Header Ads



சிரியாவில் பலஸ்தீன் முகாமை கைபற்றிய ஐஸ், அல்நுஸ்ரா - காசாவில் ஹமாஸ் பேரணி

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருக் கும் பலஸ்தீனர்களின் யார்மூக் அகதி முகாமில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு இடையில் தொடர்ச்சியான மோதல்கள் மற்றும்  தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் பலஸ்தீன அகதிகள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இந்த அகதி முகாமின் பெரும் பகுதியை ஐ.எஸ். கைப்பற்றி இருப்பதாக செயற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டமஸ்கஸின் தெற்கு பகுதியில் இருக்கும் யார்முக் முகாம் பகுதிக்கு ஐ.எஸ். குழு கடந்த புதன்கிழமை நுழைந்தது. இது ஐ.எஸ். குழு சிரிய தலைநகரில் ஆழமாக ஊடுருவி இருக்கும் முதல் சந்தர்ப்பமாகும்.

இதில் ஐ.எஸ். குழுவுடன் அல் கொய்தாவின் சிரிய கிளையான அல் நுஸ்ரா முன்னணி யார்முக் முகாமில் இணைந்து போராடுவதாக சிரிய அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த இரு போட்டிக் குழுக்களும் சிரியாவின் ஏனைய நகரங்களில் பிரிந்து நின்று தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன.

இரு தரப்புக்கும் இடையில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் யார்முக் முகாமில் இணைந்து போராடுவது ஏனைய தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். தம்மை நடுநிலையானவர்கள் என்று குறிப்பிட்டபோதும் யார்முக்கில் நுஸ்ரா அமைப்பும் பல சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. இந்த இரு தரப்பும் இணைந்து செயற்பட்டதாலேயே யார்முக் முகாமை ஐ.எஸ்ஸினால் இலகுவாக கைப்பற்ற முடிந்திருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரிய தலைநகரின் விளிம்பில் இருக்கும் யார்முக் முகாம் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து அகதிகளாக வந்த பலஸ்தீனர்களைக் கொண்டு 1957 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் யார்முக் முகாமில் தொடர்ந்தும் சிக்கிக் கொண்டிருக்கும் சுமார் 18,000 சிவிலியன்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாத சூழல் இருப்பதாக ஐ.நா. மற்றும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டமஸ்கஸின் வடக்கு பகுதி அரச கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் 10 கிலோமீற்றர் எல்லைக்குள் ஐ.எஸ். நிலைகொண்டிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மனிதாபிமான உதவிகளுக்கு அரச படை அனுமதி அளிப்பதிலும் சிக்கல் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

யார்முக்கின் நிலை குறித்து ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடும் எதிர்த்தரப்பு கூட்டணியும் எச்சரிக்கை விடுத்துள்ளது. யார்முக்கில் இருக்கும் சிவிலியன்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்த்தரப் பினர் கோரியுள்ளனர்.

சிரிய எதிர்த்தரப்பு கூட்டணியின் சுயாதீன சிரிய இராணுவத்துடன் இணைந்த பலஸ்தீன குழுக்களும் சிரிய அரசுக்கு எதிராக போராடி வருகின்றன. முன்னதாக யார்மூக் அகதி முகாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச படையின் முற்றுகையி லேயே இருந்தது. இந்த பகுதியில் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் பல தடவைகள் உக்கிர மோதல்கள் இடம்பெற்றன.

இதனிடையே யார்முக் நகரில் சிக்கி இருக்கும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பலஸ்தீனின் காசா கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமை பேரணி ஒன்றை நடத்தினர். காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பே இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

3 comments:

  1. இஸ்லாமிய தேசத்தின் முகமூடி கழிகின்றது. இஸ்ரவேலை தாக்க வக்கற்ற இஸ்லாமிய தேசம், ஏற்கனவே அகதிகளாக அல்லலுறும் பாலஸ்தீன முஸ்லிம்களை தாக்கி அழிக்க முயல்கின்றது.

    சவூதி அரேபியாவும் இதே போலத்தான், இஸ்ரவேலை தாக்க ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடாத சவூதி அரேபியா, ஏமனில் யுத்தம் செய்ய கூட்டணி அமைத்து விமான குண்டு வீச்சு நடத்துகின்றது.

    ReplyDelete
  2. Writings of Little Star reminds of ABDULLA IBN SABA.work of creating hates between Muslims.

    ReplyDelete
  3. Muhammed Rasheed, I agree with you bro.

    ReplyDelete

Powered by Blogger.