என்னிடம் வங்கி அட்டை இல்லை, ஒரே வங்கி கணக்கே உள்ளது, சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கவில்லை
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் மற்றும் 27ம் திகதிகளில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்ள தம்மை அழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அளப்பரிய சேவையை ஆற்றிய தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் ஒரு சில தரப்பினர் இவ்வாறு முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச சேவையில் இணைந்து கொண்டது முதல் இதுவரையில் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமக்கு ஒரே வங்கிக் கணக்கே காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹனுப்பிட்டி இலங்கை வங்கியில் மட்டுமே தமக்கு கணக்கு இருப்பதாகவும் அதனை கடந்த 30 ஆண்டுகளாக பேணி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ ஓய்வூதியமும் பாதுகாப்புச் செயலாளர் சம்பளமுமே தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் தமக்கு கடன் அட்டை கூட இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஒரு சில தரப்பினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளினால் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சரியாகவே சொன்னீர்கள். கள்வர்கள் யாரும் வங்கி அட்டை பாவிப்பதில்லை என்பது உண்மை தான்.
ReplyDeleteடியர் கோத்தா,
ReplyDeleteமூட்டை மூட்டையாக கொள்ளையடித்த பணம் கையில் இருக்கும் பொழுது, மனிதன் வேலை கெட்டுப்போய் கடன் அட்டை பாவிப்பானா?
நகரங்களின் வீதி நடைபாதைகளில் பதிக்கப்பட்ட தரையோட்டுக் கற்கள் விடயத்தில் ஒவ்வொரு கல்லுக்கும் கிடைத்த கொமிசனை யார் பெயரில் போட்டீர்கள் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும், சொன்னாலும் அரசாங்கம் ஒன்றும் செய்யாது, பேப்பருக்கு ரிப்போர்ட் கொடுப்பதை தவிர.