Header Ads



கிரிக்கெட்டில் மீண்டும் சோகம்

உள்ளூர் போட்டியில், ‘கேட்ச்’ பிடிக்கும் போது மோதிக் கொண்டதில் கோல்கட்டா கிரிக்கெட் வீரர் அன்கித் கேஷ்ரி காயம் அடைந்தார். இவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பெங்கால் அணியின் (19 வயது) முன்னாள் கேப்டன் அன்கித் கேஷ்ரி, 20, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடந்த உலக கோப்பை (19 வயது) தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் இடம் பிடித்தார். சி.கே. நாயுடு தேசிய சாம்பியன்ஷிப் தொடரில், பெங்கால் ‘ஏ’ (23 வயதுக்குட்பட்டோர்) அணிக்காக விளையாடினார்.


இவர், கடந்த 17ம் தேதி பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) சார்பில் நடந்த கிளப் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் போட்டியில் பங்கேற்றார். கோல்கட்டாவின் ஜாதவ்பூர் பல்கலை., மைதானத்தில் நடந்த இப்போட்டியில்  ஈஸ்ட் பெங்கால், பவானிபூர் அணிகள் மோதின.


விதி செய்த சதி:


இதில், ஈஸ்ட் பெங்கால் அணியில் இடம் பெற்ற அன்கித் கேஷ்ரிக்கு விளையாடும் ‘லெவனில்’ வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், விதி இவரை விடவில்லை. 12வது வீரராக இருந்த இவர், சகவீரர் அர்னாப் நான்டிக்கு பதிலாக ‘பீல்டிங்’ செய்ய மாற்று வீரராக களமிறங்கினார். 


ஆட்டத்தின் 44வது ஓவரில், பவானிபூர் அணி பேட்ஸ்மேன் துாக்கி அடித்த பந்தை ‘டீப் கவர்’ பகுதியில் நின்ற அன்கித் கேஷ்ரி மற்றும் பவுலிங் செய்த சவுரப் மண்டல் ‘கேட்ச்’ செய்ய ஓடினர். ஒருகட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது மண்டலின் முழங்கால், கேஷ்ரியின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலமாக தாக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே மயங்கி விழுந்த கேஷ்ரியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ‘கோமா’ நிலைக்கு சென்றார்.

இதனை பார்த்த பேட்ஸ்மேன் அனுஸ்துப் மஜும்தார், பீல்டிங் செய்து கொண்டிருந்த ஈஸ்ட் பெங்கால் அணியின் ஷிப்சாகர் சிங், அன்கித் கேஷ்ரியை காப்பாற்ற ஓடினர். அப்போது மூச்சுவிடமுடியாமல் தவித்த கேஷ்ரிக்கு, ஷிவ்சாகர் வாய்வழியாக சுவாச காற்றை செலுத்தி காப்பாற்ற முயற்சித்தார். பின் பெங்கால் கிரிக்கெட் சங்க (சி.ஏ.பி.,) ஆம்புலன்ஸ் மூலம் அன்கித் கேஷ்ரி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அன்கித் கேஷ்ரி உடல் நிலையில் நேற்று முன்தினம் மாலை லேசான முன்னேற்றம் தெரிந்தது. நேற்று திடீரென  மாரடைப்பு ஏற்பட, பரிதாபமாக மரணடைந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் காயமடைந்த பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தற்போது, களத்தில் ஏற்பட்ட காயத்தால் அன்கித் கேஷ்ரியும் மரணடைந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அன்று ராமன் லாம்பா


கிரிக்கெட் களத்தில் ஏற்பட்ட விபரீத சம்பவங்களில் மரணம் அடைந்த சிலர்:

1959ல் அப்துல் அஜிஸ், 18, (பாக்.,) மார்பில் பந்து பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


* இயான் போலே, 30, (இங்கிலாந்து), உள்ளூர் போட்டியில், கண்ணுக்கு கீழே மோசமாக அடிபட்டது. மருத்துவமனையில் மயக்க நிலையில் வைக்கப்பட்டு இருந்த இவர், மாரடைப்பில் மரணம் அடைந்தார். * கடந்த 1998ல் இந்திய வீரர் ராமன் லாம்பா, 38, வங்கதேச உள்ளூர் தொடரில், பீல்டிங் செய்த போது, பந்து இவரது தலையில் பலமாக தாக்கியது. கோமா நிலைக்கு சென்ற இவர், 3 நாட்களுக்குப் பின் மரணம் அடைந்தார்.

* 2013ல் பாகிஸ்தானின் ஜுல்பிகர் பட்டி, 22, மார்பில் பந்து தாக்கி உயிரிழந்தார்.

* இதே ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் ராண்டல், 32, உள்ளூர் போட்டியில் தலையில் பந்து தாக்கி மரணம் அடைந்தார்.

* 2014ல் ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியுஸ், பவுன்சர் தாக்கி மரணம் அடைந்தார். 

* தற்போது, கோல்கட்டா வீரர் அன்கித் கேஷ்ரி மரணம் அடைந்தார்.


சச்சின் இரங்கல்

அன்கித் கேஷ்ரியின் மறைவுக்கு இந்திய ஜாம்பவான்களான சச்சின், கும்ளே இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து ‘பேஸ்புக்’ இணையதளத்தில் சச்சின் வெளியிட்ட செய்தியில், ‘கேஷ்ரியின் மரணம் வருத்தம் அளிக்கிறது. போட்டியின் போது நிகழ்ந்த துயர சம்பவத்தினால் இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தேவையான மனவலிமையை இறைவன் தான் கொடுக்க வேண்டும்,’என, குறிப்பிட்டுள்ளார்.


கும்ளே கூறுகையில், ‘‘போட்டியின்போது தனது வாழ்க்கையை இழந்த அன்கித் கேஷ்ரியின் மறைவு கவலை அளிக்கிறது. இவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

No comments

Powered by Blogger.