Header Ads



ஜே.வி.பி. க்குள் மீண்டும் உடைவு, சோமவன்ஸ விலகினார் - அவரை தக்கவைக்க முயற்சி என்கிறார் விஜித ஹேரத்

ஜே.வி.பி கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அமரசிங்க, ஜே.வி.பி. கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்து வந்தார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாகவே அவர் அதில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜே.வி.பியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அமரசிங்க, 1988ம், 1989ம் ஆண்டு ஜே.வி.பியின் கிளர்ச்சிக்கு எதிரான அடக்குமுறையின் போது உயிர்தப்பிய ஒரே ஒரு மத்திய செயற்குழு உறுப்பினராவார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அவர், அங்கிருந்து இங்கிலாந்துக்கு சென்றார்.

ஜே.வி.பி.க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து நாடு திரும்பிய அவர், ஜே.வி.பியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், அண்மையில் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைத்தார்.

இதேவேளை சோமவன்ச அமரசிங்க புதிதாக கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.வி.முவின் நிறுவுனர் அமரர் ரோஹன விஜேவீரவின் கொள்கையை ஒத்த கட்சி ஒன்றை முன்னெடுத்துச் செல்ல சோமவன்ச அமரசிங்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோமவன்ஸவின் விலகல் அவரது தனிப்பட்ட முடிவு – ஜே.வி.பியின் பிரசார செயலாளர்

ஜே.வி.பியில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க விலகுவதை கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என அதன் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு எனவும் அதனை அவர் கட்சிக்கு அறிய தரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சோமவன்ச அமரசிங்கவை கட்சியில் தக்கவைக்க கூடியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ள விஜித ஹேரத் அவரது இந்த தீர்மானமானது எந்த விதத்திலும் கட்சியில் பிளவையோ, உடைவையோ ஏற்படுத்துவதாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பியின் சர்வதேச விவகார செயலாளராக கடமையாற்றிய, அதன் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, கட்சியில் இருந்து விலகி கொள்வதாக இன்று அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார். கட்சியில் இருந்து விலகும் தீர்மானத்தை கட்சிக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.