''அரசியல் பூகம்பம்''
-நஜீப் பின் கபூர்-
ஆளும் தரப்பிலுள்ள ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு. உறுப்பினர்களை அவ்வப்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறத் தவறி இருக்கின்றது. இதனை வருகின்ற பாராளுமன்ற அமர்களில் தெளிவாகப் பார்க்க முடியுமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதற்கிடையில் சுதந்திரக் கட்சியில் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட பலர் அந்தப் பொறுப்புக்களை ஏற்று தமது பணிகளை ஆரம்பிப்பதில் ஆர்வமில்லாதவர்களாக இருப்பதைப் பல அமைச்சுக்களில் அவதானிக்க முடிகின்றது. சு.கட்சியில் எந்த படகு கரைசேரும் என்ற விடயத்தில்; உள்ள குழப்பமே இதற்குக் காரணம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்கலையிலுள்ள கார்ல்டன் மாளிகைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையை ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிக்கரைப் பத்திரிகை 62 என்று சொல்லி இருக்கின்றது. திவயின என்ற சிங்களப் பத்திரிகை இந்தத் தொகையை 62 என சொல்லி இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் உறவினர் நடாத்துகின்ற லங்காதீப தொகையை 32 என்று சுருக்கி இருந்தது. எனவே அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊடகங்களும் இப்படி முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைச் சொல்லுவது ஏன்?
19-20 திருத்தங்கள் கேலிக்கூத்தாகும்?
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட இருக்கின்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிலவற்றைப் பாராளுமன்றத்திற்குக் கையளிக்கின்ற 19 வது திருத்தமும், தேர்தல் முறையில் மாற்றங்கள் என்ற 20வது திருத்தமும் எதிர் வருகின்ற 20, 21ம் திகதிகளில் பாராளுமன்றத்திற்கு சமாப்பிக்கப்பட இருக்கின்றது.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தது. இதற்கு சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் அந்த 19 திருத்தத்தை நாம் நிச்சயம் தோற்கடிப்போம் என்று எச்சரிக்கை செய்திருந்தனர்.
பின்னர் இருதரப்பிற்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது இந்த இரு பிரேரனைகளையும் 20, 21ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது என்று முடிவாகி இருக்கின்றது. என்றாலும் கடைசி நேரத்தில் கூட கழுத்தறுப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது.
எமக்கு வருகின்ற பிந்திய தகவல்படி அடுத்து வருகின்ற 20,21ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும் போது 19வது திருத்தம், 20வது புதிய தேர்தல் மாற்றம் என்பன குறித்து இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டாலும், அப்படி எதிர்பார்ப்பது போல் எதுவுமே நடக்க வாயப்பில்லை என்று தெரிகின்றது. 19வது திருத்தத்திற்கு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆர்வம் காட்டுகின்றது. தேர்தல் திருத்தம் விடயத்தில் அது முட்டுக்கட்டையாக இருப்பதால் இந்த நிலை தோன்றி இருக்கின்றது.
சோமவன்ச புது விளையாட்டு?
சோமவன்ச முன்னாள் ஜேவிபி தலைவர். கடந்த 1988-1989 காலப் பகுதிகளில் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் பூண்டோடு கொல்லப்பட்ட போது அந்த நாட்களில் கண்டி நகரில் தலைமறைவாக இருந்தார் சோமன்;ச அமரசிங்ஹ.
பின்னர் தனது மைத்துனர் சிரிசேன குரேயின் உதவியுடன் வெளி நாட்டுக்குத் தப்பியோடிய சோமவங்ச அமரசிங்ஹ பிற்காலத்தில் நாட்டுக்கு வந்து கட்சியை சீரமைத்து அந்தக் கட்சிக்குத் தலைமைத்துவம் கொடுத்தார். ஆனால் அதிரடியாக இன்று தான் கட்சியிலிருத்து அனைத்துப் பதவிகளையும் துறந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றார்.
இரு பெரும் கட்சிகளாக இருக்கின்ற ஸ்ரீ.ல.சு.கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்ற இந்த நேரத்தில் அவற்றின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துவருகின்றது.
இந்த நேரத்தில் அதற்கு ஏற்ற விதமாக அரசியல் செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற முனைய வேண்டிய ஜேவிபி அதில் அக்கரை கொள்ளாது வேறு விதமாக நடந்து கொள்வதால் தன்னால் அந்தக் கட்சியுடன் தொடர்ந்து செயலாற்ற முடியாது என்று சோமவன்ச குற்றஞ் சாட்டுகின்றார்.
