'யூ.எல். யாக்கூப்' கௌரவிக்கப்பட்டார்
(சுலைமான் றாபி)
ஊடகத்துறையில் சிறுவயதில் காலடி எடுத்துவைத்து தற்பொழுது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவரும் யூ.எல். யாக்கூப் அவர்களின் சேவையினைப் பாராட்டி அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் நேற்று முன் தினம் (04) இடம்பெற்ற கலாச்சார விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் கடந்த 1986ம் ஆண்டு முதன் முறையாக ரூபவாகினியில் செய்தி வாசித்த முதல் கிழக்கு மாகாண முஸ்லிம் என்ற பெருமைக்கு உரித்துடையவராவார். இவர் 1994ம் ஆண்டு பலாலி இராணுவ தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வடபகுதிக்கான தொலைகாட்சி சேவையின் ஸ்தாபகப் பொறுப்பதிகாரியாக பணியாற்றியிருந்தார். டென்மார்க் அரசின் ஆதரவுடன் இயங்கும் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் வானொலி, தொலைக்காட்சி பயிற்சிப் பிரிவை ஆரம்பிக்க உதவியதுடன், சுவீடன் நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிபுணர்களுடன் இணைந்து அறிக்கைகளைத் தயாரித்த இலங்கையின் ஒரே ஒரு நிபுணர் என்ற அந்தஸ்தையும் பெற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஊடகத்துறை பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றார்.
மேலும் தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடகங்கள் தொடர்பாக ஜப்பானின் Nர்மு நிறுவனம், சுவீடனின் கல்மார் பல்கலைக்கழகம், மற்றும் சவுதி அரேபியாவின் அல்-அசீஸ் பல்கலைக்கழகத்தில் விஷேட பயிற்சிபெற்ற இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இலங்கை சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடக மற்றும் வெகுஜனத் தொடர்பாடல் துறையில் முதுமாணிப்பட்டப்படிப்பினை மேற்கொண்டுவரும் இவர் சவுதி அரேபிய மன்னரினதும், அரசாங்கத்தினதும் விஷேட அதிதிக்கான அழைப்பின் பேரின் மூன்று தடவைகள் இலங்கை இலத்திரனியல் ஊடகங்கள் சார்பில் புனித ஹஜ்ஜு செய்யும் வாய்ப்பைப் பெற்றதும் விஷேட அம்சமாகும். இதேவேளை இவரின் இவ்வாறான திறமைகளை இனங்கண்டு நேற்றைதினம் நிந்தவூரில் இடம்பெற்ற வரலாறும், வாழ்வியலும், நூல் வெளியீட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் ஞாபகச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இவரை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் என்கின்ற வகையில் சொல்கின்றேன், மிகவுமே சாதரணமான மனிதர், வீண் வம்புகளுக்கு போகாதவர், தனக்கு சம்மந்தமில்லாத விடயங்கள் எதிலும் தலையிட மாட்டார். அமைதியான, பண்பான மனிதர்.
ReplyDeleteபாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பெறத் தகுதியானவர்தான்.