Header Ads



ஜப்பானிய தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை, இலங்கையிலே வாழ வேண்டும் - நீதிமன்றம் கட்டளை

இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த தனது தாயினால் ஜப்பான் கொண்டுசெல்லப்பட்ட 5 வயதுச் சிறுமி தனது ஜப்பானிய தந்தையுடன் இலங்கையில் வாழ்வதற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என ஒரு அரசாங்க அதிகாரி ஜப்பான் டைம்ஸ் பத்திரிகைக்கு புதன்கிழமை கூறினார்.

1980 சர்வதேச சிறுவர் கடத்தலின் சிவில் அம்சம் பற்றிய ஹேக் சமவாயத்துக்கு அமைய ஒரு பிள்ளை தான் வழமையாக வாழும் நாட்டுக்கு திரும்ப செல்வதற்கு அதிகாரமளிக்கும் நீதிமன்ற கட்டளையை ஜப்பான் முதல் தடவையாக புதன்கிழமை நிறைவேற்றியது.

தமது பெற்றோர்களில் ஒருவரினால் சர்வதேச எல்லை தாண்டி பிழையான வழியில் கூட்டிச் செல்லப்பட்ட பிள்ளைகளை விரைந்து மீளக்கொண்டு வர இந்த சமவாயம் வழி சமைத்துள்ளது.

இந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் ஜப்பானியர்கள். இந்த பிள்ளை இலங்கையில் பிறந்தது. இந்த குடும்பம் 2013 பெப்ரவரியிலிருந்து இலங்கையில் வாழ்ந்து வந்தது. ஆனால், தாய் தன்னுடன் சிறுமியையும் கூட்டிக்கொண்டு ஜப்பான் சென்ற பின்னர் இலங்கைக்கு திரும்ப மறுத்துவிட்டார்.

இந்த நிலைமையில் சிறுமியின் தகப்பன் ஹேக் சமவாயத்தின்படி மகள் தன்னிடம் திரும்ப வேண்டுமென கோரினார். பிள்ளை இலங்கைக்கு திரும்ப வேண்டுமென ஓஸாகா மாவட்ட நீதிமன்றம் நவம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சரியானது என மேல் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இவ்வாறு தீர்ப்பு பெப்ரவரியில் இறுதி முடிவானதாகியது.

கடந்த மாதமும் டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் ஒரு பிள்ளையை ஸ்பெயினுக்கு திருப்பி அனுப்பும்படி தீர்ப்பளித்தது.
திருப்பி அனுப்பப்படும் குழந்தைகள் விவகாரம் திருப்பி அனுப்புவதுடன் முடிவதில்லை. இந்த பிள்ளைகள் தொடர்ந்து அவதானிக்கப்பட வேண்டும். இதன் மூலமே துல்லியமாக தகவலை மக்கள் அறியமுடியும். இதன் மூலமே ஹேக் சமவாயத்தின் (ஒப்பந்தம்) தார்பரியத்தை நன்கு விளங்கிக்கொள்ள முடியும் என ஹேக் சமவாயம் தொடர்பில் நிபுணரான மிக்கிகோ ஏட்டனா கூறினார்.

No comments

Powered by Blogger.