தான் புதியதோர் அரசியல் கட்சியை அமைத்து எதிர்வரும் நாட்களில் அரங்குக்கு வர இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.எமக்குத் தெரிந்த மதிப்பீடுகளின் படி சோமவன்ச தற்போது தன்னைப் பற்றிப் பிழையாகக் கணக்குப் போட்டுத்தான் கோதாவில் குதிக்கின்றர் என்று சொல்லத்தோன்றுகின்றது.
அவரும் மனிதர் தானே என்னதான் ஜேவிபியாக இருந்தாலும் அவரும் மனிதப் பிறப்புத்தானே! அவருக்கும் ஆசாபாசங்கள் இருக்கின்றது என்பதை அவரும் நாட்டுக்குக் காட்டித்தானே ஆக வேண்டும் அதனைத்தான் இப்போது அவர் பண்ணி இருக்கின்றார்.
ஜே.வி.பி. தற்போது மக்கள் மத்தியில்; செல்வாக்குப் பெற்றிருக்கின்ற இந்த நேரத்தில் அது தவறான வழியில் நடக்கின்றது என்று குற்றம் சாட்டுவதற்கு சோமவங்சாவுக்கு உரிமை இருக்கின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது. அணுரகுமார திசாநாயக தலைமையில் மக்கள் மத்தியில் கட்சி செல்வாக்குப் பெற்று வருகின்ற இந்த நேரத்தில் சோமவன்ச யாருக்காக மாரடிக்கப் புறப்பட்டிருக்கின்றார் என்று கேட்கத் தோன்றுகின்றது. எப்படி வந்தாலும் இது சந்தையில் விலைப்படாத ஒரு சரக்காகத்தான் இருக்கும் என்பது இவன் கருத்து! ஆனால் இது விடயத்தில் ஏதோ இருக்கின்றது-நடக்கின்றது என்பதுமட்டும் தெளிவாகப் புரிகின்றது.
இதற்கிடையில் சோமவன்ச கூட்டிய ஊடக சந்திப்புத் தொடர்பாக ஒரு புதிய தகவலை வாசகர்களுக்குச் சொல்லலாம் என்று தோன்றுகின்றது.
கடந்த வியாழக்கிழமை இந்தப் பத்திரிகையாளர் மா நாட்டை பத்தரமுல்லையில் அமைந்திருக்கின்ற பென்டேசிய ஹோட்டலில் நடத்த ஏற்பாடு செய்திருந்த போது அந்த இடத்தில் ஜேவிபி கொள்கைப் பரப்புச் செயலாளர் விஜித ஹேரத்தும் சோமவன்சவுடன் பத்திரிகையாளர் மாநாடு துவங்கிய போது 15 நிமிடங்கள் வரை பக்கத்தில் பிரதான மேசையில் அமர்ந்திருந்தார். அப்போது சோமவன்ச விஜித ஹேரத்தைப் பார்த்து தோழரே நீங்கள் இந்த மேசையில் அமர்ந்திருப்பது பொறுத்தமிலலை;. நான் அதனை விரும்பவில்லை வேண்டுமானால் போய் ஊடகக்காரர்கள் அமர்ந்திருக்கின்ற இடத்தில் அமர்ந்து நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருங்கள் என்ற கூறி இருக்கின்றார். அவர் கூறியபடி விஜித ஹேரத்தும் போய் ஊடகவியலாளர்களுடன் அமர்ந்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தார்.
கோழிச் சண்டை!
இதற்கிடையில் தமிழர் தரப்பில் அரசியல் செய்கின்றவர்கள் அதில் தமது பங்கு குறித்து கோழிச் சண்டையில் இறங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் சமூகம் தீர்க்கமான ஒரு கட்டத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில் அவர்கள் தமக்குள் அரசியலில் தமது இருப்புக் குறித்து விகிதாசாரப் பங்கு கேட்டு ஒரு சண்டையை இப்போது துவங்கி இருப்பது அன்று இளசுகள் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்ததை நியாயப்படுத்துகின்றதோ என்று கேட்கத் தோன்றுகின்றது.
எதிர் வருகின்ற தினங்களில் பாராளுமன்றம் கூடும் போது எதிர்க் கட்சித் தலைவர் யார் என்ற பிரச்சினை தோன்ற மீண்டும் இடமிருக்கின்றது. இதற்கு முன்மொழியப்பட்டுள்ள தினேஷ் குனவர்தன தனக்கு இந்தப் பதவி கிடைக்காவிட்டாலும் அது சம்பந்தனுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்குப் போய்ச்சேரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ஒரு செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
சோமவன்ஸ அமரசிங்கவின் வெளியேற்றம் JVP யின் மொத்த வாக்கு எண்ணிக்கையில் 01 வாக்கை குறித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை, அவ்வளவுதான்.
ReplyDelete