எங்களுக்கு இரட்டை முகங்கள் கிடையாது - ஈரான் ஜனாதிபதி
ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் நோக்கில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய P5+1 நாடுகள் கடந்த 8 நாட்களாக ஸ்விட்சர்லாந்தின் லாஸன் நகரில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதற்கான கெடுக்காலம் முடிவடைந்த பின்னரும் இந்த பேச்சுவார்த்தையில் இன்று ஓரளவுக்கு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த சமரச திட்டத்தின்படி, புளுட்டோனியம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறைத்துக்கொள்ள ஈரான் சம்மதித்துள்ளது. புளுட்டோனியத்தை கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்பட்டு வந்த மையத்தை மூடவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானிடம் சுமார் 10 ஆயிரம் கிலோ குறைந்த வீரியம் கொண்ட யுரேனியம் தற்போது கையிருப்பாக உள்ளது. இதை இன்னும் 15 ஆண்டுகளுக்குள் வெறும் 300 கிலோவாக குறைத்துக் கொள்ளவும் ஈரான் முடிவு செய்துள்ளது.
25 ஆண்டுகள் வரை சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு நடுவர்கள் எந்நேரமும் ஈரானின் அணு உலைகளை பார்வையிடவும் ஈரான் அனுமதியளித்துள்ளது. இவை உள்பட பல்வேறு சாராம்சங்களை கொண்ட இறுதி உடன்படிக்கையை வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் P5+1 நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ள ஈரான் சம்மதித்துள்ளது.
ஈரானின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை விரைவில் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் உள்ளூர் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மக்களிடையே அந்நாட்டின் அதிபர் ஹஸன் ரவுகானி இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய தினம் ஈரானின் வரலாற்றில் சிறப்புக்குரிய ஒரு தினமாக அமையும். உலகத்தை எதிர்த்து நாம் போராட வேண்டும். அல்லது, உலக சக்திகளிடம் நாம் மண்டியிட வேண்டும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், இந்த இரு வழிகளை கடந்து மூன்றாவதாக ஒரு வழியும் உண்டு. அந்த வழியின்படி, உலகத்தோடு நாம் கூட்டுறவாக இருப்போம்.
ஈரான் தனது சொந்த மண்ணில் யுரேனியத்தை செறிவூட்டுவது இந்த பிராந்தியத்துக்கே அச்சுறுத்தல் என்று இதுவரை கூறி வந்த உலக சக்திகள், நாம் யுரேனியத்தை செறிவூட்டலாம் என்பதை இன்று ஏற்றுக் கொண்டுள்ளன.
நாங்கள் மோசடிக்காரர்கள் அல்ல; எங்களுக்கு இரட்டை முகங்கள் கிடையாது. நாங்கள் வாக்குறுதி அளித்து விட்டால், எங்கள் நடவடிக்கைகள் அந்த வாக்குறுதியை ஒட்டியே அமையும். அதேவேளையில், எதிர்தரப்பினர் தங்களது வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை பொருத்தும் எங்கள் நடவடிக்கைகள் அமையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment