ரணில் - விக்னேஸ்வரன் முறுகல், என்ன செய்ய வேண்டுமென எனக்கு தெரியும் - சம்பந்தன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் பிரச்சினை இருப்பதாகவும், முறுகல் நிலை காணப்படுவதாகவும் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனவே தவிர, அவ்வாறு அவர்கள் இருவரிடையேயும் பெரிய பிரச்சினை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே பிரச்சினை இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இவ்விடயத்தில் ஊடகங்கள் தேவையில்லாது மூக்கை நுழைக்கத் தேவையில்லை என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பிரதமருக்கும் முதல்வருக்குமிடையில் பனிப்போர் இடம்பெற்று வருவது வட மாகாண சபையின் செயற்பாடுகளைப் பாதிக்குமா? தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நீங்கள் இப்பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைக்கப் போகிaர்கள் என அவரிடம் வினவிய போதே இரா. சம்பந்தன் இவ்வாறு பதிலளித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனை ஊடகங்களில் பிரசாரப்படுத்தி பகிரங்கப்படுத்த வேண்டிய அவசிய மில்லை. இது எமது கட்சியுடன் சம்பந்தப்பட்ட விடயம். அரசியல் ரீதியாக கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமானதொரு விடயம். அதனைப் பகை என்று கூற முடியாது. பிரதமர் மற்றும் முதலமைச்சரிடையேயும் அத்தகையதொரு நிலை ஏற்பட்டதே தவிர அவர்களிடையே வேறெந்த விதமான தனிப்பட்ட பகைமையும் கிடையாது.
எனவே, தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இதனை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியும். இதையெல்லாம் பகிரங்கமாகக் கூற முடியாது. இதற்கு விளம்பரமும் தேவையில்லை. இவ்விடயத்தை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்காமல் இருந்தாலே போதும் எனவும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
Post a Comment