Header Ads



மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அழிக்க முயற்சித்தால், அந்த சவாலை எதிர்நோக்கத் தயார் - சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அழிக்க முயற்சித்தால் அந்த சவாலை எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஸ அழிக்க முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முதல் தடவையாக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்பக்கப்பட்ட போது, பிரஜா உரிமை பறிக்கப்பட்ட பெண் ஒருவரை கட்சியின் தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடு முழுவதிலும் மஹிந்த கூட்டங்களை நடத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்துகின்றாரோ அதே போன்று கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு சிறிமாவோவை விரட்டியடிக்க முயற்சித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கவிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தம்மை வற்புறுத்திய போதிலும் ஜனநாயக ரீதியில் தாம் நடந்து கொண்டதாகவம், மஹிந்த ராஜபக்ஸவை கையில் பிடித்துக் கொண்டு சென்று பதவியில் அமர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸக்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் சாட்சியங்கள் நிரூபிக்கும் வரையில் காத்திருப்பதாகவும் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் ஓய்வு பெற்றுக ;கொண்டதன் பின்னர் நடந்து கொண்டதனைப் போன்று மஹிந்த ராஜபக்ஸவும் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாம் ஆட்சி செய்த காலத்தில் 283 பேராக இருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணியாளர் எண்ணிக்கை 1600 பேராக உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த, அவரது சகோதரர்கள், மகன்மார், மனைவி, மனைவியின் உறவினர்கள் மற்றும் ஏனைய நண்பர்கள் உறவினர்கள் ஆட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தோல்வியைத் தழுவினால் ஒரமாக சென்று ஒய்வு எடுக்க வேண்டுமே தவிர, நாட்டை அழிக்க முயற்சிக்கக் கூடாது என சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.