியதன் மூலம் சுசில் பிரேமஜயந்த  நான் ஏன் இவர்களின் சொல்படி வேட்புமனு வழங்கினேன் என கவலையடைந்திருப்பார். எனவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் கள்ளர், குண்டர்களுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கோருகின்றேன்.

No comments

Powered by Blogger.