Header Ads



20 ஆவது திருத்தம் (தேர்தல் மறுசீரமைப்பு) வர்த்தமானியில் நாளை வெளியீடு

தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு நாளை வர்த்தமானியில் வெளியிடப்படவிருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் எம்.பி தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கம் தங்களுக்கு அறிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலத்தில் உள்ள பல அம்சங்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து ரைக்கையில்,

19வது திருத்தச்சட்டமூலத்தை குழப்ப எதிர்த்தரப்பு முயல்வதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அரசாங்கம் தாம் நினைத்தவாறு அதில் மாற்றங்கள் செய்து வருகிறது. அதன் முழுமையான திருத்தச்சட்டமூலம் இன்றுதான் எமக்குக் கிடைத்தது.

அது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திலுள்ள விடயங்களில் பல மாற்றப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதியால் கலைக்க முடியும். இதன்படி அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலோ நிதிச் சட்டமூலமொன்று தோற்கடிக்கப்பட்டாலோ கூட அரசாங்கத்தை கலைக்க முடியாது.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பேச்சுவார்தைகளையடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி 19வது திருத்தச்சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.