Header Ads



சொந்த மண்ணுக்கு திரும்பும், விடத்தல்தீவு மக்கள்

-சுஐப் எம் காசிம்-

மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ். நகர் செல்லும் கரையோரப் பாதையில் 15வது மைலில் அமைந்துள்ள அழகிய கிராமம் வித்தல்தீவு. கிராமத்தின் கிழக்கில் அமைந்த வன்னி மேட்டு நிலங்களில் பெய்யும் மழை நீர் ஆறாக உருவாகி 'நாயாறு' என்னும் பேராறாகப் பெருகிக் கிராமத்தைச் செழிப்படையச் செய்துள்ளது. இந்த ஆறு கிராமத்தின் வட, தென் எல்லைகளில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் சங்கமிக்கிறது. ஆற்றின் கழிமுகம் சிறந்த துறைமுகமாக விளங்குகிறது.

கிராமத்தின் கிழக்கில் அமைந்த தாழ் நிலங்கள் நீர்வளமும் நிலவளமும் கொண்டதால் செந்நெல் விளையும் பொன்னான வயல்களாகப் பயன் தருகிறது. கிராமத்தில் கிழக்கில் அமைந்த பெரியமடுக் குளத்து மேலதிக நீரும் வெளிமருதமடுக் குளத்து நீரும் மழை நீரும் கிராமத்து வயல்கண்டங்களுக்கிடையே அமைந்துள்ள முப்பதுக்கு மேற்பட்ட குளங்களில் தேக்கப்பட்டு நெற்பயிர்ச் செய்கைக்குப் பயன்படுகிறது. சூழல் வளம் பெரும்பான்மைக் குடிமக்களை உற்சாகமும் விடா முயற்சியும் கொண்ட உழவர்களாக மாற்றியது. காலபோகம், சிறுபோகம் என இருபோகச் செய்கை நடைமுறையில் இருந்தது. கிராமத்தின் மேற்கெல்லையில் அமைந்த ஆற்றுக் கழிமுகமும் அதையண்டிய பாவைக் கடலும் மீன், இறால் முதலிய கடல்வளம் நிறைந்த பிரதேசமாகும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை இக்கடல் வளம் மேம்படுத்துகிறது.

கிராமத்தின் வடக்கிலும் தெற்கிலும் அமைந்த பசுமையான புல்வெளிப் பிரதேசம் கால்நடை வளர்ப்புக்கு பெரும் பயன் அளிக்கின்றது. அதனால் ஆடுகளும், மாடுகளும் இக்கிராமத்தில் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்டன.  வளம் பெற்ற வாழ்வை அனுபவித்த மக்கள் குத்தரிசிச் சோறும் கொழுத்த மீன்கறியும் உண்டு மகிழ்ந்தனர். கலப்பற்ற பசும் பாலை அருந்தி பரவசம் அடைந்தனர்.

இக்கிராமத்திலே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமை பேணி பரஸ்பர நேசத்துடன் வாழ்ந்தனர். மதம் வேறுபட்ட போதும் மனம் வேறுபடாது, மொழியால் ஒன்றிணைந்து உன்னத சமூகமாக வாழ்ந்தனர்.

கிராமிய மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் கலாசாலைகளாக விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயமும், றோமன் கத்தோலிக்க பாடசாலையும் (தற்போது ஜோசம் வாஸ் மகா வித்தியாலயம்) அமைந்திருந்தன. இனப்பாகுபாடற்ற ஆசிரியர் சமூகமும் மாணவர் சமூகமும் கல்வி முயற்சியில் ஈடுபட்டன. இக்கலாசாலைகளில் கற்ற மாணவர்கள் புத்தி ஜீவிகளாக இன்று நாட்டின் பல பாகங்களிலும் நாட்டின் நலனுக்கு உழைத்து வருகின்றனர். கிராமத்துக்கும் பெருமை சேர்க்கின்றனர்.

கிராமத்தில் கிழக்கெல்லை ஓரமாக அமைந்தது பள்ளமடுக்குளம். சுமார் பத்து அடி ஆழமான இக்குளத்தின் நாற்புறமும் மருதமரங்கள் செழிப்பாய் வளர்ந்துள்ளன. அதன் காரணமாக இக்குளம் எந்நேரமும் குளிர்ச்சி மிக்க நன்னீரைக் கொண்டதாய் அமைந்துள்ளது. தொழில் செய்து உழைத்துக் களைத்துவரும் உழவர்களும் இளைத்துவரும் மீனவர்களும் குளித்துத் தமது களைப்பைப் போக்க இக்குளத்திலே சங்கமிப்பர். அனைவரையும் ஆசுவாசப்படுத்தும் அற்புத நீர்த்தேக்கமாக இக்குளம் பயன்பட்டது.

