ஆடம்பரமான பள்ளிவாசல்களை கட்டுவதில், நமது வளங்களை வீணடிப்பதானது..?
'வீழ்ச்சியுறும் கல்வி அடைவுகளும் சமுகத்தின் கூட்டுப் பொறுப்பும்'
-டாக்டர் . I.L.M. றிபாஸ்-
“The philosophy of the school room in one generation will be the philosophy of government in the next”. Abraham Lincoln
ஒரு பரம்பரையின் வகுப்பறைப் போதனைத் தத்துவங்களே அடுத்த பரம்பரையின் அரச தத்துவங்களாக பரிணமிக்கின்றன என ஆபிரகாம் லிங்கன் மிகச் சரியாகச் சொன்னதுபோல் ஒரு தேசத்தின் பாடசாலையில் போத்திக்கப்படும் போதனைகளின் உள்ளடக்கங்களே அந்த சமுகத்தின் சந்ததியினரை நெறிப்படுத்தி சிந்தனை முறைமைக்கான ஒரு பாதையை வகுத்துக் கொடுக்கின்றன. ஒரு சமுகத்தின் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் மிகப் பெரும் பணியினை அச்சமுகத்தின் பாடசாலைகள் குறிப்பாக ஆசிரியர்கள்தான் செய்கின்றனர்.ஆனால் எமது சமூகத்தைப் பொறுத்தவரை இந்த அடிப்படை உண்மை புரிந்துகொள்ளப் பட்டுள்ளதாக தெரியவில்லை.
எனவேதான் ஒரு சமுகத்தின் ஆளுமையை விருத்தியை உருவாக்குவதில் மட்டுமல்லாது பல தலைமுறை கடந்து உயிர்வாழும் சமுக செல்நெறியை தீர்மானிப்பது, உருவாக்குவது பாடசாலைகள்தான் என்பது நிதர்சனம் . ஒரு கல்விக் கூடம் என்பது முறை சார் கல்வியுடன் ஒழுக்க விழுமியங்களை நிலைபெறச் செய்தல், ஆளுமை விருத்தி, விளையாட்டுத் திறன் விருத்தி போன்ற இன்னோரன்ன கல்வி சாராத நடவடிக்கைளில் மாணவர்களை ஊக்கப் படுத்தி, அவர்களை நெறிப்படுத்தும் பாரிய பங்களிப்பினை செய்கின்றன. இளம் பரம்பரை தனது உயிர்ப்புள்ள நேரங்களை மிக அதிகமாக பாடசாலைகளிலேயே செலவிடுகிறது, சிறார்கள் பெற்றோரை விட தமது ஆசிரியர்களையே மிகவும் நம்புகின்றனர், இவர்களையே தமது முன்மாதிரிகளாக (Role model) கற்பிதம் செய்து கொள்கின்றனர்.
இதற்கும் மேலாக ஒவ்வொரு மாணவனுக்கும் மனதுக்கு நெருக்கமான ஓரிரு ஆசிரியர்கள் இருப்பர். இவர்கள் மாணவரோடு நெருக்கமாக இருந்து மாணவனை நெறிப் படுத்துவதோடு, அவன் தளர்ச்சியுறும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்தி உற்ற நண்பனைப் போல் துணையிருப்பர். இந்த நெருக்கமும் உறுதுணையும் மாணவ ஆசிரிய பிணைப்பும் காலமெல்லாம் உயிர்பெற்றிருக்கும். ஆனால் இவ்வாறான நெருக்கமிக்க பிணைப்பு ஆசிரியர்களோடும் ஏன் பாடசாலைகளோடும் கூட படிப்படியாக குறைந்துசெல்லும் துர்பாக்கியம் தற்போது நிகழ்ந்து வருகிறது.
அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்ச்சையில் முஸ்லிம் மாணவர்களது பெறுபேறு சுமாராக இருந்தாலும் ஆண் மாணவர்களது பெறுபேறு மிக பாரதூரமான முறையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக காத்தான்குடியின் ஒரு பெண்கள் பாடசாலையில் 9 A சித்திகளை 13 மாணவிகள் பெற்றிருக்க ஆண்களுக்கான பிரதான பாடசாலையில் ஒரு மாணவனாகிலும் இவ்வாறன பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளாமையானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரவே இக்கட்டுரைக்கான உந்த்துதலாகும்.
