Header Ads



மஹிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன், ஆஜராவதை தவிர்ப்பது ஏன்...?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்து வாக்குமூலமளிக்க முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், அமைச்சு பதவி நியமனங்களின் போதும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் உண்மை திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எனவும் அவர் தொடர்பில் சிறப்புரிமை கேள்விகளை எழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போதே அவ்வாறான சிறப்புரிமை கேள்விகளை எழுப்ப முடியும் என தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 79வது சரத்தின்படி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பணம், பதவிகள், அன்பளிப்புகள், வரப்பிரசாதங்கள், நன்கொடைகள் போன்றவற்றை ஒரு வேட்பாளருக்கு சாதகமான நிலைமை ஏற்படும் வகையில் வழங்கினால் அது சட்ட மீறலாகும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரே திஸ்ஸ அத்தநாயக்க சுகாதார அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டார் என சுட்டிக்காட்டிய அமைச்சர்,

ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பிரதமர் போன்ற எவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

தான் குற்றமற்றவர் எனில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்கு மூலமொன்றை அளிக்க முடியும், ஆனால் முன்னாள் ஜனாதிபதி எதற்காக குறித்த ஆணைக்குழுவில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.