Header Ads



''நீங்கள் குடும்பத்துடன் இணையும்வரை, உங்கள் பின்னால் இருப்போம்” மலாலா

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளுக்கு நோபல் பரிசு பெற்ற சிறுமி மலாலா ஆறுதல் கூறியுள்ளார்.  நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று மாணவிகளுக்கு அவர் ஊக்கம் அளித்துள்ளார்.

நைஜீரியாவில் போகோ ஹரம் , அரசுக்கு எதிராக  செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள், மாணவிகள்  ஆகியோரை கடத்தும் செயலிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  சிறுமிகள், பெண்கள் என இதுவரை 2000 பேரை  கடத்தியுள்ளனர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதியன்று, சிபோக் பகுதியில் உள்ள பள்ளியில் இறுதி தேர்வு எழுத சென்ற 200க்கும் மேற்பட்ட மாணவிகளை  கடத்தி சென்றனர். சில மாணவிகள் மட்டும் தப்பி வந்துள்ளனர். மற்றவர்களின் கதி என்ன என்பது குறித்து  எதுவும் தெரியவில்லை. அரசு போதிய நடவடிக்கை எடுத்தும் மாணவிகள் இதுவரை மீட்கப்படவில்லை. மாணவிகள் கடத்தப்பட்டதற்கு ஐநா சபை,  உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மாணவிகள் கடத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி,  மாணவிகள் நலமுடன் திரும்பிவர வேண்டி, நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மாணவிகள் கடத்தப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நோபல் பரிசு பெற்ற மலாலா. தலிபான்  தாக்குதலுக்கு ஆளான பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா, தற்போது பெண் குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுத்து  வருகிறார். நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் நலமுடன் திரும்பி வருவார்கள் என தெரிவித்துள்ள மலாலா, அவர்கள்  நம்பிக்கையை இழக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “ நாங்கள் எப்போதும் உங்களை மறக்கமாட்டோம்.  நீங்கள் குடும்பத்துடன் இணையும் வரை உங்கள் பின்னால் இருப்போம்” என கூறியுள்ளார். மேலும், மாணவிகள் மீட்பு நடவடிக்கைக்காக தனது அறக்கட்டளையின் சார்பில் நிதியுதவி செய்ய உள்ளதாக மலாலா தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.