சமாதான சூழல், தொழில் நுட்பவளர்ச்சி, பொழுது போக்கு சார்ந்த விடயங்களின் பெருக்கம், இளம் வயதிலேயே சகல இன்பங்களையும் சுகித்து விடவேண்டும் என்கிற இளமைத் தவிப்பு, மார்க்க மற்றும் இன்னோரன்ன சமயம் சார் நடவடிக்கைகளுக்கான தீவிர உந்துகை, அதிக பணப்புழக்கம், பிரத்தியோக வகுப்புகளை நடாத்துவோரின் ஆதிக்கம் என பல்வேறு காரணிகள் மாணவர்களை பாடசாலைகளைவிட்டும் தூரப்படுத்தியுள்ளன. இதற்கும் மேலாக முறைசார் கல்வி நடைமுறைகளில் மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் குறிப்பாக ஆண் மாணவர்கள் விரைவாகவும் அதிகமாகவும் பணம் சம்பாதிக்கும் ஆர்வம் கொண்டுள்ளனர், சமுக அந்தஸ்த்தின் அடையாளமாக, மற்றும் அளவுகோலாக பணமே கொள்ளப் படுவதால் பணம் நோக்கிய அவசரம் மாணவர்களை அதற்கான விரைவு வழிகளை தேடிச்செல்ல வைக்கிறது.
தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மிக அடிப்படைத் தராதர சான்றிதல்களை தனியார் கல்வி நிறுவனங்களில் பெற்றுக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் செல்வது தற்போதைய நடைமுறையாக (Trent) பரிணமித்துள்ளது. இது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வாக இருந்தபோதும். நீண்ட கால நோக்கில் பல சிக்கல்களுக்கு அடிகோலும் காரணிகளாக பரினமிக்கக்கூடும். ஏனெனில் தொழிநுட்ப ரீதியிலான அடிப்படைத் தகமைகளை மட்டும் பெற்றுக் கொள்வதில் மிக திறமைவாய்ந்த மாணவர்களும் ஆர்வம் காட்டுவதால் துறைசார் கல்வித் தகமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பாக பலகலைக் கழக நுழைவுக்கான ஆண் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து செல்கிறது. இது இலங்கையின் சகல சமூகங்களிலும் அவதானிக்கப் பட்டாலும் முஸ்லிம் சமுகத்தில் மிக அதிகரித்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு துறை சார் கல்வியாளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியானது எதிர்காலத்தில் அரச மற்றும் நிர்வாகத் துறைகளில் முஸ்லிம் சமுகத்தின் பிரசன்னத்தை வெகுவாக குறைக்கும் என்பது நிதர்சனமாகும். அரச நிர்வாகத் துறைக்கான தெரிவில் முறைசார் கல்வியாளர்களுக்கே இடமளிக்கப் படுவதால் இந்த துறைகளை எக்காரணம் கொண்டும் சமுகம் புறக்கணிக்க முடியாது. அதுமட்டுமல்லாது தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படைக் கல்வியோடு தமது கற்கைகளை நிறுத்திக் கொள்ளும் மாணவர்களால். துறை சார் நிபுணர்களாக உயர்கல்வித் தகைமை நோக்கி முன்செல்ல முடியாது. இது சமுகத்தில் அறிஞர்களுக்கான வெற்றிடத்தை உருவாக்கிவிடும்.
நிகழ்காலத்தில் கூட பல அரசநிர்வாக நெருக்குவாரங்களுக்கும், புறக்கணிப்புக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் ஆட்படுவதாக நாம் விசனப்பட்டு நிற்கிறோம். அரசியல் பலம் பற்றி பெரிதாக பீற்றிக் கொண்டாலும் ஒரு அரச அலுவலகத்தில் உள்ள காகிதக் கோவையைக் கூட உசுப்ப முடியாத வாய்ச் சண்டியர்களாகத்தான் நமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பது தொடர்ந்ததும் நிறுபனமாகி வருகிறது.. ஒரு அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் செய்யும் வேலையைக் கூட எமது பணபலத்தாலோ அரசியல் பலத்தாலோ செய்ய முடியவில்லை. உதாரணமாக் அண்மையில் பணம் படைத்த ஒரு வர்த்தகர் காத்தான்குடியின் அண்மைக் கிராமமொன்றில் இரும்புத் தொளிற்சாலை ஒன்றினை உருவாக்க எடுத்த முயற்ச்சியானது அரச நிருவாக உத்தியோகத்தர்களால் தடுக்கப் பட்டிருக்கிறது. தொழில் வாயப்புகளை உருவாக்கும் துறைகளுக்கே இந்த கதி நேர்ந்த்துள்ளது. இதனை எந்த அரசியல் சக்திகளாலும் பணபலத்தாலும் மாற்றியமைக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.
இந்த சூழலில் துறை சார் நிபுணர்களும் அரச நிர்வாகத்தில் உயர் நிலை உத்தியோகத்தர்களும் எமது சமுகத்தில் இருந்து உருவாகாமல் போனால் எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளப் போகும் நிர்வாகப் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருக்கும்.
எமது எதிர்கால அரசியல் சூழ்நிலைகளும், உருவாக இருக்கும் அரசியல் யாப்பு மாற்றங்களும் எமக்கான பிரதிநிதித்துவத்தை கணிசமாக குறைக்கும் வாய்ப்புகள் எதிர்வு கூறப்படுகின்றன. இனவாத அரசியல் செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு திறமைக்கும் ஜனநாயகத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் செயற்பாடுகள் மும்முரம் பெறும் வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. எனவே எந்த சமூகமாவது திறமை அடிப்படையில் தமது ஆளுமைகளை நிருபிக்கத் தவறின் பல துறைகளில் அந்த சமூகமாகவே பின்தள்ளப்பட்டு புறக்கணிக்கப்படும் என்பது உறுதி.
