Header Ads



வேறுபட்ட பாதையில், காலடி வைக்கிறார் ராஜபக்ஷ

தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் வேட்புமனுக்களை ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட விதம் சு.க.வின் "தலைவர்' யார் என்பதை காண்பித்துள்ளது.

தேர்தல் அரசியலில் தோல்வி கண்டபின்னர் இரண்டாவது ஆட்டத்தை நாடுவோர் மீது வரலாறு அன்பாக இருப்பதில்லை. 2 ஆம் உலக மகா யுத்தத்தில் பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்சன்ட் சேர்ச்சிலோ அல்லது 1980 களில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியோ இரண்டாவது தடவை புகழைப் பெற்றிருக்கவில்லை.

இப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கிறார். வேறு இரு தலைவர்களினால் முடியாததை வென்றெடுப்பதற்கான முயற்சியாக இது காணப்படுகிறது.

இலங்கையில் ராஜபக்ஷவிற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்கள் எவருமே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. பாராளுமன்றத்திற்கும் மீண்டும் வந்திருக்கவில்லை. இந்த முயற்சியில் ராஜபக்ஷ வெற்றியடைந்தால் புதிய பாதையை ஏற்படுத்தியிருப்பதாக அவரினால் உரிமைகோர முடியும்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி இப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதனைத் தலைமைக் கட்சியாகக் கொண்ட ஐ.ம.சு.மு.வின் பிரதமர் பதவிக்கான உத்தியோகப்பற்றற்ற வேட்பாளராக உருவாகியிருக்கிறார்.

தனக்கும் தனது அநேகமான ஆதரவாளர்களுக்கும் வேட்புமனுக்களை ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட விதத்தின் மூலம் யார் "தலைவர்' என்பதை அவர் காண்பித்திருக்கிறார். சு.க. மற்றும் ஐ.ம.சு.மு.வின் தலைவராக சிறிசேன இருக்கின்றபோதிலும் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்ட வழிமுறையின் மூலம் தலைவர் யார் என்பதை ராஜபக்ஷ வெளிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனது சகாவான சிறிசேனவிடம் ஆறுமாதங்களுக்கு முன்னர் ராஜபக்ஷ தோல்வி கண்டிருந்தார். அச்சமயம் என்ன நடந்தது என்பதிலிருந்து அவர் மீண்டும் பின்நோக்கி சென்றிருப்பதாகத் தென்படுகின்றது. சு.க.வும் ஐ.ம.சு.மு.வும் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழ் திரும்ப வந்துள்ளன.

மைத்திரி என அழைக்கப்படும் சிறிசேன அரசியலின் கரடுமுரடான சுவையை உள்ளீர்த்துக் கொண்டிருக்கவில்லையென உடனடியாகவே இலங்கை ஊடகங்கள் அவதானிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

எவ்வாறாயினும் தனது நிலைப்பாட்டை சிறிசேன கடந்தவார உரையில் விளக்கியிருந்தார். தான் பலவீனமாக இருக்கக்கூடும் என்ற தாக்குதல் குறித்து அவர் வெளிப்படுத்தியிருந்தார். தனக்கு முன்னர் பதவியில் இருந்தவர் தொடர்பான எதிர்மறையான உருவகத்தை வெளிப்படுத்துவதில் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

அதிகாரத்திற்குத் திரும்பவும் வருவதற்கு ராஜபக்ஷ எவ்வாறு முயற்சித்திருந்தார் என்பதை எடுத்து விளக்கியிருந்தார் .அத்துடன் மேலும் ஓரடி முன்நோக்கிச் சென்று ஐ.ம.சு.மு. பெரும்பான்மை பலத்தை பெற்றாலும்கூட ராஜபக்ஷவைப் பிரதமராக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.


இதேவேளை சிறிசேனவின் அறிக்கையை மிகவும் பகைமையானதென ராஜபக்ஷவை திரும்பவும் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் முன்னணி பிரமுகரும் இடதுசாரியுமான 76 வயதுடைய வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு முரணாக சிறிசேனவின் அறிக்கை ஐ.தே.கட்சிக்கு அதிகளவு சாதகமாக அமைந்திருப்பதாக நோக்கப்பட்டது. இதுதொடர்பில் ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை மேற்கோள் காட்டியிருந்தார்.


தனது முக்கியமான உரையில் தனது கருத்துகளை நம்பிக்கையூட்டும் விதத்தில் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார். சு.க.வின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வதை தான் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜனவரி தேர்தலில் அரசியல் கட்சிகள், சிவில் சமூகக் குழுக்களென 49 எண்ணிக்கை கொண்டவற்றின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தபோதிலும் சு.க.வின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தனது கருத்துகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஜனவரி தேர்தலில் ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு , முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி., ஜனநாயக கட்சி, ஜாதிக ஹெல உறுமய ஆகியவை அவரை ஆதரித்திருந்தன.

