''மன்னிக்கவும்''
மகளின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் ஃபேஸ்புக் மூலம் அந்த குழந்தையின் தாய் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே மற்றவர்களிடம் எப்படி தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் மகளுக்கு பாடமும் கற்று கொடுத்துள்ளார். கேயிஷா ஸ்மித் என்ற பெண்மணி அமெரிக்காவின் அலபாமாவில் வசிக்கிறார். கடந்த வாரம் அவர் தனது இரண்டு பெண்கள் மற்றும் பையனை திரையரங்கில், புதிய படமான சிண்ட்ரெல்லா பார்ப்பதற்காக காரில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர்களின் துடுப்புத்தனத்தால், மகளுடன் படம் பார்க்க வந்திருந்த அம்மா ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். படம் முடிந்ததும் அந்த பெண்மணி மிகுந்த வருத்ததுடன் இவர்களிடம் வந்து, தனது கணவருக்கு வேலை போய்விட்டதால் இனி தங்களால் சினிமாவுக்கு எல்லாம் வர முடியாது எனும் நிலையில், கடைசியாக பார்த்த படத்தையும் நிம்மதியில்லாமல் செய்துவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டு சென்றிருக்கிறார். மகளின் இந்த நடவடிக்கை பற்றி அவர்களின் தம்பி கூறியதை கேட்டு, கேயிஷா ஸ்மித் மிகவும் வேதனையடைந்தார். இன்னொருவரின் மனம் நோகும்படி மகள்கள் நடந்து கொண்டிருக்கின்றனரே என்று கலங்கியவர், அத்துடன் நிற்கவில்லை. இந்த விஷயத்தை ஃபேஸ்புக்கிற்கு கொண்டு சென்றார்.
நடந்த சம்பவத்தை முழுவதும் விவரித்து, திரையரங்கில் தனது மகள்களின் மோசமான நடத்தையால் பாதிக்கப்பட்ட அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும், பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியை தேடிகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தங்கள் செயல் தவறானது என தனது பெண்களுக்கு உணர்த்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தவர், இந்த ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்காக அவர்கள் மன்னிப்பு கேட்க தயராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு அவர்கள் தங்கள் பாக்கெட் மணியில் தங்கள் செயலால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது மகளை சினிமாவுக்கு அழைத்துச்சென்று, சிற்றுண்டி வாங்கித்தந்து மகிழ்விக்க தயாராக இருப்பதாகவும் உருக்கமாக குறிப்பிட்டிருந்தவர், சம்பந்தப்பட்ட தாய் இதை பார்த்தால் தயவு செய்து தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
மகள்களின் செயலுக்காக இப்படி ஃபேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்க முன்வந்து, அந்த பாதிப்புக்கு ஈடு செய்யவும் முற்பட்ட அவரது கண்டிப்பு மிக்க தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இந்த ஃபேஸ்புக் பதிவை பார்த்தவர்கள் எல்லாம் வியப்புடன், அதை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இப்படி ஆயிரகணக்கானவர்களால் பார்க்கப்பட்ட அந்த பதிவு, இறுதியில் அதற்குரிய பெண்மணியாலும் பார்க்கப்பட்டது. ரெபேக்கா பாய்ட் எனும் அந்த பெண்மணி, இந்த மன்னிப்பு கோரலை பார்த்து நெகிழ்ந்து போய்விட்டார். அந்த பெண்களின் செயலால் தான் வேதனை அடைந்தாலும், அவர்கள் அம்மாவின் மன்னிப்பு கோரும் பதிவை படித்த போது கண் கலங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பெண்கள் மீது தனக்கு கோபமில்லை என்று கூறியவர், அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளதுடன் ஒரு அம்மாவாக கேயிஷா பொறுப்புடன் நடந்து கொண்ட விதம் குறித்தும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
Post a Comment