Header Ads



தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காது போனால், அரசியல் புரட்சி ஏற்படும் - மகிந்தானந்த அளுத்கமகே

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு, சுதந்திரக் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காவிட்டால் மாற்று தீர்மானத்தை எடுக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தான் உட்பட சில உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காது போனால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சி ஒன்று ஏற்படும் எனவும் தவறான தீர்மானங்களை எடுத்தவர்கள் அதனை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெயர் குறிப்பிடாத சிலர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றால் அது ஜனநாயகமாக இருக்காது.

நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டோம். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தோம் என்பதற்காக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படாது போனால், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களை இணைத்து கொண்டு செய்ய முடிந்த சகலவற்றையும் செய்வோம்.

நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள். இதனால், நாங்கள் அந்த கட்சியின் ஊடாகவே போட்டியிடுவோம். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனக் கூறும் சிலர் கடந்த காலங்களில் தவறுகளை செய்து அரசு அபராதம் செலுத்தியவர்கள்.

எனினும் அவர்களின் பெயர்களை நான் குறிப்பிடப் போவதில்லை. அப்படியானவர்களும் இவ்வாறு பேசுவதற்கும் தார்மீக உரிமையில்லை. போட்டியிடும் வாய்ப்பு வழங்காவிட்டால் அன்று பார்த்து கொள்ளலாம்.

அப்படி நடந்தால், அது நாட்டுக்கு பெரும் பாதிப்பாக அமையும். அதன் பிரதிபலன்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும். யார் எப்படியான அழுத்தங்களை கொடுத்தாலும் நாங்கள் அரசியலில் ஈடுபவதை நிறுத்த போவதில்லை.

போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், மாற்று வழிகள் உள்ளன. ஒன்றை கூற விரும்புகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செல்ல முடியாது. அப்படி செல்ல போவதுமில்லை.

மகிந்த ராஜபக்சவுக்கு பணியாற்றியதன் காரணத்தினால், விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கின்றனர்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் மீதும் தாக்குதல் தொடுத்தனர். அவர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதால், கோப்பு கீழே சென்று விட்டது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.