எனவே எமது கல்வி தொடர்பான ஆழ்ந்த கருத்தாடல்களும் ஆய்வுகளும் அதிகம் தேவைப் படுகின்றன. தற்காலத்தில் கல்விசார் மற்றும் அரச நிர்வாகம் சார் துறைகளில் உள்ளவர்கள் இதற்கான பங்களிப்பை திட்டமிடலை செய்ய வேண்டும். கல்வி திட்டமிடல் என்பது ஒரு சில வளங்களைப் பாடசாலைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாலும், சில பிரத்தியோக வகுப்புகளை ஏற்பாடு செய்வதாலும் நிகழ்ந்துவிட முடியாது. ஒவ்வரு துறை சார்ந்தோரும் தமது துறைகளில் உள்ள வாய்ப்புகள் எதிர்கால சூழ்நிலைகள் தொடர்பாக ஆய்வுகள் செய்து சமுகத்தின் பார்வைக்கு கொண்டுவரவேண்டும். தேசிய ரீதியான கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்கான மாநாடுகள் கூட்டப்பட்டு ஆய்வறிக்கைகளும் ஆலோசனைகளும் சமர்பிக்கப் பட வேண்டும். இதனை ஒருங்கிணைக்கும் பணியினை தற்போதாயா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறிப்பாக தென் கிழக்கு பல்கலைக் கழக போதகர்கள், இஸ்லாமிய ஜாமியாக்கள் சார்ந்த கல்வியாளர்கள், அரச நிர்வாக உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் இன்னும் தனியார் துறையிலுள்ள கல்வி மற்றும் வர்த்தக ஜாம்பவான்கள் கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களுக்கான சமுக கடமையும் கூட்டுப் பொறுப்புமாகும்.
படாடோபமான பள்ளிவாயல்களைக் கட்டுவதிலும் வீண் ஆடம்பர அலங்கார விஸ்தரிப்புகளிலும் தொடர்ந்து நமது வளங்களை வீணடிப்பதானது ஏனைய சமூகங்களின் எரிச்சலை கூட்டுவது மட்டுமல்லாது எம்மை ஒரு பகட்டான சமுகமாக அடையாளம் காட்டுமேயல்லாது எம்மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்யாது. இதனைப் புரிந்து கொள்ள நாம் தவறும் போது இப்போது நாம் உருவாக்கிவரும் பகட்டுத் தத்துவங்களே எமது எதிர்கால சந்ததியின் அரசியல் தத்துவங்களாக பரிணமிக்கும். இது ஆடம்பர விரும்பிகளான முட்டாள்கள் கூட்டமாக சமுகத்தை அடையாளப்படுத்தும். இந்த அச்சமிக்க சூழலில் இருந்து விடுபடுவது நமது சிந்தனை மாற்றத்திலும் செயற்திறனிலுமே தங்கியுள்ளது.
This person seems to be a typical matten. He want to forget religion, masjid etc. just to pass O/L. Attitude of Kattankudiyan are almost similar type in this site. I have heard those days people used to say that eastern people are attaked becourse they dont care the religion.
ReplyDeleteகல்வி என்பது பாடசாலையின் கட்டிடம், கதிரை, மேசை கரும்பலகை, வெண்கட்டி என்பவற்றைத் தாண்டி, நூல்கள், தொழில்நுட்பம், கணணி, விஞ்ஞானம் என்று அதிக பணம் செலவழிக்க வேண்டிய பரந்த தளத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது.
ReplyDeleteவெறுமனே பள்ளிகளை மட்டும் கட்டி, அதனை அழகுபடுத்துவதால் பெருமளவு பயன் இல்லை. அரபு நாட்டு பணத்தில் சமூக சேவை செய்கின்றோம் என்று வியாபாரம் செய்யும் நிறுவனங்கள், ஆளில்லாத ஊரில், வெறும் காணியை வாங்கியாவது ஒரு பள்ளியைக் கட்டி, அதனை போட்டோ பிடித்து அனுப்பி, கொமிசன் அடிப்பதிலேயே கண்ணாக இருக்கின்றன. பாடசாலைக்கட்டிடம், அதன் வளங்கள் குறித்து கவனம் செலுத்துவதே இல்லை.
ஒரு பாடசாலையின் வகுப்பறைத் தேவை குறித்து ஒரு நிறுவனத்தை அணுகிய பொழுது, ஒரு சிறு தொகைப் பண உதவியைக் கூட தர மறுத்த அவர்கள், வேண்டுமானால் பாடசாலை வளாகத்தில் இரண்டுமாடி பள்ளிவாசல் கட்டித் தருகின்றோம் என்று சொன்னார்கள்.