Header Ads



சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதலில், யேமன் ஜனாதிபதி மாளிகை மீட்பு

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட அதிபரின் அரண்மனையை சவுதி கூட்டுப் படைகள் இன்று மீட்டுள்ளது. 

ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி, தலைநகர் சனாவிலிருந்து தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறு சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள் கடந்த 26-ம் தேதியில் இருந்து வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் கிளர்ச்சியாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் முகாம்கள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டன.

சவுதி தலைமையிலான இந்த விமானப்படை தாக்குதலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த ஆயுத கிடங்குகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஏடன் துறைமுகம் பகுதியில் முதன்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை கப்பல்படை மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், துறைமுக நகரமான ஏமனில் உள்ள அதிபரின் மாளிகையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றிக் கொண்டது. அதை மீட்பதற்காக உள்நாட்டு ராணுவத்துக்கு உதவியாக சவுதி தலைமயிலான போர் விமானங்கள் நேற்று தீவிர தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த தாக்குதலில் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாடி வசித்துவந்த அல் மாஷிக் அரண்மனை மீட்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை முற்றுகையிட்டிருந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பக்கத்து நகரமான கோர் மக்ஸர் என்ற இடத்துக்கு தப்பியோடி விட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமனில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 519 பேர் பலியானதாகவும், சுமார் 1700 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏமனில் உள்ள ஐ.நா. நிவாரண முகாம் தலைமை அதிகாரி வேலரி அமோஸ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.