ராஜபக்ஷ தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருந்திருந்தால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீர்த்துப்போக வைக்கும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மற்றும் வேறுபல நடவடிக்கைகள் யதார்த்தபூர்வமாக இருக்காது என்பது ஜனாதிபதியின் கணிப்பீடாக உள்ளது. தனது உரையின் மூலம் அவருக்கு எதிராக களத்தில் சென்றுகொண்டிருக்கும் கருத்தை சிறிசேன நிறுத்தியிருக்கின்றார்.

இந்த மாத முற்பகுதியில் ராஜபக்ஷவின் நியமனம் தொடர்பான செய்திகள் குறித்து அவர் மௌனமாக இருப்பதாக கருத்துக்கள் காணப்பட்டன. இதேவேளை ஐ.தே.க.வுக்கும் ராஜித சேனாரட்ண தலைமையிலான சு.க.குழுவிற்கும் இடையில் தேர்தல் பிணைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ராஜித சேனாரட்ண ராஜபக்ஷ ஆட்சியிலிருந்தும் சிறிசேனவுடன் வெளியேறியிருந்தவர். சேனாரட்ணவின் சகாவான அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராவார். அவருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பூரண ஆதரவு இருப்பதாக  கூறியுள்ளனர்.சந்திரிகாவும் ஐ.தே.க.வுடன் பங்குடைமையை ஏற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை கொண்டிருப்பதாக அர்ஜுன தெரிவித்திருக்கிறார்.

புதிய அணியில் ஜாதிக ஹெல உறுமயவை ஐ.தே.க. இணைத்திருக்கிறது. இப்போது நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணியாக புதிய அணி விளங்குகிறது. தமிழர்கள் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளும் ஐ.தே.க.வின் பின்னால் அணிதிரண்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவையும் இதில் இணைந்திருக்கின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய வம்சாவளித் தமிழர்களின்  மூன்று கட்சிகளை உள்ளடக்கியதாகும். எவ்வாறாயினும் நாட்டிலுள்ள பழம்பெரும் கட்சிகளில் ஒன்றான எஸ்.ஏ.ஆர்.தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ராஜபக்ஷவுக்கு விசுவாசமானதாக தொடர்ந்து இருக்கின்றது. நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வின் அங்கமாக இது தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

ஆயினும் ஊவாவிலும் கண்டியிலும் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
எதிர்பார்க்கப்பட்டது போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தனியாகப் போட்டியிடுகின்றது.

அந்த மாகாணங்களில் உள்ள 29 ஆசனங்களில் 20 ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது அதன் இலக்காகும். 29 ஆசனங்களில் தேசியப் பட்டியலும் உள்ளடங்கும். பிராந்தியத்தில் ராஜபக்ஷவுக்கு எதிரான உணர்வுகளை உணர்ந்துகொண்டதன் மூலம் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த இரு மாகாணங்களிலும் இந்தத் தடவை வேறாக போட்டியிடுகின்றார். அவரின் கட்சி முன்னாள் ஜனாதிபதியின் மற்றொரு நேச அணியாகும்.

இதுவரை ஐ.ம.சு.மு. அல்லது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரு பிரதான அமைப்புகளும் தமிழர் பிரச்சினை தொடர்பாக எதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அண்மையில் "தி இந்து'வுடன் உரையாடியபோது ஐ.தே.க. தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நல்லாட்சி கருத்தீடானது அதிகார பரவலாக்கம் மற்றும் அதிகார பகிர்வை உள்ளடக்கியது என்று குறிப்பிட்டிருந்தார்.

கடைசி ஆறு மாதங்களில் சிறிசேன விக்கிரமசிங்க இணைந்த ஆட்சி தமிழர்களின் உணர்வுகள் தொடர்பான இலக்குடன் சில நடவடிக்கைளை எடுத்திருந்தது. அதேவேளை விடுதலைப் புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான  சாத்தியத்தை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக ராஜபக்ஷ குற்றஞ்சாட்டி வருகிறார்.அத்துடன் சிறுபான்மையினருடன் இணக்கப்போக்கிற்கான குரலையும் எழுப்பி வருகிறார்.

சிறுபான்மை சமூகங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறிசேனவிற்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன. தேர்தல் மறுசீரமைப்புகள், தகவல் உரிமைச் சட்டம் போன்ற ஆகர்சிப்பான பல யோசனைகள் சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை.

இப்போது ஆகஸ்ட் 17 இல் மக்களின் தீர்ப்பிலேயே அவையாவும் தங்கியிருக்கின்றன.  இவ்வாறு "இந்து' பத்திரிகையில் நேற்று வியாழக்கிழமை அதன் நிருபர் ரி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

No comments

Powered by Blogger.