இத்தகைய இன்பகரமான வாழ்வுக்கு இனப்பிரச்சினை முடிவு கட்டியது. 1990 இல் முஸ்லிம்களும் பின்னர் மற்றைய மக்களும் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்ததால் இக்கிராமம் காடாக காட்சியளித்தது. மீள்குடியேற்றம் செய்வதற்கு அமைச்சர் றிஷாத் அவர்களின் உதவியுடன் கிராமத்தின் காடுகள் அகற்றப்பட்டது. ஆனாலும் மக்கள் உடனடியாக குடியமரக்கூடிய வசதிகள் இருக்கவில்லை. 
விடத்தல்தீவு கிராமத்தில் நிலக்கீழ் நீர் நுகரமுடியாத சவர் நீர். அதனால் இடம்பெயரமுன் கிராமத்துக்கான குடிநீர் மணற்பிட்டி நன்னீர்க் கிணறுகளிலிருந்து குழாய்மூலம் பெறப்பட்டது. இடம்பெயர்ந்த காலத்துள் கிணறுகள், குழாய்கள், தாங்கிகள் அழிந்துவிட்டன. அதனால் இங்கு குடியேறும் மக்களுக்குத் தேவையான குடிநீர் இன்மை மீள்குடியேற்றத்தைத் தாமதப்படுத்தியது.

இடம்பெயர்ந்த காலத்துள் பெருகிய புதிய குடும்பங்களுக்கான குடிநீலக் காணியைச் சன்னாரில் பெற அமைச்சர் றிஷாத் நடவடிக்கை மேற்கொண்டார். காணி பெறப்பட்டுக் காடழிக்கப்பட்டது. வீடமைப்புக்கும். கிணறு அமைப்புக்கும் அமைச்சரின் உதவி கிடைத்தது. பள்ளிவாசல் அமைக்கவும் பாடசாலை அமைக்கவும் அமைச்சர் உதவி அளித்தார். சன்னாரில் புதிய கிராமம் ஒன்று அமைச்சரின் பேருதவியால் உருவாகியது.

விடத்தல்தீவு  மீள்குடியேற்றத்தை வலுப்படுத்த குடிநீரைக் குழாய் மூலம் பெறும் வசதியை அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார். மின் இணைப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குடியேறிய மக்களுக்கு அமைச்சர் இருபது வீடுகளை அமைக்க உதவி நல்கினார். தற்போது ஐம்பது வீடுகளை அமைக்க அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டமைக்கமைய நேற்று 17ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஐம்பது வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் அமைச்சரினால் நாட்டப்பட்டது. விடத்தல்தீவு மீள்குடியேற்றம் திருப்திகரமாக அமைய பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மீள்குடியேற்றம் பூரணமாக அமைந்தால்தான் இங்கு அழிந்த நிலையிலுள்ள பள்ளியையும் அலிகார் ம.வியையும் புனர்நிர்;மாணம் செய்து பழைய நிலைக்குக் கொண்டு வரமுடியும்.

ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் வீடுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற கூட்டத்திலே அமைச்சர் பேசியதாவது, இடப்பெயர்வு காரணமாக முஸ்லிம்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த கிராமங்களில் குடியமராது போனால் அக்கிராமங்கள் அழிந்துவிடும். பழைய பெயரும் மங்கிவிடும். அத்தகைய அழிவையும் இழிவையும் நான் விரும்பவில்லை. அக்கிராமங்கள் முன்னர் இருந்த நிலையிலும் பார்க்க அபிவிருத்தியடைந்து பிரகாசிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்தந்த கிராமங்களில் வாழ்ந்த மக்கள் படிப்படியாக குடியமர  வேண்டும். குடியமர்வுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் என்னால் முடிந்தவரை செய்வேன் என உறுதி கூறுகிறேன் என்றார்.

இந்த கூட்டத்தில் தொழிலதிபர் இம்தியாஸ், ஆதிர் கலீல், மும்தாஸ் ஆகியோரும் உரையாற்றினர். மௌலவி நிஹ்மத்துல்லா மார்க்க சொற்பொழிவொன்றை ஆற்றினார். இந்நிகழ்வில் மாந்தை உதவி அரசாங்க அதிபர்  ஸ்ரீஸ்கந்தராஜா(அன்ரன்)வும் பங்கேற்றார்.

சட்டத்தரணி சஜாத், மௌலவி முபாரக், சாரிக் கலீல், மௌலவி முபாரக் உட்பட ஊர் நலவிரும்பிகள் விழாவில் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.