தலாய்லாமா வருவதை, இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை
திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு பெளத்த குருமார் அழைப்பு விடுத்துள்ளபோதும், தலாய் லாமா இலங்கை வருவதை புதிய அரசாங்கம் விரும்பவில்லையென சர்வதேச செய்திச் சேவையான ரொய்டர் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு நெருக்கமான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு, திபெத் சென்றிருந்த பெளத்த குருமார் அழைப்பு விடுத்திருந்தனர். எனினும், தலாய் லாமா இலங்கை வருவதை புதிய அரசாங்கம் விரும்பவில்லையென ரொய்டர் குறிப்பிட்டுள்ளது.
“எவரும் அவருக்கு அழைப்பு விடுக்க முடியும். ஆனால் அரசாங்கம் அவருக்கான விசாவை வழங்காதுவிடலாம்” என பெயர் குறிப்பிட விரும்பாத வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
“தலாய் லாமா எமக்கு மிகவும் முக்கியமானவர். ஆனால் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதே அதனைவிட முக்கியமானது. ‘ஒரு சீன கொள்கை’ என்ற எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் பலமாக வளர்ந்துவரும் சீனா உலகத் தலைவர்கள் தலாய் லாமா சந்திப்பதைத் தடுத்து வருவதுடன், பிரிவினை வாதத்தைத் தூண்டும் ஆன்மீகத் தலைவர் எனவும் அவரைக் கண்டித்துள்ளது.
இந்தியாவின் மஹாபோதி சபையைச் சேர்ந்த பெளத்த குருமார் தலாய் லாமாவை சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இலங்கைக்கு விஜயம் செய்து அங்குள்ள பெளத்த விகாரைகளைத் தரிசிக்க வேண்டும் என்பது தனது சிறுவயது விருப்பம் என தலாய் லாமா தன்னிடம் தெரிவித்ததாக பனாகல உபதிஸ்ஸ தேரர் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
“கிறிஸ்தவ மதம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதம் என்பன தன்னை மதிக்கின்றபோதும் பெளத்த மதம் மட்டும் தன்னை சரியாக மதிப்பதில் லையென தலாய்லாமா எம்மிடம் கூறியிருந்தார்.
இது தொடர்பில் நாம் கவலையடைந்ததுடன், அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். இவருடைய விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கதைத்து சீனாவை பகைக்காதவாறு இதற்கு தீர்வொன்றைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இவருக்கு ஒரு நாட்டின் அதிகாரி என்று அல்லாமல் சாதாரண மத குரு ஒருவருக்கு வழங்கப்படும் விசாவைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம்” என்றும் பனாகல உபதிஸ்ஸ தேரர் ரொய்டருக்குத் தெரிவித்துள்ளார்.
Post a Comment