மகிந்த குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுடன் பேசிய விவகாரம், நாளை பகிரங்கப்படுத்தப்படும்
மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவது குறித்து, அதன் தலைவருடன் இன்று சபாநாயகர் நடாத்திய பேச்சுவார்த்தையின் முடிவை நாளை காலை பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் தொடர்ந்தும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்படுவது, குறித்து கேட்டறிவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச அவ்வாணைக்குழுவின் ஆணையாளருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இருப்பினும், அதன் ஆணையாளர் நாயகம் டில்ருக்சி நாட்டில் இல்லாததனால் ஆணைக்குழுவின் தலைவருடன் சபாநாயகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பமிட்டு, பாராளுமன்றத்திற்கு இன்று கடிதமொன்றை கையளித்திருந்தனர்.
இந்நிலையிலேயே லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தை பாராளுமன்றிற்கு வருமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்ததாகவும் பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment