Header Ads



'ஆட்டிசம்' என்றால் என்ன..?

ஆட்டிசம் என்ற சொல் உலகம் முழுதும் பிரபலமாக பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடு பாதிப்புடன் பிறக்கின்றனர். அமெரிக்காவில் 150 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பாதிப்புடன் பிறப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றன. இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இப்பாதிப்பில் இருப்பதாக கூறப்பட்டாலும் உண்மையான எண்ணிக்கை அரசிடம் இல்லை.

தன் முனைப்பு குறைபாடு:ஆட்டிசம் என்பதை, ஒருவகை மூளைச்சிதைவு என கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் ஆட்டிசத்தை மனநோய் பாதிப்பாக பார்க்கும் போக்கு உள்ளது. ஆனால் ஆட்டிசம் என்பது மன நோயல்ல.. அது தன் முனைப்பு குறைபாடு என்பதே சரியானது.

நடவடிக்கையில் மாற்றம்: குழந்தைகளின் நடவடிக்கைகள் வழக்கமான நடவடிக்கையுடன் இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தோற்றத்தில் இயல்பான குழந்தை போலவே இருப்பார்கள். ஆனால், அவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் பெரும் வித்தியாசப்படும். குறிப்பாக அவர்களின் இயல்பு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்காது. மற்றவர்கள் யாரையும் கவனிக்கவே மாட்டார்கள். தனக்கு வேண்டியதை கேட்டு வாங்க தெரியாது. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றி இருக்கக் கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது. சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது.

மக்களிடம் குழப்பம்: மனநல பாதிப்புக்குள்ளான குழந்தைகளும் ஆட்டிச பாதிப்பு குழந்தைகளும் ஒன்று என எண்ணும் போக்கு அனைவரிடமும் உள்ளது. இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமையே.

அன்பு தேவை: ஆட்டிச குழந்தைகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும். ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாது. இதை அறியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதை மனதளவில் ஒத்துகொள்ள மாட்டார்கள். மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. குறைந்த வயதிலேயே கண்டறியப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்படவேண்டும். ஆனால் அலட்சியம் காரணமாக வருடங்கள் பல ஓடி மேலும் சிக்கல் உருவாகும். இந்த பாதிப்புக்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. இதுவரைக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்குபேஷன் தெரபி எனும் பயிற்சி மட்டுமே உண்டு. ஆனால் இந்தக் குழந்தைகளை புறந்தள்ளாமல் அன்பும் அரவணைப்புடன் செயல்பட வேண்டும். அப்போது குழந்தைகள் சிறிது சிறிதாக தங்கள் நினைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவர்.

நான்கில் மூன்று பேர் ஆண் குழந்தைகள்: ஆட்டிச பாதிப்பால் பிறக்கும் குழந்தைகளில் நான்கில் மூன்று பேர் ஆண் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. அதே போல் இத்தகைய பாதிப்புகள் வர முக்கிய காரணங்களாக சில விஷயங்களை வகைப்படுத்தி உள்ளனர். அதில் வயதான காலத் தில் திருமணம் செய்தல், கர்ப்ப காலத்தில் மன உளைச்சல், மரபு வழியாக வருவது. இதில் 90 சதவிதம் தந்தையின் பாரம்பரிய தொடர்ச்சியே, சுற்றுச் சூழல் பாதிப்பு, மாசுபடுதல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆட்டிசத்துக்கு தீர்வு: இது நோய் அல்ல பாதிப்பு என்பதால் நீண்டநாள் பயிற்சி முக்கியம். அரவணைப்பும் புரிதலும் முக்கியம். பெற்றோர் மட்டுமல்ல ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் தனி குழந்தைகள் என்பதை சுற்றியுள்ளவர்களும் உணர வேண்டும். முதன்மையாக நான்கு வகையான தெரப்பிகள் தேவைப்படுகின்றன.1. நடத்தை சீராக்கல் பயிற்சிகள் 2. வளர்ச்சிக்கான பயிற்சிகள் 3. கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் 4. பேச்சுப் பயிற்சி

விந்தை மனிதர்கள்: ஆட்டிசம் பாதித்தும் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் உண்டு அமெரிக்க வாழ் தமிழரான கிருஷ்ணநாராயணன் தனது சிறுவயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் பயிற்சி மூலம் தேறியவர். தனது சிறுவயது ஆட்டிச நோய் பாதிப்புகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என தனது இளவயது நினைவுகளையே ஆங்கிலத்தில் புத்தகமாக “வேஸ்ட் டேலன்ட்” என்ற பெயரில் எழுதியுள்ளார். அதை அழகு தமிழில் லட்சுமி பாலபாரதி என்பவர் மொழி பெயர்த்து நல்லதோர் வீணை என்ற பெயரில் விரைவில் வெளியிட உள்ளார். இதேபோல் டெம்பில் கிராண்டின் என்ற பெண்மணி விலங்கியல் துறை பேராசிரியையாக உள்ளார். இப்படி சிலர் மட்டுமே இதிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்பதே உண்மை.

1 comment:

  1. எளிமையான விளக்கம்

    ReplyDelete

Powered by Blogger.