மகனை பறக்கச்செய்யும் தந்தை..!
மரபணு கோளாறுகளால் உண்டாகும் மோசமான நோய்களில் முதன்மையானது டவுன் சிண்ட்ரோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்கும் திறனும் உடல்நலனும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்சும் அவரது மனைவி நிக்கியும், 2013 அக்டோபர் மாதத்தில் இந்த உலகிற்கு வந்த தங்கள் அன்பு மகன் வில், டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவன் என்பது தெரிந்த போது உடைந்துதான் போனார்கள். “அவன் மனம் எண்ணற்ற உணர்வுகளால் நிறைந்திருக்கும். அதில் பெரும்பாலான உணர்வுகள் எதிர்மறையானவை” என்று கூறிய லாரன்ஸ், தற்போது ”அவன் தன் குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுக்க வந்தவன்” என்று கூறும் அளவுக்கு மாறியிருக்கிறார். இந்த மாற்றத்திற்குக் காரணம் குட்டிப்பையன் வில்தான்.
அரிய நோயால் தாக்கப்பட்ட ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு தன்னாலும் தன் குடும்பத்தாலும் சிலவற்றை மட்டுமே சாதிக்க முடியும் என்றே தான் நினைத்திருந்ததாகவும், தன் மகன் வில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏராளமான கதவுகளைத் திறந்ததாகக் கூறுகிறார். முதலில் தன் மகனைப் புகைப்படம் எடுத்து அவன் பறப்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தை இல்யூஷனாக (மாயை தோற்றம்) வடிவவைத்து தனது வலைப்பூவிலும் (blog), இன்ஸ்டா கிராமில் அதை பதிவேற்றினார்.
அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து ’வில் கேன் ப்ளை’ (wil can fly) என்ற பெயரில் வேறு வேறு காட்சிகளில் வில் பறக்கும் புகைப்படத் தொகுப்பு ஒன்றை உருவாக்கினார். சிறு வயதில் வில் தான் பறப்பதாக பொய் சொல்வானாம். இவர்களும் ’ஆமாம்.. நீ பறக்கிறாய்..’ என்று அவனது பொய்யை உண்மையாக்குவார்களாம். லாரன்ஸ் எடுத்துள்ள புகைப்படத்தைப் பார்த்தால் வில் உண்மையிலேயே பறப்பதாக மற்றவர்கள் நம்பி விடுவார்கள். அனைத்தும் அவ்வளவு தத்ரூபமானவை.
டவுன் சிண்ட்ரோம் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே தன் வாழ்வின் லட்சியமாக வைத்திருக்கும் லாரன்ஸ் இந்த புகைப்படத் தொகுப்பை ஒரு காலண்டராக மாற்றி அதை விற்று வரும் பணத்தில் பாதியை, 2 டவுன் சிண்ட்ரோம் அறக்கட்டளைகளுக்கு தருவதாக முடிவெடுத்துள்ளார்.
18 மாதக் குழந்தையான வில்... இன்னும் அதிக உயரம் போவான்................
Post a Comment